Latest News

September 27, 2016

தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பையும் அவர்களது படித்த பிள்ளைகளின் உழைப்பையும் சுரண்டும் அரசாங்கம்!
by admin - 0

மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களது உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படாதமையால் அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். 
இங்குள்ள மக்கள் மழை, வெயில், அட்டைக் கடி, பாம்புக் கடி, குழவிக் கொட்டு எனப் பல்வேறு கஸ்டங்களை அனுபவித்துத் தோட்டங்களில் வேலை செய்கின்ற போதிலும் இந்த மக்களுக்கான உரிய சம்பளம் வழங்கப்படாதமையினால் மக்கள் தமது வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது பல்வேறுபட்ட கஸ்டங்களுக்குள்ளாகி வருகின்றார்கள்.

இதனால் இந்த மக்கள் தமக்கான சம்பளத்தை அதிகரித்துத் தருமாறு அரசிடம் பல தடவைகள் கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார்கள் தற்போதும் தமது சம்பளத்தை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

மலையகத்தில் மக்களை ஏமாற்றி இந்த மக்களின் உழைப்பைச் சுரண்டியவர்கள் தற்போது இந்த மக்களின் கல்வி கற்ற பிள்ளைகளையும் ஏமாற்றி அவர்களின் உழைப்பையும் ஈவிரங்கமற்ற முறையில் சுரண்டி வருகின்றார்கள். 

மலையகத்தில் நிலவிய ஆசிரியர் பற்றாக் குறையைப் போக்குவதற்காக மலையகத்திலுள்ள படித்த இளைஞர், யுவதிகளை ஆசிரிய உதவியாளர்களாக நியமித்து அவர்களுக்கு வெறும் 6000 ரூபா சம்பளத்தை மாத்திரம் வழங்கி அவர்களுக்கு அரச உத்தியோகம் வழங்கியதாகக் கூறி அவர்களின் உழைப்பையும் அரசாங்கம் சுரண்டி வருகின்றது.

மலையகத்தில் படித்தவர்களாக இருந்தாலும் சரி படிக்காதவர்களாக இருந்தாலும் சரி அவர்களின் உழைப்பைச் சுரண்டி ஏமாற்றலாம் என்ற மனிதாபிமானமற்ற நிலையே காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட இந்த மக்களின் வாழ்வியலுக்கான மனிதாபிமானப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலை காணப்பட்டும் இந்த மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டே வருகின்றார்கள். 
« PREV
NEXT »

No comments