மாவீரர் நாள் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில்! உணர்வெழுச்சி கொண்ட உறவுகள்...!!!

தமிழர்களின் விடுதலைக்காக தம்மையே கொடையாக்கிய மாவீரர்களை உணர்வெழுச்சியாக நினைவுகூரும் மாவீரர் நாள் நவம்பர்-27 நாளைய தினம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் உணர்வெழுச்சியாக நடைபெறவுள்ளன. அதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி மக்களும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் இணைந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.

கடந்த 2008 ஆண்டு தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் இறுதியாக மாவீரர்களுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மிகவும் உணர்வெழுச்சியாகக் கடைப்பிடிக்கப்பட்டதன் பின்னர் அரச படைகளால் மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் சிதை;தழிக்கப்பட்டு மாவீரர் துயிலும் இல்லங்களுக்குள் மக்கள் போக முடியாதவாறு முள்வேலிகளால் அடைக்கப்பட்டு அதற்குள் இராணுவத்தினர் முகாம் அமைத்துத் தங்கியிருந்தார்கள். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் சில மாவீரர் துயிலும் இல்லங்களிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் எப்போது எமது உறவுகளின் கல்லறைகளில் சுடர் ஏற்றி அவர்களை நினைவுகூருவோம் என காத்திருந்த மாவீரர்களின் உறவுகள் கடந்த வெள்ளிக் கிழமை (25.11.2016) காலை 6.30 மணியளவில் மாவீரர் துயிலும் இல்லங்களின் முன் ஒன்று கூடி மாவீரர் துயிலும் இல்லங்களில் காணப்பட்ட பற்றைகளை அகற்றி துப்புரவாக்கும் சிரமதானப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள். தமது உறவுகளை நினைவுகூருவதற்காக எழுச்சி கொண்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச மட்ட அமைப்பாளர்கள் உட்பட்ட அனைவரையும் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை தலைமையில் மக்களுடன் கூட இருந்து மாவீரர் துயிலும் இல்லங்களை துப்புரவு பணி செய்ய ஒழுங்கமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நீண்ட காலத்தின் பின்னர் கிளிநொச்சி மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர்களுக்கு உறவுகள் நாளைய தினம் (27.112016) சுடர் ஏற்றி மலர் மாலை அணிந்து மிகவும் உணர்வெழுச்சியாக நினைவுகூர்வதற்காகத் தயாராகி வருகின்றார்கள்.
கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் நவம்பர்-27 வரும் போதெல்லாம் தமது இல்லங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி தமது உறவுகளை நனைவுகூர்ந்த மக்கள் தாம் எப்போது தமது உறவுகளின் கல்லறைகள் உள்ள இடங்களில் அவர்களுக்கான சுடர்களை ஏற்றி அவர்களை நினைவுகூரவுள்ளோம்! என்ற ஏக்கத்துடனும் குமுறலுடனும் காணப்பட்டார்கள். இந்நிலையில் நாளைய தினம் கிளிநொச்சியிலுள்ள கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறுள்ளமை மாவீரர்களின் உறவுகள் மத்தியில் தமது உறவுகளின் கல்லறைகள் உள்ள இடங்களில் சுடர் ஏற்றவுள்ளோம், அவர்களின் கல்லறைகள் இருந்த இடங்களைத் தரிசிக்கவுள்ளோம் என்ற உணர்வெழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய தினம் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லம் ஆகியவற்றில் மாலை 6.05 மணியளவில் மாவீரர்களின் உறவுகளால் சுடர்கள் ஏற்றப்பட்டு மணியோசை எழுப்பப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியாக நடைபெறவுள்ளன. இதற்காக மாவீரர்களின் உறவுகளும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் தயாராகி வருகின்றார்கள்.
No comments
Post a Comment