Latest News

October 10, 2016

வெடிகுண்டை விடவும் பண்பாடு பலமானது. -மு.திருநாவுக்கரசு
by admin - 0

 
ஓர் இனத்தை வெற்றி கொள்ள வேண்டுமாயின் முதலில் அந்த இனத்தின் பண்பாட்டை அழிக்க வேண்டும் என்பதே எந்தொரு ஆதிக்க சக்தியினதும், கோட்பாடாகவும் நடைமுறையாகவும் உள்ளன என்று விபரிக்கும் கறுப்பின சிந்தனையாளர் அமில்கா கேப்ராயல் “வெடிகுண்டைவிடவும் பண்பாடு பலம்வாய்ந்த ஆயுதம்” என்றும் கூறியுள்ளார்.

ஓர் இனத்தை ஆயுதம் கொண்டு அழிப்பது என்பது வெறுமனே மனிதப் படுகொலை மட்டுமல்ல கூடவே அது ஒரு பண்பாட்டு அழிப்புமாகும். அவ்வாறு ஓர் இனத்தை அழிப்பதும் பண்பாட்டு அழிப்புத்தான். அதேவேளை அந்த இனத்தின் பண்பாட்டை இன்னொரு பண்பாட்டு பரவலால் விழுங்கி கபளீகரம் செய்வதும் பண்பாட்டு அழிப்புத்தான். 

இந்த வகையில் இராணுவ ரீதியில் அழிவுக்கு உள்ளாகி வெற்றி கொள்ளப்பட்ட மக்கள் மீது வெற்றி பெற்ற இனம் சுதந்திரமாக கைவீசி தன் இனப்பரம்பல் பண்பாட்டை மேற்கொள்ளும் போது பாதிப்புக்கு உள்ளான இனம் தன் பாண்பாட்டை பாதுகாப்பதற்காக எடுக்கும் முயற்சியை யாரும் குறைகூற முடியாது. 

தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் என்ற வகையில் அந்த மக்களின் பண்பாட்டை இனக்கபளீகரத்தில் இருந்து பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்தத் தலைவனுக்கு உண்டு. இதைத்தான் வடமாகாண முதலமைச்சர் திரு,சி.வி.விக்கினேவரன் செய்துள்ளார்.
“பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரரைகளும் புத்தர் சிலைகளும் ஏன்? 

“எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றனவா? 
“பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவைகள் இடம்பெறுகின்றன என்பது எமது முதலாவது கரிசணை” என்ற கருத்தை முதலமைச்சர் கடந்த 24ஆம் தேதி யாழ் முற்றவெளியில் ஆற்றிய உரையின் போது குறிப்பிட்;டிருந்தார்.

முதலமைச்சரின் நாற்காலி அதிகார அளவில் பலமற்றதாக இருக்கலாம். ஆனால் அவரை தாங்கி நிற்பது வெறும் நாற்காலியல்ல இலட்சக்கணக்கான மக்களின் கரங்களும், தோள்களுமாகும். இந்தவகையில் அவரின் பலம் வெறும் நாற்காலியால் அல்ல எமக்கள் பலத்தினால் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அத்தகைய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை முற்றிலும் நீதிக்கு மாறாக கைது செய் என்றும், சிறையில் அடை என்றும், பதவி நீக்கம் செய் என்றும் கூறுவது முழு மக்களையும் அவமதிக்கும் செயலாம்.

இங்கு நல்லிணக்கத்தைப் பற்றி பேசுவோர் முதலில் முதலமைச்சர் கூறிய தமிழ் மக்களின் குறைகளை கருத்தில் எடுத்து அதனை நிவர்த்தி செய்யவும் அதன் பொருட்டு அவருக்கு ஆதரவு அளிக்கவும் வேண்டியதே நல்லிணக்கத்தை காண்பதற்கான நற்சமிக்ஞையாகும். ஆனால் அதனை பெரும்பான்மை மக்கள் மத்தியில் இருந்து ஆதரிக்கும் கரங்கள் நீளாதபோது நல்லிணக்கம் என்பது வெறும் கானல் நீராகவே காட்சியளிக்கும்.. 

முதலமைச்சர் ஒரு தனிமனிதனல்ல அதுவும் பேரழிவுக்கும், பெரும் துயரத்திற்கும் உள்ளாகிய மக்களால் பேராதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஒரு தலைவன். 

அவர் கூறிய குறைகளை செவிமடுத்து அவருக்கு துணைக்கரமாக நின்று செயற்படுவதன் மூலமே இன நல்லிணக்கத்தை உருவாக்கவும், புதிய தேசத்தை கட்டியெழுப்பவும் முடியும். 

கனடாவில் ஆங்கில கனேடியருக்கும், பிரஞ்சு கனேடியருக்கும் இடையே ஏற்பட்ட இனப்பிரச்சனையின் போது கனேடிய அரசாங்கம் அதற்கு தீர்வு காண்பதற்கென ஒரு விசாரணைக்குழுவை நியமித்தது.Report of the Royal Commission on Bilingualsim and Bicuturalism  என்ற 1970ஆம் ஆண்டு வெளியான அதன் இறுதி அறிக்கையில் ஆங்கிலேரையும், பிரஞ்சுக்காரையும் “Co-founders of a New Nation ''  என்ற புதிய தேசத்தின் இணை ஸ்தாபகர்கள் என்ற அடிப்படையில் பிரச்சனைக்கு தீர்வு காணவேண்டும் என்று கூறப்பட்டது. 

இவ்வாறு அளவால் சிறிய இனத்தவர்களான பிரஞ்சுக்காரரை ஆங்கிலேயருடன் சமநிலையாக கடனாவின் இணை ஸ்தாபகர்கள் என்ற அரசியல் கலாச்சாரத்தை பின்பற்றியதன் பின்னணியில் தான் பிரஞ்சு இன கியூபெக் மாநில மக்கள் தமது பிரிந்து செல்வதற்கான போராட்டத்தை காலகதியில் கைவிட ஏதுவானது.

ஆனால் விக்கினேஸ்வரன் அவர்கள் எழுப்பிய உரிமைக் குரலுக்கு பிரதிபலிப்பாக தமிழர்களை அந்நியர்களாக கருதி “ஒட்டுமொத்த தமிழர்களையும் இந்தியாவிற்கு அனுப்புவேன்” என கூறும் அளவிற்கு சிங்கள பௌத்த துறவிகள் இருக்கும் போது நல்லிணக்கம் என்பது முற்றிலும் சாத்தியமற்றது  என்பது தெளிவாகிறது.

தமிழர்கள் தனித்துவமான தேசிய இனமாகவும் இந்த இலங்கைத் தீவில் இணை உரிமையாளர்களாகவும் கருதப்படாத நிலையில் எந்த வகையிலும் இன நல்லிணக்கம் உருவாக முடியாது.

எனவே இனப்பிரச்சனையை தீர்ப்பதற்கான பயணத்தில் ஓர் அடியைத்தானும் பெரும்பான்மை இனத்தவர் முன்னோக்கி வைக்கவில்லை என்பதை முதலமைச்சரின் மேற்படி பேச்சுக்கு எதிராக காட்டிய எதிர்ப்பில் இருந்து தெளிவாகிறது. 

பண்பாடு பற்றிய விடயமே ஓர் இனத்தின் இருப்பு பற்றிய அத்திவாரமாகும். ஈழத் தமிழர்கள் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகாலச் செழுமையான பண்பாட்டின் புதல்வர்களும், புதல்விகளுமாவர். பண்பாடுதான் மனிதனை பிராணிகளில் இருந்து மேன்மைப்படுத்தி வைத்திருக்கும் தலையாய அம்சமாகக் காணப்படுகிறது. மனிதன் தனது ஆக்கத் திறனால் பிராணிகளில் இருந்து வேறுபடுவது வெளிப்படையாக காணப்படுகின்றது என்றாலும் பண்பாட்டு வளர்ச்சியினாற்தான் அவன் பிராணிகளில் இருந்து வேறுபட்டு மேன்மைக்கு உரியவனாகிறான்.

இன்று ஈழத்தமிழர்கள் ஒரு பெரும் பண்பாட்டு சவாலுக்கு உள்ளாகி காணப்படுகின்றனர். உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பண்பாட்டு வளர்ச்சிப் பிரச்சனை ஒருபுறமும் உள்நாட்டு ரீதியான பண்பாட்டு அழிவு பிரச்சனை இன்னொரு புறமும் ஈழத்தமிழரின் பண்பாட்டை பெரிதும் நெருக்கடிகளுக்கு உள்ளாக்கி உள்ளன. இங்கு பலகட்ட, பலபரிமாண பண்பாட்டு தேய்விற்கும் அழிவிற்கும் ஈழத்தமிழர்கள் உள்ளாகி வருகின்றனர்.

நடந்து முடிந்த யுத்தப் பின்னணியில் பெருந்திரளான இளைஞர்களும், யுவதிகளும் மக்களும் கொல்லப்பட்டமையுடன் கூடவே குடும்பங்கள் பெரிதும் குலைவுக்கு உள்ளாகியமையும் கூட்டுச் சேர்ந்து பண்பாட்டு கட்டமைப்பை பெரிதும் பலவீனப்படுத்தியுள்ளன. மேலும் வளமுள்ள இளம் சமூகமும் நாட்டைவிட்டு பெரும் எண்ணிக்கையில் வெளியேறி உள்ள நிலையில் சமூக பண்பாட்டு ஆக்கத்திறன் தமிழ் மண்ணில்  பெரிதும் பாதிப்புற்றிருக்கின்றது. 

இறுதியாக முள்ளிவாய்க்கால் பேரழிவானது ஈழத்தமிழ் சமூகத்தை பெரிதும் சத்தற்றதாகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும் உள்ளது. இந்த பேரழிவானது ஒரு நாணயத்தின் இருபக்கங்களென பண்பாட்டு அழிவை உக்கிரப்படுத்தியுள்ளது. ஒருபுறம் முள்ளிவாய்;க்கால் பேரழிவால்ச மூகம் சத்தற்றுப் போனது. மறுபுறம் யுத்தத்தில் வெற்றி பெற்றவர்கள் அழிவை அடிப்படையாகக் கொண்டு தங்குதடையற்ற வகையில் தமிழினத்தின் மீதான பண்பாட்டு அழிப்பை இராணுவ பிரசன்னத்தின் பின்னணியில் நில அபகரிப்புக்கள் மூலமாகவும், ஏனைய அரச நிர்வாக நடவடிக்கைகள் மூலமாகவும், சிங்கள மயமாக்கல் மூலமாகவும் முன்னெடுத்து வருகின்றனர். இதைத்தான் முதலமைச்சர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. 

இந்த வகையில் தமிழ்  மக்களின் பண்பாடானது ஒரு பாரிய கட்டமைப்பு குலைவுக்கு உள்ளாகி வருகிறது. 
நீண்டகால யுத்தத்தின் பின்னணியில் தமிழ்ப் பண்பாட்டிற்கு நிலைக்களமான சமூக கட்டமைப்பு குலைவுற்று இருக்கிறது. அத்துடன் முள்ளிவாய்;க்கால் பேரழிப்பின் போது தமிழ்ச் சமூகமும் பண்பாடும் பெரும் சிதைவுக்கு உள்ளாகியுள்ளன. மேலும் வெற்றி பெற்றோரால் அழிப்புக்கு உள்ளானோர் மீது இலகுவாக அவர்களது பண்பாட்டுத் திணிப்பை மேற்கொள்ள முடிகிறது. இவை அனைத்தும் களத்தில் நிகழும் உள்நாட்டு பரிமாணங்களாகும். 

அதேவேளை உலகளாவிய அர்த்தத்தில் குறிப்பாக மரபணு இனக்கலப்பு உலகமயமாக்கலின் கீழ் தாவரங்கள், தானியங்கள், பிராணிகள் என்பனவற்றை இனக்கலப்பிற்கு உள்ளாக்கி அதனால் இந்த உலகை ஆட்கொள்ளும் போக்கில் தேசியப் பண்பாட்டு அடித்தளங்கள் அழிந்து போகும் நிலை தோன்றியுள்ளது.

அதாவது குறித்த பிரதேசத்தின் இயற்கையும் பயிர்வகைகளும், பிராணிகளும் இனமாற்றம் செய்யப்படுவதன் மூலம் அவர்களது உணவு பழக்க வழக்கங்களும் பண்பாட்டு இயல்புகளும் கூடவே தாக்கத்திற்கு உள்ளாகின்றன. இங்கு எல்லாவகையிலும் “சுயம்” அழிக்கப்பட்டு செயற்கைகள் திணிக்கப்படுகின்றன. இது பூமியையும் வாழ்வையும் உயிரினங்களையும் நாசமாக்குகிறது. 

பன்றியையும் மாட்டையும் இனக்கலப்பிற்கு உள்ளாக்கி இயற்கையான பன்றியும் இல்லை  மாடும் இல்லை என்ற நிலை உருவாகுவதுடன் பூமியின் இருப்பையும் நி;லைகுலையச் செய்து பணம் சம்பாதிக்கும் பணமுதலைகளுக்காக இந்த முழு உலகமும் தாரை வார்க்கப்படும் போக்கில் மனிதனது உயர்ந்த பொக்கிசமான பண்பாடும் அழிவுக்கு உள்ளாகி மனிதன் வெறும் தசைப் பிராணியாகும் துயரம் உருவாகியிருக்கிறது. இதனை எதிர்கொள்ள பண்பாட்டு வளர்ச்சியின் மீதான கவனம்தான் தலையாய ஆயுதமாக உள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்பம் வளர்ச்சிக்கு அவசியமாது. ஆனால் அது மனிதனை விழுங்கவோ அல்லது தொழில்நுட்பத்தின் உதிரிப்பாகங்களாக மனிதனை மாற்றவோ நாம் அனுமதிக்க முடியாது. தொழில்நுட்பம் மனிதனின் கருவியாக செயற்படலாமே தவிர மனிதன் தொழில்நுட்பத்தின் கருவியாக முடியாது. இதற்குப் பின்னால் ஓர் அபாயகரமான அரசியல் இருக்கிறது. அதுவும்; பண்பாட்டை அழிப்பதை அடிப்படையாகக் கொண்டே எழுந்திருக்கிறது. 

பண்பாடு என்பது நீண்ட வரலாற்று வளர்ச்சியின் பெறுபேறாகும். வரலாறு என்பது இறந்தகாலச் சம்பவங்கள் பற்றிய ஒரு மூளைப் பயிற்சியல்ல. மாறாக வரலாறு என்பது எதிர்காலத்திற்கான ஊற்றுக்கண். பலவேளை வரலாற்றை ஒரு விவரணமாக விவரிப்பதில் அக்கறைகாட்டும் மனிதர்கள் வரலாற்றில் இருந்து படிப்பினைகளை கற்றுக் கொண்டதாக தெரியவில்லை. 

வரலாற்றில் இருந்து முகிழ்ந்தெழும் முத்துக்களாகவே பண்பாடுகள் உள்ளன. அந்த பண்பாட்டை பேணி, பாதுகாத்து, வளர்த்து அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டியது இன்றைய தலைமுறையினரின் பணியாகும். 

ஈழத்தமிழர்கள் தமது உன்னதமான பண்பாட்டு அம்சங்களை உயிரிலும் மேலாக மதித்து நடப்பவர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எம்மை அறியாமலே புறச்சூழலின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி அவை ஒருபுறம் அழிவுக்கு உள்ளாவதுடன் மறுபுறம் கண்ணுக்குத் தெரியும் ஆக்கிரமிப்பு முறைகளினாலும் அவை அழிவுக்கு உள்ளாகின்றன. நாம் எமது உணவு பழக்க வழக்கம், வாழ்க்கைமுறை, இறந்தோரை பூசிப்பதில் தலையாய பண்பாட்டு அம்சங்களை கொண்டவர்கள்.

தேசியம், தேசியப் பண்பாடு என்பது புவிஅடங்கலும் வாழும் மனிதகுல நாகரீகத்தின் மேன்மைக்கான  அம்சங்களாகும். தமிழ்ப் பண்பாட்டை பேணுவதும், பாதுகாப்பதும், வளர்ப்பதும் என்பது மொத்த மனிதகுல உரிமையின் ஓர் அங்கமாகும். எவனொருவன் பண்பாட்டை அழியவிடுகிறானோ அவன் ஆக்கிரமிப்புக்கு இரையாகிறான் அல்லது துணைபோகிறான் என்பதே அர்த்தம்.

ஈழத் தமிழர்கள் தம் பண்பாட்டை இந்த புதிய யுகத்தின் சவால்களுக்கு ஈடாக தகவமைத்து நிலைநிறுத்த வேண்டியது ஒருபுறமும், நேரடி பண்பாட்டு அழிப்புக்கான ஆக்கிரமி;ப்புக்களிலிருந்து தற்காத்து முன்னேற வேண்டியது மறுபுறமாக அவர்கள் முன் பெரும் பணி குவிந்திருக்கிறது. இன்றைய நிலையில் ஈழத் தமிழர்கள் தமது பண்பாட்டை மீட்டெடுக்கவும், தற்காக்கவும், வளர்த்தெடுக்கவும் வேண்டியதற்கான பயணம் மிகவும் நீண்டதாக உள்ளது. 

இதற்கு முதன்மையாக அறிஞர்படை அவசியமானது. ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது குறிப்பாக இன்றைய நிலையில் அது அதிகம் அறிஞர்படையின் வீரியத்தில் தான் தங்கியுள்ளது. எந்த சமூகம் தனது வளர்ச்சிக்குப் பொருத்தமான சிறந்த அறிஞர்படையைக் கொண்டிருக்கவில்லையோ அந்த சமூகம் இலகுவில் முன்னேற முடியாது.. ஒரு சமூகத்தின் முன்னேற்றம் அதன் பண்பாட்டு வளர்ச்சியிலும் அதற்கான அறிஞர்படையின் பேர் உழைப்பிலும் அதிகம் தங்கியுள்ளது. 

தற்போது தமிழ் அறிஞர்களின் பெரும்பணி இன்றைய  யுகத்திற்கு பொருத்தமாக தமிழ்ப் பண்பாட்டை மெருகிட்டு முன்னெடுப்பதும் அதனை பாதுகாப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்வதுமாகும். 

இன்றைய உலகம் இரண்டாம் உலக மகாயுத்ததின் குழந்தையாகும். இரண்டாம் உலக மகாயுத்தத்தின் அனுபவத்தில் இருந்து அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் இன்றைய உலக கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதற்குமான ஐநா சபையாயினும் சரி, உலகில் காணப்படும் பல்வேறு அரசியல் பொருளாதார நிதி மற்றும் கலாச்சார நிறுவனங்களாயினும் சரி அனைத்துமே இரண்டாம் உலக மகாயுத்தத்தின் அனுபவத்தில் இருந்து அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டவைதான். 

எனவே இன்றைய உலகின் அனைத்து நிறுவன அமைப்புக்களையும், அரசியல் நிர்வாக செயற்போக்குக்களையும் இரண்டாம் உலக மகாயுத்த அனுபவத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது.. இன்று காணப்படும் இராசதந்திர கட்டமைப்புக்கள் மற்றும் சர்வதேச உறவு முறைகள் அவை சார்ந்த விதிமுறைகள் என அனைத்துமே இரண்டாம் உலக மகாயுத்தப் பேரழிவில் குழந்தைகளாகவே பிறப்பெடுத்துள்ளன.

 அதாவது இன்றைய உலக நாகரீகத்தை அதன் வளர்ச்சிக் கட்டத்தில் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் வெளிப்பாடு என்று கூறுவதில் தவறில்லை. இது கலை, இலக்கியம், அறிவியல் சார்ந்த ஏனைய துறைகளுக்கும் அதனதன் அளவில் பொருந்தும். 

இதனை புரிந்து கொள்வோமானால் முள்ளிவாய்க்கால பேரழிவில் இருந்து தமிழ்ப் பண்பாட்டை புதுவடிவப் படுத்தி முன்னேறுவதற்கான ஊற்றை நாம் கண்டறியலாம். முள்ளிவாய்க்கால் என்பது ஒரு வரலாற்றுப் பிரளயம். 

இதில் உலகநாகரீகம், மனிதப் பண்பாடு, அரச நலன்கள், அரசியல்வாதிகளின் நலன்கள், இன - மத ஆதிக்க கோட்பாடுகள் மற்றும் அரச வல்லான்மை கோட்பாடுகள் நடைமுறைகள் எல்லாம் சேர்ந்து தமிழ் மக்களின் துயரத்தில் தத்தம் நலன்களை பாதுகாத்துக் கொண்ட ஒரு துயரமான படிப்பினையை தமிழ் மக்கள் பெற்றுள்ளார்கள்.

எப்படியோ 1940களின் மத்தியில் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவும், 1950களின் மத்தியில் டாக்டர் என்.எம்.பெரேராவும் கூறியது போல ஈழத் தமிழர்கள் பலமான பண்பாட்டை உடையவர்கள். அந்தப் பண்பாட்டு பலம் கொண்ட மக்கள் இலகுவில் மடிந்து போக மாட்டார்கள் என்ற வகையிலான கருத்து அடிப்படையில் உண்மையானது. 

வறண்ட பிரதேசத்தின் பின்னணியில் கடும் உழைப்பை கோரிய புவியியல் வளத்தின் பின்னணியில் அயராத உழைப்பைக் கொண்ட சோராத மக்கள் அதற்குரிய செழிப்பான பண்பாட்டை மேற்படி அதன் புறவய சூழலில் இருந்து பெற்றிருக்கிறார்கள். 

ஆதலால் இதற்குப் பொருத்தமான இறுக்கமான, பலம் பொருந்திய பண்பாட்டு அம்சம் ஈழத்தமிழருக்கு அதன் புவியியல் மற்றும் வரலாற்று பின்னணியில் உண்டு. அதனை சரிவர ஒன்றுதிரட்டி இந்த புவிப்பரப்பில் மனிதகுல நாகரீகத்தின் ஓர் அங்கமாக ஈழத்தமிழ் பண்பாட்டை நிலைநிறுத்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் தற்போது ஈழத்தமிழர் முன் விரிந்து கிடக்கிறது.

இரண்டாம் உலக மகாயுத்தம் இந்த பூமிக்கு பல போதனைகளை புகட்டியது போல முள்ளிவாய்க்காலும் ஈழத்தமிழருக்கு பல போதனைகளை தங்கத் தாம்பாளத்தில் வைத்து நீட்டுகிறது. அந்த முள்ளிவாய்க்காலின் விளைவை மிகுந்த மென்மையான தோனியில் பிரதிபலிக்கும் ஒன்றாக முதலமைச்சரின் மேற்கண்ட பேச்சு அமைந்ததென்று கூறலாம். 

வரலாறு உறங்குவதில்லை அது தொடர் வளர்ச்சியின் அச்சில் சுழல்கிறது. முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் பேச்சிற்கு எதிராக எழுந்த குரல்கள் இன்றைய வரலாற்று கொதிநிலையில் அதனை பலப்படுத்த உதவியுள்ளதே தவிர பலவீனப்படுத்தவில்லை. 

« PREV
NEXT »

No comments