Latest News

January 06, 2017

ரஷ்யாவின் தலையீட்டை உறுதி செய்தது அமெரிக்க உளவு துறை
by admin - 0

அமெரிக்க அதிபர் தேர்தலில் இணைய ஊடுருவல்களில் ஈடுபட்டதாக ரஷ்யா குற்றஞ்சாட்டப்படுவதை விளக்குவதற்கு அமெரிக்க உளவு துறையின் தலைவர் உறுதி அளித்திருக்கிறார்.


 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியின் மின்னஞ்சல்களை அதனுடைய வலைதளத்தில் திருட்டுத்தனமாக புகுந்து திருட ஆணையிட்டர் என்பதையும், அற்கான நோக்கத்தையும் அடுத்தவாரம் வெளியிடப் போவதாக அமெரிக்க தேசிய உளவு துறை தலைவர் ஜேம்ஸ் கிளாப்பர் கூறியிருக்கிறார். 

இந்த விடயத்தில் தாங்கள் ஈடுபடவில்லை என்று ரஷ்யா மறுத்துள்ளது. ஆனால். ரஷ்ய அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை விதித்திருக்கிறது. 

அமெரிக்க தேர்தல்களில் வெளிநாடுகளின் தலையீடு இருந்ததற்கான அறிக்கை வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் வழங்கப்பட்டது. 

அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பிற்கு இந்த விடயம் பற்றி இன்று வெள்ளிக்கிழமை விளக்கப்பட இருக்கிறது. இதனுடைய வகைப்படுத்தப்படாத பதிப்பு அடுத்த வாரம் பொது மக்களுக்கு வெளியிடப்படும்.

இத்தகைய வெளிநாட்டு தலையீடு பற்றி அமெரிக்காவின் உயர்நிலை உளவு துறை அதிகாரிகள் செனட் ஆயுத சேவை குழுவிற்கு வியாழக்கிழமை சாட்சியம் அளித்தனர். 

அவர்களுடைய கூற்றுபடி, ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டனை குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் தோற்கடிக்க மாஸ்கோ உதவியதாக குறிப்பிடப்படுகிறது.

"விளாடிமிர் புதின் மீது நோக்கம் கற்பிக்கிறீர்களா? என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்தற்கு கிளாப்பர் "ஆம்." என்று பதிலளித்திருக்கிறார். 

மரபு வழி பரப்புரை, தவறான தகவல்கள் மற்றும் போலியான செய்திகளை கொண்ட பன்முக பரப்புரையாக ரஷ்யாவின் முயற்சி அமைந்ததாக கிளாப்பர் விவரித்திருக்கிறார். 

அமெரிக்க நலன்களுக்கு பரவலான வகையில் பெரும் அச்சுறுத்தல் விளைவிக்கின்ற உயர் தொழில்நுட்ப இணைய நுட்பத்தை ரஷ்யா கொண்டிருப்பதாக இந்த விசாரணைக்கு தயாரிக்கப்பட்ட கூட்டு அறிக்கையில் அமெரிக்க அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

"இணைய செயல்பாடுகளில் அதிநவீன முறையில் இயங்கும் ரஷ்யா, அமெரிக்க அரசு, ராஜ்ய உறவு, வணிகம் மற்றும் முக்கிய உள்கட்டுமானங்களில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது"" என்று இந்த கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. 

இந்த அறிக்கையானது கிளாப்பர், உளவு துறை பாதுகாப்பின் துணைச் செயலாளர் மர்செல் லிட்ரி மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் இயக்குநர் அட்மிரல் மைக்கேல் ரோஜஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை கேள்விக்கு உட்படுத்துவதற்கு இந்த அமர்வு இல்லை என்பதை இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னால், செனட் அவை உறுப்பினர் மெக்கைன் நினைவூட்டினார்.

வாக்கு எண்ணிக்கை அல்லது அது போன்றவற்றை மாற்றியதாக எங்களால் கூற முடியவில்லை என்று ரஷ்யாவின் இந்த உளவுதுறை நடவடிக்கை பற்றி தெரிவித்திருக்கும் கிளாப்பர், ரஷியர்கள் இதற்கு பன்முக நோக்கங்களை கொண்டு செயல்பட்டிருக்கலாம் என்று கூறியிருக்கிறார். 

"இதனால் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட தாக்கங்கள் பற்றி நாங்கள் அளவிடவில்லை"

இதுவொரு போர் நடவடிக்கையா? என்று மெக்கைன் கேட்டபோது. "உளவு துறை செய்யக்கூடாத மிகவும் மோசமான கொள்கை செயல்பாடு என்று நான் எண்ணுகிறேன்" என்று கிளாப்பர் தெரிவித்திருக்கிறார். 

ஆனால், அமெரிக்க தேர்தல் நடைமுறையில் ரஷ்யா தலையிட்டு, தான் வெற்றியடை துணைபுரிந்ததாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டை அமெரிக்க அதிபராக தேர்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து நிராகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் தொடர்பு இருந்ததாக உளவு துறை தெரிவிப்பதற்கு முன்பு வரை, தான் உளவு துறையின் மிக பெரிய ரசிகராக விளங்கியதாக டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்திருக்கிறார். 

வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை, வலையமைப்பில் புகுந்து திருடுவது தொடர்பாக தகவல்கள் வெளியிடுவேன் என்று கடந்த வாரம் டிரம்ப் தெரிவித்திருந்த நிலையில் இந்த வாரம் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.


இது தொடர்பாக, 35 ரஷ்ய ராஜீய அதிகாரிகளை அமெரிக்காவில் இருந்து வெளியேற்றியிருக்கும் ஒபாமா நிர்வாகம், ரஷ்ய உளவு துறையால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு வளாகங்களை மூடியிருக்கிறது.

தன்னுடைய பதில் நடவடிக்கையாக ஒபாமா போதியளவு செயல்படவில்லை என்று செனட் அவை உறுப்பினர் வின்ட்சே கிரஹாம் தெரிவித்திருக்கிறார். 

"பஞ்சு உருண்டைகளை எறிகின்ற தருணம் இதுவல்ல. கற்களை எறிய வேண்டிய தருணம் இதுவாகும்" என்று அவர் கூறியிருக்கிறார். 

இந்நிலையில், கிளாப்பருக்கு பதிலாக உளவு துறை இயக்குநராக முன்னாள் இந்தியானா செனட் அவை உறுப்பினர் டான் கோட்ஸ் நியமிக்கப்படுவார் என்ற அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பின் அணியினர் அமெரிக்க ஊடகங்களிடம் தெரிவித்திருக்கின்றனர். 

« PREV
NEXT »

No comments