Latest News

October 19, 2016

வருகிறார் ஜெயலலிதா - பாட்டாசு வெடிக்க தயாராகும் தொண்டர்கள்
by admin - 0

 

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு முன்பாகவே அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சிகிச்சைக்காக முதல்வர் சிங்கப்பூர் செல்வார் என்ற தகவலால் கவலையடைந்திருந்த தொண்டர்கள், அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்ப போகிறார் என்ற தகவலை கேட்டதில் இருந்து உற்சாகமடைந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதியில் இருந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரை சிங்கப்பூரில் இருக்கும் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு மாற்றினால், விரைவில் பழைய நிலைக்கு திரும்புவார் என்று அப்பல்லோ வட்டாரத்தில் இருந்து பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் சொல்லப்பட்டதாக தெரிகிறது.

முதல்வர் சிங்கப்பூர் செல்லத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் அலுவலகத்தில் இருந்து கூறியுள்ளனர். முதல்வர் ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் பிரதமர் மோடி அதிக அக்கறை காட்டி வருகிறாராம். ஆனால் தமிழக அரசு தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வரவில்லையாம்.

சிங்கப்பூர் மருத்துவர்கள்

சிங்கப்பூரிலிருந்து தலைமை பிசியோதெரபி பெண் மருத்துவர்கள் இருவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். முதல்வரின் உடல்நிலையைப் பரிசோதித்து அவர்களின் தற்போதைய நிலை பற்றி மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு தெரிவித்துள்ளனர்.

கடல் கடந்து சிகிச்சை

முதல்வரை இங்கே சிகிச்சைக்கு அழைத்துவர வாய்ப்பு இருக்கிறதா? என்று சிங்கப்பூரில் இருந்து மருத்துவர்கள் கேட்டிருக்கிறார்கள். சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவர்களும் சசிகலாவிடம் இதுபற்றி பேசியதற்கு அவர் ஒத்துக்கொள்ளவில்லையாம். அதற்கு காரணம் ஜெயலலிதாவிற்கு சிகிச்சைக்காக கடல் கடந்து செல்வதில் விருப்பமில்லை என்பதுதானாம்.

சம்மதிக்காத சசிகலா

வெளிநாட்டுக்கு செல்வதாக இருந்தால் முதல்வர் முன்னாடியே சென்றிருப்பார்கள். அவுங்க ஜாதகப்படி, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்வது சரியா இருக்காது என்று எல்லா ஜோதிடர்களுமே கூறியிருக்கின்றனராம். எனவே இந்த சூழ்நிலையில் வெளிநாடு போகவேண்டாம் என்று கூறிய சசிகலா, முதல்வரை வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் உடன்பாடு இல்லை என்று, தமிழக அரசு மூலம் மத்திய அரசுக்கும் தகவல் கூறிவிட்டாராம்.

தீபாவளிக்குள் டிஸ்சார்ஜ்

தீபாவளி சமயத்தில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதை சென்ட்டிமென்டாக சசிகலா விரும்பவில்லை. அப்பல்லோவில் கொடுக்கும் தற்போதய சிகிச்சைகளை வீட்டில்வைத்தே கொடுக்கலாமா என்பதுபற்றி, டாக்டர் சிவகுமாருடன் சசிகலா ஆலோசனை நடத்தியிருக்கிறார். தீபாவளி சமயத்தில் வீட்டில் இருந்தால் உடல்நிலையில் பழைய மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் சசிகலா. இதுபற்றி டாக்டர் சிவகுமார் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களுடன் பேசியிருக்கிறாராம்.

மாற்றப்படும் அறைகள்

போயஸ் கார்டனில் தரைத்தளத்திலிருந்து முதல் தளத்துக்குச் செல்ல லிஃப்ட் வசதி உண்டு. தற்போது ஸ்ட்ரெச்சர் ஏற்றுமளவுக்கு போயஸ் கார்டனில் உள்ள லிஃப்ட்டை மாற்றியமைத்து வருகிறார்களாம். அறைகளும் மருத்துவமனை வசதிக்கு ஏற்ப மாற்றப்படுகிறதாம். இந்தப் பணிகள் முடிந்த உடன் முதல்வர் ஜெயலலிதா டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. கேரளாவில் உள்ள ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்கள் சிலர், வரும் 27ஆம் தேதி ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்து போயஸ் கார்டனுக்கு மாற்றலாம் என்று கூறியுள்ளதால், தீபாவளிக்கு முன்பு முதல்வர் வீடு திரும்புவது உறுதி என்று அதிமுக வட்டார தகவல்கள் கூறுகின்றன.

பட்டாசு வெடிக்க தயாராகும் தொண்டர்கள்

அப்பல்லோ மருத்துவமனை வாசலில் கடந்த 28 நாட்களாக தொண்டர்கள் காத்துக்கிடக்கின்றனர். யாராவது ஒருவர் வந்து அம்மாவை நேரில் பார்த்தேன் என்று கூறினால் அந்த சந்தோசத்திலேயே வீட்டிற்கு சென்று விடுவோம் என்று பலரும் பேசி வருகின்றனர். ஜெயலலிதா விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்ற தகவல் கசிந்ததில் இருந்தே அதிமுகவினர் தீபாவளி கொண்டாடத் தயாராகி வருகின்றனர்.

« PREV
NEXT »

No comments