Latest News

December 16, 2016

சிங்களத்தின் பொருளாதாரத்தடையும் எம் மக்களின் ஜாம் போத்தல் விளக்கும்.!
by admin - 0

சிங்களத்தின் பொருளாதாரத்தடையும் எம் மக்களின் ஜாம் போத்தல் விளக்கும்.!
 
இரண்டாம் கட்ட ஈழப்போர் 1990இல் மீண்டும் ஆரம்பித்த போது, புலிகளையும் மக்களையும் அடிபணியவைக்கும் நோக்கில், பெரும் பொருளாதாரத்தடையை, எமக்கு எதிராக சிங்களம் விதித்தது.

உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம், வாகனங்கள் அதன் உதிரிப்பாகங்கள், பற்றரிகள் என எதுவும் மிச்சமின்றி தடை செய்தது சிங்கள அரசு.!

இதன் மூலம் மக்களையும், புலிகளையும் அடிபணிய வைக்கமுடியுமென சிங்களம் தப்புக்கணக்கு போட்டது.

ஒரேநாளில் தமிழர் பிரதேசமெங்கும் இருளில் மூழ்கியது. பெரும் உணவுத்தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. புலிகளும், மக்களும் இந்த பொருளாதாரத்தடைக்கு அடிபணியாது, இந்தத்தடைக்கு முகம்கொடுக்க ஆயத்தமாகினர்.

தலைவரின் நேரடிப்பணிப்பின் பேரில், பணப்பயிர்களுக்கு தடைவிதித்து, உணவுப்பயிர்களின் உற்பத்தியை விரிவுபடுத்தினர். அதன் மூலம் மக்களின் உணவுத்தேவையை விரைவிலேயே பூர்த்திசெய்து, பட்டினிச்சாவைத் தவிர்த்தனர் புலிகள்.!

இந்த உலகில் பல போர்களை பல, நாடுகள் சந்தித்த போது, பட்டினிச்சாவென்பது அவர்களுக்கு தவிர்க்கமுடியாததாகவே இருந்தது. 30வருடங்களுக்கு மேற்பட்ட எமது ஆயுதப்போராட்ட வரலாற்றில், எமது தாயகத்தில் மட்டுமே பட்டினிச்சாவென்பது நிகழவில்லை.

இதற்கு தலைவரின் தீர்க்கதரிசனத்துடன் கூடிய உணவு உற்பத்தியே என்றால், அது மிகையாகாது.

இது போலவே தான், வாகனங்களுக்கான டீசலுக்கு பதிலாக மரக்கறி எண்ணையும், பெட்ரோக்குக்கு பதிலாக மண்ணெண்ணையை பயன்படுத்தி, புலிகளும், மக்களும் வாகனங்களை இயக்கினர்.

சவற்காரத்துக்கு பதிலாக பனம்பழத்தையும், சாம்பலையும் கொண்டே உடைகளைத் துவைத்தனர். அதுபோலவே தான் மின்சாரத்துக்கு, சைக்கிள் டைனமோவைக்கொண்டு, அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் கிடைத்த மின்சாரத்தில், தங்கள் வானொலிப்பெட்டியை இயக்கி பாடல்களைக்கேட்டனர்.

ஆரம்பத்தில் தங்கத்துக்கு நிகரான விலையில் மண்ணெண்ணை விற்றபோது, சிக்கன விளக்கு ஒன்றை எம் மக்கள் உருவாக்கினர்.

ஒரு ஜாம் போத்தலினுள் சிறிது பஞ்சைப்போட்டு, அதில் சிறிதளவு (5ML போதும்) எண்ணையை விட்டு, அது பஞ்சில் ஊறியதும், திரி ஒன்றை பஞ்சில் முட்டவைத்து, அதன் மூலம் கடத்தப்படும் எண்ணையில் எரியுமாறு வடிவமைத்து, இந்த விளக்கை எமது மக்கள் எரித்தனர்.

சிறிய தொழில்நுட்பம் என்றபோதும், அன்று அது எமக்கு பெரிய பலனைத் தந்தது. இப்படித்தான் அன்று எம் மக்கள் சிங்களத்தின் பொருளாதாரத்தடைக்கு மத்தியில் வாழ்ந்தார்கள். அல்லது அதை எதிர்கொண்டார்கள்.!

இன்று சில நிமிடங்கள் மின்சாரம் தடைப்பட்டால், தடுமாறிப்போகும் நிலையிலேயே நாம் வாழ்கின்றோம். ஆனால், அன்று பலவருடங்களாக மின்சாரம் இல்லாது, அதற்குள் வாழப்பழகி, வாழ்ந்து இந்த போராட்டத்தை தாங்கி நின்றனர் எம் மக்கள்.!

இந்தத் தடைகள் அனைத்தையும் தகர்த்து, அதற்கு மாற்று வழிகளை உருவாக்கவைத்து , எமது போராட்டத்தை மாபெரும் சக்தியாக வளர்த்த, தலைவரின் ஆளுமை வியப்புக்குரியது.!

கடைசிவரை எம் மக்களுடன் கூடவே பயணித்த ஒரு விளக்கு. எமது போராட்டத்தின் நம்பிக்கை குறியீடாக அன்று எமக்கிருந்தது இந்த விளக்கு.!

இது இன்னும் எவ்வளவு பேருக்கு நினைவிருக்கின்றதோ தெரியவில்லை?

எமது விடுதலைப்போராட்டத்திற்காக எமது மக்கள் உயிர், உடமைகளை மட்டும் இழக்கவில்லை, தங்கள் இளமைக்கால கனவுகளையும் இழந்து தான் போராடினர்.!
அதற்கும் இந்த விளக்கே சாட்சி.!

இந்த படத்தை பார்த்தபோது, இனம் புரியாத ஏக்கம் ஒன்று, மனத்தைச்சுற்றி சூழ்வதை என்னால் தடுக்கமுடியவில்லை.!

நினைவுகளுடன்
ஈழத்து துரோணர்
« PREV
NEXT »

No comments