Latest News

November 27, 2016

கடவுள்களான கல்லறைகள்..!
by admin - 0

 

கார்கால மழையில் நனைகின்ற மலரே…
கார்த்திகைப் பூவான எங்களின் உயிரே…
காத்திருந்த உறவுகள் பூக்களைத்தான் பறிப்பார்
கல்லறைக்குள்ளே – காவல் காத்திட்ட
தெய்வங்கள் கண்களைத்தான் திறப்பார்.

தேகம் உருக்கி தேசம் காத்தவரே – இங்கு
தேசம் உருக கல்லறைக்குள் துயில்பவரே
இரத்தம் சிந்தி ஈழம் அமைத்தவரே – எம்
இதயங்கள் தொழுகின்ற தெய்வங்களானவரே
கார்த்திகை மாதம் மலர்களோடு வருகின்றோம் – உங்கள்
வேர்களில் விழுந்து ஈர விழுதுகளாகின்றோம்
ஆலயமணியொலிக்க எங்கள் ஆத்மாவில் தொழுகின்றோம் – உம்மை
எம் தெய்வங்களாக்கி இதயத்தில் வணங்குகின்றோம் – எங்கள்
இதயத்திலும் வணங்குகின்றோம்

கார்கால மழையில் நனைகின்ற மலரே…

உலகம் முழுதும் உறவுகள் அழுகின்றார் – உம்
கல்லறை தேடியே கடவுளை வேண்டுகின்றார்
முத்தம் கொடுத்த முத்தான கண்மணிகளே – உம்மை
முத்தமிடத் துடிக்கின்றோம் அருகினில் வாருங்களே
பாடல் வரிகள் பாரெல்லாம் ஒலிக்கும் – உம்மை
பார்க்க முடியாமல் எம்மிதயமெல்லாம் வலிக்கும்
அழுதழுது வருடங்கள் பல ஓடும் – உம்மை
எம்மண்ணில் காணது எம் இதயங்கள் வாடும் – எங்கள்
இதயங்களும் வாடும்

 

கார்கால மழையில் நனைகின்ற மலரே…

ராத்திரிப் பகலாக தூக்கம் தொலைத்தவரே – எம்மை
காத்திட வந்து உயிரை மாய்த்தவரே
கல்லறைகள் கட்டி உம்மை கோவில்களாக்கினோம் – இன்றோ
கோவில்களை இழந்து நாம் கல்லறைளாகினோம்
கண்களுக்கு தெரிவதில்லை கடவுளின் காட்சி – உம்மை
கடவுளாக வணங்குவதே பலர் கண்ட சாட்சி
உலகம் உள்ளவரை உயிர்கள் பல தேடி வரும் – எம்
தலைவனையும் வணங்கி எம் தலைமுறை வாழ்ந்து வரும் – எங்கள்
தலைமுறையும் வாழ்ந்து வரும்

கார்கால மழையில் நனைகின்ற மலரே…

– வல்வை அகலினியன்

 

http://feeds.feedburner.com/vivasaayi/QMzm

 
« PREV
NEXT »

No comments