Latest News

September 19, 2016

ஜூனியர் விகடன் சஞ்சிகையில் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களின் "இலங்கை அரசியல் யாப்பு" என்ற புத்தகத்திற்கான சிறப்பான விமர்சனம்
by admin - 0

இந்தியாவிலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் சஞ்சிகையில் மூத்த அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்களின் "இலங்கை அரசியல் யாப்பு" என்ற புத்தகத்திற்கான சிறப்பான விமர்சனம் ஒன்று வெளிவந்திருக்கிறது இது புதிய நோக்கில் இந்தியா ஈழத்தமிழர்களின் பிரச்சனையை அணுக வேண்டும் என பதிவிட்டிருக்கிறது. இது வரவேற்கத்தக்க விடயம். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பிரதிகள் அச்சிடப்படுகிறது 

ஜூனியர் விகடன் எழுதியிருந்த கட்டுரை .....


அரசியற் போராட்டமும் ஆயுதப் போராட்டமும் தொடர் தோல்வியைத் தழுவிய நிலையில் கையறு நிலையில் நிற்கிறான் ஈழத்தமிழன். அதற்கு அகத்திலும் புறத்திலும் ஆயிரம் காரணங்கள்.

எது காரணமாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்துதானே ஆகவேண்டும்? சோகத்தைச் சுமந்து சுணங்கிப்போகமுடியுமா? சுணக்கத்திலிருந்து மீண்டெடுக்க வந்திருக்கிறது மு.திருநாவுக்கரசுவின் இந்தப் புத்தகம்.
ஈழத்தமிழர் வாழ்க்கையை தமிழ் உணர்ச்சிவசமாக இல்லாமல், சிங்கள இனவாதமாகப் பாக்காமல் மிக நுண்மையாக ஆராய்கிறார் மு.திருநாவுக்கரசு.
சர்வதேச உறவுகள், புவிசார் அரசியல், கொள்கைவகுப்பு, ராஜதந்திரம், உலகவரலாறு, அரசியல் சிந்தனை வரலாறு, பொருளாதார வரலாறு. அரசியல் சித்தாந்தம் போன்ற துறை ரீதியான அறிவின் மூலமாக ஈழ அரசியலை ஆய்வு செய்து எழுதப்பட்ட புத்தகம் இது.

அதாவது காலணி ஆதிக்கம் முதல் இன்று வரை நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் அனைத்தும் ஈழத்தமிழனது இடுப்பை ஒடிப்பதற்காக எப்படிப்பட்ட வார்த்தை ஜாலங்களுடன் உருவாக்கப்பட்டன என்ற வரலாற்று நகர்வுகளுடன் இந்நூல் பயணிக்கிறது.
சிங்கள இனவாதம் மட்டுமே இந்தப்பிரச்சனைக்கு காரணமா? விடுதலைப்புலிகளை ஒடுக்கவேண்டும் என்ற இந்தியாவின் எண்ணம் மட்டுமே காரணமா? கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்தியாவுக்குப் பக்கத்தில் இலங்கை இருப்பதுதான் காரணமா? என்றால் மூன்றுமேதான். இவை அனைத்தும் இதுவரை பேசப்பட்டன.
ஆனால் மு.திருநாவுக்கரசு அதைத்தாண்டிய ஒரு காரணத்தைச் சொல்கிறார். சிங்கள - பௌத்தர்களுக்கும் - இந்தியாவுக்கும் தொடர்சியாக இருக்கும் பகைதான் இதற்குக் காரணம் என்கிறார்.

சிங்கள பௌத்தர்களுக்கும் - இந்தியாவுக்குமிடைளே உள்ள வரலாற்றுப்பகைமையை முதலீடாக்கி அதன்மூலம் இலங்கையின் நவீன வரலாற்றில் சிங்கள பௌத்தர்களுக்கும் - இந்தஜயாவுக்கும் இடையிலான பகைமையைத் தூண்டிவளர்த்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையில் இந்தியாவுக்கு எதிரான தமது கேந்திர நலன்களை அடைவதில் பிரித்தானியர் வெற்றி பெற்றனர்.

இந்த அரசியல் சதியில் சிங்களவரைத் தம்பக்கம் வென்றெடுப்பதற்காக தமிழரைப் பலியிடும் அரசியல் யாப்பு மரபை பிரித்தானியர் இலங்கையில் தோற்றுவித்தனர்.
பிரித்தானியர் சட்டபூர்வமாகத் தோற்றுவித்த அந்த அழிவுப்பாதையின் தொடர்வளர்ச்சியே இன்றைய வரையான அரசியல் யாப்புக்களாகும் என்ற உண்மை அடித்தளத்தை வெளியில் கொண்டுவந்து போடுகிறது இந்தப்புத்தகம்.

இலங்கையை உடைத்துவிடுவார் இந்திரா என்றும், புலிகள் அமைப்பை நடத்துவதே எம்.ஜி.ஆர் தான் என்றும் ஜெயவர்தன நினைத்தது இவரது வாதத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. இலங்கையில் தமிழரை அழித்துவிட்டால் இந்தியாவின் ஆதிக்கம் இலங்கையில் படராது என்று அவர்கள் நினைத்தார்கள்.
ஆனால் அது இந்தியாவுக்குத்தான் துரதிருஷ்டமாகப் புரியவில்லை. புரியாத இந்தியாவுக்கு சீனா இப்போது புரியவைத்துக்கொண்டிருக்கும் சூழலில் இந்தப்புத்தகம் வந்துள்ளது. இது இலங்கையர் படிக்கவேண்டிது மட்டுமல்ல இந்தியரும் படிக்கவேண்டியது.
« PREV
NEXT »

No comments