Latest News

September 30, 2016

ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது உடனடியாக தகவல் தரவும் -கருனாநிதி கோரிக்கை
by admin - 0

 

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து உலவும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டுமென்றும் அதற்கு மாநில ஆளுர் ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருக்கிறார். 

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதலமைச்சர் எவ்வாறு இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பரிதவிப்பில் இருக்கும்போது, அவர் மருத்துவனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிடாதது ஏன் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். 

தமிழக ஆளுநர் இதுவரை முதலமைச்சரை நேரில் சந்திக்கவில்லை என்றும் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய செய்தி யாருக்கும் தெரிந்து விடக் கூடாதென்று மூடு மந்திரமாக வைத்திருப்பதால், ஒரு சிலர் வேண்டுமென்றே விரும்பத்தகாத செய்திகளை எல்லாம் வதந்திகள் மூலமாகப் பரப்பி வருகிறார்கள் என்றும் அந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கின்ற வகையிலாவது சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சரின் புகைப்படத்தை வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

முதலமைச்சர் இத்தனை நாட்கள் மருத்துவமனையிலே சிகிச்சை பெறுவது பற்றி மரபுகளை அனுசரித்து முறைப்படி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பிலே உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரோ, தலைமைச் செயலாளரோ இதுவரை எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை என்றும் கருணாநிதி சுட்டிக்காட்டியிருக்கிறார்.

முதலமைச்சருக்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் நீடிக்கிறது என்றால், முறைப்படி மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பது நாட்டிற்கு இதற்குள் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கூறியுள்ள கருணாநிதி, அந்த மருத்துவக் குழுவின் சார்பில் அடிக்கடி முதல்வரின் உடல் நிலை குறித்த உண்மைத் தகவலை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். 

மேலும், தனக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், அவர் விரைவில் முழு நலம்பெற்று, எப்போதும் போலத் தனது பணிகளைத் தொடர்ந்திட வேண்டும் என்பதுதான் தனது உளப்பூர்வமான விருப்பம் என்றும் அவர் கூறியுள்ளார்.

« PREV
NEXT »

No comments