Latest News

October 20, 2016

மேஜர்.அன்ரனி அண்ணை வீரத்தின் உறைவிடம்.!! ஈழத்து துரோணர்.!!!
by admin - 0

மேஜர்.அன்ரனி அண்ணை 
வீரத்தின் உறைவிடம்.!!
ஈழத்து துரோணர்.!!!

 
எமது தயக்கப்போராட்டதில்  பல விடுதலை அமைப்புகள் போராடப் புறப்பட்ட போதும், அதன் தலைவர்களின் தவறான வழிநடத்தல்களாலும், அதில் இருந்த உறுப்பினர்களின் பிழையான செயல்பாடுகளாலும், எம் மக்கள் மனங்களில் இருந்து தூக்கி எறியப்பட்டு, ஒரங்கட்டப்பட்டனர்.! 

இந்த குழுக்களுக்கு விதிவிலக்காக புலிகள் மட்டும், தாம் கொண்ட கொள்கையில் உறுதியானவர்களாவும், ஒழுக்க சீலர்களாகவும்,  தலைவர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டனர். 

புலிகளின் சாதனைகளின் பின்னாலும், உலகம் வியக்கும் போர் நுட்பங்களின் பின்னாலும், தலைவர் அவர்களின் நுட்பமான பார்வை ஒன்று இருந்தது. 

ஆம், அது தான் போராளிகளை இனம் காணுதல்.!

சரியானவர்களை இனம் கண்டு அவர்களிடம் அந்த பொறுப்பை ஒப்படைத்து, அதில் அவர்களுக்கு தொடர் வழிக்காட்டுதல் ஊடாக, அந்த துறையில் அவர்களை வளர்த்தெடுத்தல் ஆகும். 
 
அப்படி தலைவர் அவர்களால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனம் காணப்பட்டவர்களின் முதன்பையானவர்கள் மேஜர். அன்ரனி அண்ணை, அடுத்தது  லெப்.கேணல் றீகண்ணையாகும். 

மேஜர்.அன்ரனி அண்ணையை மணலாற்றில் வைத்தே நான் முதல் முதலில் சந்தித்தேன். புலிகளின் ஆணழகன் என்று சொன்னால் அது மிகையாகாது.! 

அந்த நேரங்களில் ராம்போ என்னும் ஆங்கிலத் திரைப்படம் பிரபலியமாக இருந்தது. அவருக்கு அந்த திரைப்படம் மிகவும் பிடிக்கும். அதில் வரும் கதாநாயகன் சில்வஸ்ட்ரர் போன்று தன்னுடலையும் முறுக்கேற்றியிருந்தார். 

உண்மையில் ஆரம்பத்தில் வரிப்புலி சீருடையில் அவரைப் பார்க்கும் போதெல்லாம், அந்த சீருடை அவருக்காகவே உருவானது போல எனக்கு தோன்றும். தனது M 203 துப்பாக்கியை சுமந்தபடி கம்பீரமாக வரும் போது, அவர் மேல் யாருக்கும் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதை தடுக்க முடியாது.

 இந்திய இராணுவத்தின் செக்மேட்   இராணுவநடவடிக்கையை முறியடிக்க மட்டு மாவட்டத்தில் இருந்து, மணலாற்றுக்கு வந்த அணியில் அன்ரனி அண்ணையும் ஒருவர். அவரது சண்டையிடும் வேகமும், கணீர் என்ற கட்டளையிடும் தொனியை,தொலைத் தொடர்பில் கேட்டுக்கொண்டிருக்கும் தலைவர் அவரை பாராட்ட தவறுவதில்லை. 

பெரும் பாலும் தலைவர் அன்ரனி அன்னையுடனேயே உரையாடுவார்.! 

அப்போது, கருணா அங்கிருந்த போதும், அன்ரனி அண்ணையிடம் ஒரு ஈர்ப்பு, அண்ணைக்கு எப்போதும் இருப்பதை நான் உணர்ந்துள்ளேன்.! 

மீண்டும் இந்த அணியினர் மட்டு நகர் சென்றபின் இந்திய இராணுவம் படிப்படியாக இந்தியா திரும்ப ஆயத்தமான போது, அவர்களால் ஆயுதங்களும் பயிற்சியும் கொடுக்கப்பட்டிருந்த ENDLF, TELO, EPRLF போன்ற சமூகவிரோத கும்பல்கள் மீது அம்பாறை மாவட்ட தளபதியான அன்ரனி அண்ணை தலைமையிலும், மட்டக்களப்பில் இருந்த முகாம்கள் மீது றீகண்ணை தலைமையில் தாக்குதல்கள் மேற்க்கொள்ளப்பட்டு பெரும் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது. 

இந்த இருவரது வெற்றிகரமான தாக்குதல்களே  கருணா தன்மீது ஒரு விம்பத்தை உருவாக்க உதவியது.! 

ஆனபோதும் தலைவரின் அன்பு அன்ரனி அண்ணைக்கு எப்போதும் இருந்தது. அந்த ஈர்ப்பின் காரணமாகவே தலைவரால், அன்ரனி அண்ணைக்கு M.203 துப்பாக்கி வழங்கப்பட்டது. 

தலைவரின்  இந்த ஈர்ப்பு கருணாவிற்கு ஒரு வெறுப்பை, அன்ரனி அண்ணை மீது  ஏற்படுத்தி இருக்கவேண்டும்? அதன் காரணமாகவோ என்னவோ அன்ரனி அண்ணையுடன் முரண்பட ஆரம்பித்தான். 

அதன் விளைவாக அன்ரனி அண்ணை யாழ்ப்பாணத்திற்கு மாற்றலாகி வந்திருந்தார். 

இந்த இடத்தில் இரண்டு விடையங்களை உங்களுடன் பகிர விரும்புகின்றேன். 1990ம் ஆண்டு ஆரம்பம் அது, அப்போது சிங்கள அரசுடன் எமக்கு சமாதானம் ஏற்பட்டிருந்தது. அப்போதெல்லாம் கோட்டையில் இருந்து முறையான அனுமதி பெற்று, இராணுவத்தினர் சிலர் யாழ்நகர் வருவார்கள். 

அப்படி அனுமதி பெற்று வந்த சிங்களப்படை, அனுமதி இல்லாது பழைய பூங்காவரை வந்துவிட்டிருந்தனர். 

இந்த விடையத்தை தொலைதொடர்பின் ஊடாக அறிந்த அன்ரனி அண்ணை, தனி ஒருவனாக அவர்களை துரத்தி சென்று, அவர்களது ஜீப்பின் மேல் காலை வைத்து அவர்களை திரும்பி முகாமுக்கு போகச் சொல்லி, தனது துப்பாக்கியை காட்டி கட்டளை இட்டு திருப்பி அனுப்பியதை, அன்று  எம்மக்கள் அதிசயத்துடன் பார்த்தனர். 

அந்த மாவீரனின் நெஞ்சில் வாட்டிய ஒரு விடையம் அவரது ஒரு சகோதரி மாற்று இயக்கத்தில் இணைந்திருந்தமையே ஆகும். 

ஒருமுறை இவரது சகோதரியின், அணியினரின்  நடமாட்டத்தை இனம்கண்ட அன்ரனி அண்ணை, அவர்கள் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டார். 

அண்ணணின் அணிக்கும், தங்கையின் அணிக்கும் பெரும் யுத்தமே அன்று நடந்தது. அன்று துரோகிகள் பலர் கொல்லப்பட்ட போதும், இவரது தங்கை உயிர் தப்பியிருந்தார். 

அவரை கொல்ல முடியவில்லை என்ற, அந்த விடையம் கடைசிவரை அவரது மனதில் பெரும் தாக்கமாகவே இருந்ததை நான் அறிவேன்.

ஒரு முறை கதைக்கும் போது "அவள் இங்கை (புலிகளமைப்பில்) இருந்திருந்தால் பெரிய சண்டைக்காரியா வந்திருப்பாள், சேர்ந்த இடம் பிழைச்சு போச்சு" என்கிறார். 

ஆம், இது தான் அன்ரனி அண்ணை.! 

பாசத்துக்கு முன்னுரிமை கொடுக்காது, தேசத்தை நேசித்த உயர்ந்த தளபதி. 

தலைவரின் நம்பிக்கையை பெற்ற தளபதி. 

தமிழீழத்தின் எல்லா பகுதிகளிலும் சண்டையில் பங்கு பற்றிய தளபதி. 

நான் பிரமிப்புடன் பார்த்த தளபதி. 

அவர் இருந்திருந்தால் நிச்சயம் தமிழீழத்தின் பெயர் சொல்லும் தளபதியாக இருந்திருப்பார். 

ஏனெனில், அந்த நேரத்தில் இலங்கை முழுவதிலும், பலாலி தொடங்கி கொழும்பு வரை உள்ள இராணுவத்தினருக்கு, தெரிந்த புலிகளின் தளபதி என்றால் அது அன்ரனி அண்ணை தான். 

எதிரிகள் அவர் பெயரை கேட்டாளே அஞ்சி நடுங்கிய காலம் அது. 

19/10/1990 அன்று வசாவிளான்பகுதியில்வைத்து, எதிரியுடன் நேரடி மோதலின் போது, அவர் எம்மை விட்டு போன போதும், அவர் நினைவுகள் என்றும் எம்மை விட்டு போவதில்லை.! 
நினைவுகளுடன் துரோணர்.!!!
« PREV
NEXT »

No comments