டெல்லி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐக்கு உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ள விவகாரம் தமிழக அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து சி.பி.ஐ விசாரிக்க கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி சசிகலா புஷ்பா கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து சசிகலா புஷ்பா அளித்தார்.
அடுத்ததாக, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தார்.
ராஜ்நாத்சிங் பரிந்துரை
இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் மனுவை தற்போது பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு அனுப்பி இருக்கிறார் ராஜ்நாத் சிங். இது தொடர்பான முதல்கட்ட விசாரணைய மேற்கொள்ளுமாறு, கடிதத்தை பரிந்துரைத்துள்ளார். முதல்கட்ட விசாரணையின்போது, சந்தேகம் எழுந்தால், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடலாம் எனவும், ராஜ்நாத் சிங் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதிர்ச்சியான சசிகலா
சி.பி.ஐயின் நிர்வாக அமைப்புதான் பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை என்பது இதில் கவனிக்கத்தக்கது. ராஜ்நாத்சிங் உத்தரவு குறித்த தகவல் சமீபத்தில், கட்சி நிர்வாகிகளை சந்திக்க அதிமுக அலுவலகத்திற்கு வந்தபோது சசிகலா கவனத்திற்கு சென்றுள்ளது. அவரது உறவினர் ஒருவர், இந்த தகவலை சசிகலாவிடம் கொண்டு சேர்த்தாராம். இதனால், அவசரமாக சசிகலா வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டாராம்.
நெருக்கடிகள்
அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட அதே நாளில், உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த நீதிபதி வைத்தியநாதன், தனக்கும் இதில் சந்தேகம் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சி.பி.ஐ விசாரணைக்கான பரிந்துரையும் சேர்ந்து கொண்டு சசிகலா தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன. ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு எப்போது வருமோ என்ற டென்ஷனில் இருக்கும் சசிகலாவுக்கு இது கூடுதல் தலைவலியை ஏற்படுத்திவிட்டதாம்.
ஆதாரங்கள் ரெடி
இதனிடையே, ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கும்போது சில ஆதாரங்களை வழங்க திட்டமிட்டிருக்கிறாராம் சசிகலா புஷ்பா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் நடந்த விவரங்களை ஆவணமாகத் தொகுத்தும் வைத்துள்ளாராம். சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது, இந்த ஆதாரங்களை அவர் வழங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது கணவரை அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து தாக்கியவர்களை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என சூளுரைத்துள்ளாராம், சசிகலா புஷ்பா.
No comments
Post a Comment