Latest News

December 27, 2016

கடமை நிறைவேற்று அதிபர்கள் விடயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொறுப்பற்ற அறிக்கை
by admin - 0

கடமை நிறைவேற்று அதிபர்களாக நீண்ட காலம் சேவையாற்றியவர்களை வடமாகாணக் கல்வி அமைச்சர் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தியதாகக் கூறும் தென்னிலங்கையைச் சேர்ந்த இலங்கை ஆசிரியர் சங்கம் வடமாகாணத்தில் ஆசிரியர்களுக்குக் காணப்படும் பல்வேறுபட்ட பிரச்சினைகளைக் கருத்திற்கொள்ளாது இவ்விடயத்தில் ஏதோ உள்நோக்கம் கருதிச் செயற்படுகின்றதா என்ற பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.

வடமாகாணத்தில் கடமை நிறைவேற்று அதிபர்களாகச் சேவையாற்றுபவர்களை வடமாகாணக் கல்வி அமைச்சர் தனது வரட்டுச் செயற்பாடுகளுக்காகத் தூண்டிவிட்டுப் போராட்டம் நடத்தியுள்ளார் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் தெரிவித்துள்ளார். இவர் தென்னிலங்கையில் இருந்து செயற்படுவதால் தென்னிலங்கை அரசியல்வாதிகள் பேசுவது போலவும் தென்னிலங்கையிலுள்ள சகல வளங்கள், வசதிவாய்ப்புக்கள் வடமாகாணத்தில் இருந்தன, இருக்கின்றன என்ற எண்ணத்துடன் பேசுகின்றார்.

வடமாகாணம் என்றால் யாழ்ப்பாணத்திற்கும் வவுனியாவுக்கும் மட்டும் சென்று விட்டு அங்குள்ள நிலைமைகள்தான் வடமாகாணத்தின் நிலைமைகள் என முடிவெடுத்துவிட்டுப் பேசுபவர்கள்தான் தென்னிலங்கையைச் சேர்ந்த பலர் இப்போதும் உள்ளார்கள். வடமாகாணத்தில் யுத்தத்தால் எல்லாவகையிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் போன்ற பகுதிகளை இப்படியானவர்கள் சிறிதளவும் கருத்திற்கொள்வதில்லை. ஆனாலும் அவ்வப்போது தமக்கேற்றவகையில் இப்பகுதிகளைப் பற்றியும் பட்டும்படாமலும் கண்துடைப்புக்காக கூறி வருவார்கள். 

அதிபர்கள் இல்லாத குறையைப் போக்கி நீண்ட காலமாக அதிபர்களாகச் சேவையாற்றி பாடசாலைகளை இயக்கி வந்த கடமை நிறைவேற்று அதிபர்களை உடனடியாகத் தூக்கி எறிய வேண்டும்! அவர்கள் அரசியல் செல்வாக்குடன் கடமை நிறைவேற்று அதிபர்களாக நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் அரசியல்வாதிகளின் காலைப் பிடித்து வந்தவர்கள் என இலங்கை ஆசிரியர் சங்கம் பொறுப்பற்ற விதத்தில் தன்னிச்சையாகக் கூறி அறிக்கை விட்டுள்ளமை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

கஸ்டப் பிரதேசங்களில் அதிபர்கள் இல்லாத போது பாடசாலைகளை இயக்க முடியாத நிலை காணப்பட்ட வேளை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் கல்வி அமைச்சின் அனுமதியுடன் பாடசாலைகளைக் கொண்டு நடத்துவதற்காக நியமிக்கப்பட்டவர்கள்தான் இந்தக் கடமை நிறைவேற்று அதிபர்கள் என்பதைத் துளியளவும் கருத்திற்கொள்ளாத இலங்கை ஆசிரியர் சங்கம் அவர்களை அரசியலுக்காக அரசியல்வாதிகள் நியமித்தார்கள் என்று சொல்வது என்ன வகையில் நியாயமாகும் என்ற கேள்வி எழுகின்றது.

வடமாகாணத்தின் கஸ்டப் பிரதேசங்கள் அதிகம் காணப்படும் பலருக்கு இன்னும் தெரியாத வன்னிப் பகுதிப் பாடசாலைகள் பலவற்றில் அதிபர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்பட்டது. இந்த நிலைக்கு அப்போதும் தற்போதும் வடமாகாணக் கல்வி அமைச்சு பொறுப்பல்ல இதற்கு முழுப்பொறுப்பும் தென்னிலங்கையைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சுதான் என்பதை இவர்கள் அறிவார்களா? 

கடமை நிறைவேற்று அதிபர்கள் என்ற பிரச்சினைக்கே இலங்கையின் மத்திய கல்வி அமைச்சுதான் முழுக் காரணம் என்பதைக் கருத்திற் கொண்டு அவர்களை முதலில் சரியான முடிவெடுக்க, பிரச்சினைக்குத் தீர்வு காண வையுங்கள்.

கடமை நிறைவேற்று அதிபர்களாகவுள்ளவர்களை நீண்ட காலமாக அதிபர்களாகச் சேவையாற்ற வைத்து விட்டு உளவியல், சமூகம், மனிதாபிமானம் பற்றிச் சிறிதளவும் சிந்திக்காமல் அவர்களை ஆசிரியர்களாகச் சென்று கல்வி கற்பியுங்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயமாகும்? இது கல்விச் சமூகத்திற்கு ஏற்ற செயல்தானா? இப்படித்தானா கல்வி இருக்க வேண்டும்? கல்வி என்பது எதற்கானது என்பதை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும் (கல்வி பற்றிப் பரந்த நோக்கில் சிந்தியுங்கள்)
பரீட்சையில் சித்தியடைந்த புதிய அதிபர்களுக்கு பாடசாலைகள் வழங்கப்பட்டு அவர்ளை அதிபர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. 

வடமாகாணக் கல்வி அமைச்சர் செய்வதெல்லாம் சரியென இங்கு நிறுவ முன்வரவில்லை. அவரது, அவர் சார்ந்த பல செயற்பாடுகளில் பல முறைகேடுகளும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்களும் பல உள்ளன.
வடமாகாணக் கல்வி அமைச்சர் ஒன்றைச் சொல்ல வடமாகாணக் கல்வி அமைச்சுச் செயலகம் இன்னொன்றைச் செய்யும். வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலகத்திற்கும் பாரிய இடைவெளி நிலவுகின்றது என்பது வெளிப்படையாகச் தெரிகின்றது. இதனால் இவர்கள் ஒன்றுபட்ட நிலையில் முடிவெடுக்க முடியாத நிலையில் காணப்படுகின்றார்கள். அண்மையில் இடம்பெற்ற வடமாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாற்றக் கடிதங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் அந்த இடமாற்றங்களை இரத்துச் செய்து 2017 ஏப்ரல் வரை நீடிப்பதாக முடிவெடுக்கப்பட்டு அனைவரையும் குழப்பியமை இதற்கு ஒரு சிறு எடுத்துக் காட்டாகும்.
இதே போல ஆசிரியர்களுக்கு வடமாகாணத்தில் இடமாற்றங்கள் வழங்கப்படும் போது தமக்கு வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற அடிப்படையில் அவரும் கல்வி அமைச்சு சார்ந்த உயரதிகாரிகளும் செயற்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், சு.சுகிர்தன், அனந்தி சசிதரன் போன்றோர் வடமாகாண சபையில் கல்வி அமைச்சு தொடர்பான அமர்வின் போது பகிரங்கமாகவே குற்றம் சுமத்தியிருந்தார்கள்.

இலங்கையில் ஆசிரியர்கள், அதிபர்களுக்காகக் குரல்கொடுப்பதற்காகவெனத் தோற்றுவிக்கப்பட்ட தொழிற்சங்கம் ஒரு விடயத்தைப் பற்றித் தீர ஆராயாமல் ஒருபக்கம் சார்ந்த நிலையில் ஆதாரங்கள் ஏதுமற்ற நிலையில் பாதிக்கப்பட்;டவர்களாகவுள்ள கடமை நிறைவேற்று அதிபர்களை வடமாகாணக் கல்வி அமைச்சரின் தூண்டுதலுக்கிணங்கப் போராட்டம் நடத்தினார்கள், அவர்கள் அரசியல் செல்வாக்குடன் நியமிக்கப்பட்டவர்கள் என்று பொறுப்பற்ற விதத்தில் அறிக்கை விடுவதன் நோக்கம்தான்  என்ன?
-எஸ்.சுரேன்-
« PREV
NEXT »

No comments