Latest News

December 21, 2016

உலகத் தமிழர் வரலாற்று மையம்(தலைமைச்செயலகம்) என்ற பெயரில் தேசத்தின் குரல் அவர்களின் அஸ்தி தொடர்பான தகவல்களை மறுத்து அடேல் பாலசிங்கம் அவர்கள் ஊடக அறிக்கை
by admin - 0

இலண்டன், ஐக்கிய இராச்சியம்
20 மார்கழி 2016
ஊடக அறிக்கை

எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
எனது அன்புக் கணவர் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் அஸ்தி தம் வசம் இருப்பதாக உலகத் தமிழர் வரலாற்று மையம் அல்லது ‘தலைமைச் செயலகம்’ என்ற பெயரில் இயங்கும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உரிமை கோரியிருப்பது சமீபத்தில் எனது கவனத்திற்கு வந்துள்ளது.

அத்தோடு அவரது அஸ்தியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் பேழையை இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட இடம் ஒன்றில் விதைத்து (புதைத்து), அங்கு அவருக்கான நினைவுத் தூபி ஒன்றைக் கட்டப் போவதாகவும் அந்நபர்கள் அறிவித்துள்ளார்கள். இவ்வாறான உரிமை கோரல்களும், திட்டங்களும் எனக்கு ஆழமான மன உளைச்சலையும், கவலையையும் அளிக்கின்றன.

முதலாவதாக, இவ் அமைப்பினரின் கைகளுக்கு இந்தப் பேழை எவ்வாறு கிட்டியது என்பது பற்றி எந்த விதமான கதைகள் உலாவினாலும், இவர்களின் வசம் உள்ள பேழையில் எனது கணவரின் அஸ்தி இருப்பதாக இவர்கள் மேற்கொள்ளும் உரிமை கோரலை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன். 

எனது கணவரின் அஸ்தி அவரது ஈம நிகழ்வு நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னர் என்னிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, அதனை அவரது விருப்பத்திற்கு இணங்க பூ மஞ்சங்களின் நடுவேயும், விசாலமான முதிர்ந்த மரங்களின் கீழேயும், மென்மையாக விரிந்தோடும் அருவியிலும், அணில்கள் விளையாடி மகிழ்வுறும் மரங்களின் உதிர்ந்த இலைகளிடையேயும் சங்கமிக்க வைத்தேன்.

தனது அஸ்தி எங்கிருக்க வேண்டும் என்று எனது கணவர் விரும்பினாரோ, அங்கு அது துயில்கின்றது: அவர் ஆழ்ந்த காதல் கொண்டிருந்த இயற்கையான சுற்றுச்சூழலோடு அது ஒன்றித்து அமைதி பூண்டுள்ளது. இதனையொட்டியுள்ள அடுத்த விடயம் பின்வருமாறு.
 

தனது ஈமக் கிரியைகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்று எனது கணவர் விரும்பினார் என்பதை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, தம்மிடம் அவரது அஸ்தியைக் கொண்ட பேழை இருப்பதாக இந்நபர்கள் கூறிக் கொள்வதற்கு காரணமாக இருந்த செய்கைகளும், என்னிடம் எவ்வித ஆலோசனைகளையும் மேற்கொள்ளாமல் இப்பொழுது இந்நபர்களால் மேற்கொள்ளப்படும் உரிமை கோரல்களும், வெளியிடப்படும் திட்டங்களும் என்னை மிக மோசமாக நோகடித்திருப்பதோடு, ஒருவரின் மரணம் தொடர்பிலான சமூக ஒழுங்குமுறைகளில் பேணப்படும் நாகரீக நடத்தைக்கான பண்பியல்புகளுக்கு முரணாகவும் உள்ளன.

எனது கணவரின் அஸ்தியை வைத்திருப்பதற்கும், கையாள்வதற்குமான உரிமை எனது கணவரின் ஒரேயொரு உரித்துனராகிய எனக்கு மட்டும் உள்ளதே தவிர, அவ் உரிமை வேறு எவருக்கும், அவர்கள் எவராக இருந்தாலும், எந்தவிதமான அதிகார நிலைகளில் அமர்ந்திருந்தவர்களாக அல்லது அமர்ந்திருப்பவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு கிடையாது; அதுதான் நாகரீகமான நடத்தைக்கான பண்பியல்பாகும்.

பாலசிங்கம் அவர்களின் நினைவாக ஒரு கற்தூபி கட்டப்பட வேண்டும் என்று எவராவது பரிந்துரை செய்வதென்பது அவரது கொள்கையைக் காலில் போட்டு மிதிக்கும் செயல் என்பதோடு, அதனிலும் அதிர்ச்சியூட்டுவதும், மன உளைச்சலை அளிப்பதும், வேடிக்கையானதும் அவருக்கான நினைவுத் தூபி இங்கிலாந்தில் கட்டப்பட வேண்டும் என்று கூறப்படுவதுதான்.

இந்த வகையில் இவ்வாறான திட்டங்களைக் கொண்டிருப்பவர்கள் பாலசிங்கம் அவர்களின் நினைவுகளைக் கேலிக்கூத்தாக சிறுமைப்படுத்தியுள்ளார்கள் என்பேன். 

பாலசிங்கம் அவர்களின் அஸ்திப் பேழை தம் வசம் இருப்பதாக உரிமை கோரியவாறு அவருக்கு நினைவுத் தூபியைக் கட்டப் போவதாகக் கூறுபவர்கள், அவர் தனது வாழ்க்கையை அணுகிய விதத்திற்கும், அவரது தனிமனித தத்துவத்திற்கும் முரணாக நடந்து கொள்ளாது, அந்த மனிதனைப் பற்றியும், அவர் எவ்வாறான கொள்கையுடன் வாழ்ந்தார் என்பதைப் பற்றியும் ஆழமாக சிந்தித்து, கடின உழைப்பின் மூலம் மக்கள் வழங்கிய பணத்தை உயிரற்ற, உறைந்து போன கற்களில் செலவழிக்காது, தமது கரிசனைகளை அவதியுறும் தமிழீழ மக்களின் தேவைகளுக்காகவும், அவர்களின் வாழ்வுக்காகவும் செலவிடுவதே பொருத்தமானது.

கடந்து போன மூன்று தசாப்தங்களில் பிரபாகரனுடன் நான் பேணிய உறவின் பொழுது எவ்வாறு எனது கருத்துக்களையும், விருப்பங்களையும் அவர் மதித்து நடந்தாரோ, அவ்வாறே இப்பொழுதும் அவர் நடந்திருப்பார் என்று நான் திடமாக நம்புகின்றேன். எனது கணவர் மரணமுற்றதன் பின்னரான கடந்த பத்தாண்டுகளில் அவர் மீது ஆழமான மதிப்பையும், அன்பையும் தமிழீழத்தின் பெரும்பான்மையான மக்கள் கொண்டிருப்பதையிட்டு நான் நன்றிகூறுகின்றேன்.

அதேநேரத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உண்மையான, அதிகாரபூர்வ பிரதிநிதிகள் என்றும், பேச்சாளர்கள் என்றும் தான்தோன்றித்தனமாக உரிமை கோருபவர்களைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாது, அவர்களை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகுமாறு உங்களை நான் வேண்டிக் கொள்கின்றேன். எனது கணவரின் அஸ்தி என்று கூறப்படும் ஒன்று தம்மிடம் இருப்பதாக கூறுபவர்கள், அது விடயத்தில் தமக்கு அதிகாரமும், நியாயமும் இருப்பதாக உரிமை கோருவதையும், அவர்கள் எடுக்கக்கூடிய முடிவுகளையும் நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்.

இறுதியாக உங்கள் அனைவரும் எனது அன்பையும், பண்டிகைக் கால வாழ்த்துக்களையும் உரித்தாக்குவதோடு, வரும் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்வாகவும், ஆக்கபூர்வமாகவும் அமைய வாழ்த்துகின்றேன்.

உங்கள் உண்மையுள்ள,
அடேல் பாலசிங்கம்.

 

 

 

 
« PREV
NEXT »

No comments