Latest News

September 25, 2016

நல்லாட்சியிலும் தமிழர்கள் மீது இனப்பாகுபாடுகளும் சுரண்டல்களும் தொடர்கின்றன! தமிழ் அமைச்சர்களும் ஒத்துழைப்பு
by admin - 0

நல்லாட்சியிலும் தமிழர்கள் மீது இனப்பாகுபாடுகளும் சுரண்டல்களும் தொடர்கின்றன! தமிழ் அமைச்சர்களும் ஒத்துழைப்பு.
 

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரி நல்லாட்சி மலர்ந்தும் தமிழர்கள் மீது காட்டப்படும் பாகுபாடுகளும் புறக்கணிப்புக்களும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதனையே அவதானிக்க முடிகின்றது. இதனை தமிழர்களின் பிரதிநிதிகளான அரசியல்வாதிகள் பலர் பொறுப்புள்ள அமைச்சர்களாகப் பதவி வகிக்கின்ற போதிலும் பாதிக்கப்படும் தமிழர்கiளின் நிலையை மாற்ற இவர்கள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்ததாகத் தெரியவில்லை. 


தீர்க்கக் கூடிய மனிதாபிமானப் பிரச்சனைகளைக் கூடத் தீர்க்க முயற்சிக்காது பொறுப்பு வாய்ந்த தமிழ் அமைச்சர்கள் பலர் தமது பதவியை மாத்திரம் பாதுகாப்பதாகவேதான் அவர்களது செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிப் பாடசாலைகளில் பெருமளவான ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதனை நீக்குவதாகக் கூறிய அரசாங்கம் தமிழர்களுக்கு இலங்கை ஆசிரியர் சேவைக்கு முற்றிலும் முரணான வகையில் ஆசிரிய உதவியாளர் என்ற விசித்திரமான நியமனத்தை வழங்கி அவர்களுக்கு மாதாந்தச் சம்பளமாக வெறும் 6000 ரூபாவை மட்டும் வழங்கி தமிழர்களை ஏமாற்றி தமிழர்களின் உழைப்பை நல்லாட்சிக்கான அரசாங்கமும் சுரண்டி வருகின்றது. 

தமிழர்களின் பிரதிநிதிகளாக அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன், அமைச்சர் திகாம்பரம், அமைச்சர் மனோகணேகன், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் போன்றோர் பொறுப்புள்ள அமைச்சர்களாக இருந்தும் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் அவர்கள் இருந்தும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இன ரீதியான புறக்கணிப்புக்கள், பாகுபாடுகளுக்கு தீர்வினைக் காண்பதற்கு இன்னும் முயற்சிக்கப்படாத நிலைமையே தொடர்ந்தும் நீடித்துச் செல்கின்றது. இதனால் பாதிக்கப்படுபவர்களாக தமிழர்களேதான் காணப்படுகின்றார்கள்.

இலங்கையில் சிங்களவர்களுக்கு ஆசிரிய உதவியாளர் என்னும் 6000 ரூபா மாதச் சம்பளத்திற்கான நியமனம் வழங்கப்படவில்லை என்பதும் தமிழர்களைத் துன்பப்படுத்துவதற்காகவே தமிழர்களுக்கு ஆசிரிய உதவியதளர் என்னும் விசித்திரமான நியமனம் வழங்கி தமிழர்களின் உழைப்பை அரசாங்கம் சுரண்டி வருகின்றது. இதற்குப் பதவியிலுள்ள தமிழ் அமைச்சர்களும் உடந்தையாக இருந்து செயற்பட்டு தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள். இவர்கள் நினைத்தால் தொடர்ந்தும் துன்பப்படும் தமிழர்களின் நிலையை மாற்றி அமைக்கலாம் ஆனால் இவர்கள் இதுவரை இதனை மாற்றியமைப்பதற்கு முயற்சித்ததாகத் தெரியவில்லை.

மாதாந்தம் பல்லாயிரக்கணக்கான சம்பளத்தையும் ஏனைய சலுகைகளையும் பெற்று சுகபோகமாக வாழும் அரசியல்வாதிகளுக்கு எங்கு தெரியப் போகிறது வெறும் 6000 ரூபாவை மாத்திரம் மாதச் சம்பளமாகப் பெற்று வாழ்க்கைச் செலவுகளைச் செய்ய முடியாது கஸ்டப்படும் இந்தத் தமிழ் ஆசிரிய உதவியாளர்களின் அவல நிலை.

தமது அவல நிலையைக் கருத்திற்கொண்டு தம்மையும் மனிதர்களாக நோக்கி தமக்கான சம்பளத்தை அதிகரித்து வழங்குமாறு இந்த ஆசிரிய உதவியாளர்கள் நீண்ட காலமாகக் கோரி வருகின்ற போதிலும் எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் இவர்களது அவல நிலையைக் கருத்தில் எடுத்து இதற்குத் தீர்வு காண்பதற்காக மனிதாபிமான அடிப்படையில் முயற்சித்ததாகத் தெரியவில்லை.

நல்லாட்சியிலும் தமிழர்களை வருத்தித் துன்பப்படுத்தும் இனப்பாகுபாடுகளும் தமிழர்களைப் புறக்கணிக்கும் செயற்பாடுகளும் தொடர்கின்றன. பதவியிலுள்ள தமிழ் அமைச்சர்கள்கூட இதனைக் கண்டுகொள்ளாமல் உள்ளமை பாதிக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
« PREV
NEXT »

No comments