Latest News

October 22, 2016

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான படுகொலை திட்டமிட்ட ஒன்று
by admin - 0

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டு இருப்பதற்கான காரணங்கள் எவை?
 
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த CCTV கமராவில் 11.45 மணியளவில் மாணவர்களின் மோட்டார் சைக்கிள் அந்த கடையை தாண்டி செல்கின்றது. அதன் பின்னர் இரு நிமிடத்தில் 11.47 மணியளவில் மழையங்கி அணிந்தவாறு பொலிஸ் குழு ஒன்று அந்த கடையை கடந்து நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த காட்சிப்படுத்தலின் அடிப்படையில் சில கேள்விகள் எம்மில் எழுகின்றது.

ஊடக/அரசியல்  கற்கையை மேற்கொள்ளும் மாணவர்களை சுட்டு கொன்று இருப்பதற்கான காரணங்கள் ஏதேனும் உண்டா?.இந்த கொலையின் பின்னணியில் ஏதாவது ஒரு ஆழமான காரணம் இருக்க கூடுமா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது,இந்த சந்தேகத்தினை மிகவும் நுணுக்கமாக அலசி ஆராயும் பொறுப்பு நீதிக்கும்  சட்டத்திற்கும் உண்டு.  இரு மாணவர்களையும் பின்தொடர்ந்த போலீசார் எந்த சட்டத்தின் அடிப்படையில் மாணவர்களை சுட்டு கொன்றார்கள் என்ற கேள்வியே எமக்கு பாரிய சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது, ஒருவரை சுட்டுக்கொல்ல வேண்டுமென்றால் அதற்கான காரணங்கள் மிகவும் வலுவானதாக இருக்க வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் இரவுநேரத்தில் பயணம் செய்யும் பொதுமக்களை சுட்டுக்கொல்ல முடியும் என்றால் அங்கே ஜனநாயகம் எங்கே என்ற கேள்வியை நாம் கேட்கவேண்டியவர்கள் ஆகின்றோம்.
 
ஊடகத்துறை/அரசியற்துறை  மாணவர்கள் எந்த நேரத்திலும் வெளியில் செல்வதற்கும் செய்திகளை திரட்டுவதற்கு சுதந்திரமாக செயற்படவும் முடியும். அவ்வாறுசெயற்படமுடியாத பட்ஷத்தில்  ஊடக/அரசியல்  கற்கையில் எதனை கற்க போகின்றார்கள்?
''நல்லிணக்கம்'' என்ற சொல் பெயரளவில் நடைமுறையில் இருக்கும்போது வடக்கு கிழக்கு மக்கள் இன்னும் அச்சத்துடனே வாழ்கின்றார்கள் என்ற எடுகோள்களை இந்த சம்பவம் விளக்குகின்றதா?

வன்முறையாக செயற்படும் இலங்கை பொலிஸாரின் அராஜக நடவடிக்கையை ஊடகத்துறையை/அரசியற்துறையை  சார்ந்த அனைவரும் கண்டிக்க வேண்டுமென உரிமையுடன் வேண்டுகின்றோம். 

மாணவர்கள் என்பவர்கள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிப்பவர்கள். அவர்களது உயிரை துச்சமென நினைத்து ஒருநொடியில் துப்பாக்கி என்ற உயிரில்லா செயற்கருவியால் உயிரெடுப்பது காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இந்த நடவடிக்கைக்கு  நீதித்துறை எப்படியான ஒரு நீதியை வழங்கப்போகின்றது?

சட்டம், நீதி என்பது அரசின் சார்புநிலை கொள்கைக்கு ஆதரவாக செயற்பட போகின்றதா?என்பதனை காலமே எமக்கு எடுத்துரைக்கும்.

எழுத்தாக்கம் 
காவியா
« PREV
NEXT »

No comments