Latest News

September 24, 2016

பௌத்தர்கள் வாழாத இடங்களில் புத்த சிலைகள் எதற்கு ‘எழுக தமிழ்’ பேரணியில் வடக்கு முதல்வர் சி .வி ஆதங்கம்..
by admin - 0

முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் முன்னாள் போராளி ஆகியோர் பொதுச் சுடர் ஏற்றியதுடன் தமிழ்த் தாய் வாழ்த்தும் பாடப்பட்டு எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியது.

 

யாழில், முற்றவெளி மைதானத்தில் ஆரம்பமான எழுக தமிழ் பேரணியில் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராகிய இருதய வைத்திய நிபுணர் லக்ஸ்மன், பேரணியின் பிரகடணத்தை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது, பொது மக்கள் கைகளை உயர்த்தி ஆதரவினை வெளிப்படுத்தினார்கள்.

இதேவேளை, வட மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் உரை நிகழ்த்தினார்.
 

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

கொழுத்தும் வெயிலில் எழுக தமிழ் பேரணியில் வரலாறு காணாத மக்கள் ஒன்று குவிந்துள்ளனர்.

தமிழ் பேரணி ஆட்சியில் அல்லது அதிகாரத்தில் உள்ள எவரையும் எதிர்த்து நடாத்தப்படும் பேரணி அல்ல. நாம் எமது மத்திய அரசை எதிர்த்து இதை நடாத்தவில்லை.


ஏன் இலங்கைத் தமிழரசுக் கட்சியை எதிர்த்துக் கூட நடாத்தவில்லை. 

ஆனால் ஒன்றை மட்டும் குறிப்பிடக் கடமைப் பட்டுள்ளேன். அதாவது இன்றைய காலகட்டத்தில் பாராளுமன்றத்திற்குத் தெரியப்படுவதாலோ மாகாணசபைகளுக்குத் தெரியப்படுவதாலோ எமது உரிமைகளை நாம் வென்றெடுத்துக் கொள்ள முடியாது. மக்கள் சக்தி எமது அரசியல் பயணத்திற்கு அவசியம் கூறிப்பிட்டார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாத காலத்தின் அனர்த்த அழிவுகளின் பின்னரான தமிழ் மக்களின் விடிவுக்கான தீர்வு சம்பந்தமாக ஏற்கனவே எமது தேர்தல் விஞ்ஞாபனங்கள் பல கூறியுள்ளன.

 

அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் பாரிய முரண்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே சில அடிப்படைக் கொள்கைகளை கட்சிகளும் மக்கள் சமூகமும் ஏற்றுக் கொண்டால் எல்லோரும் சேர்ந்து வேலை செய்வது கடினமாக இருக்காது. 

கடந்த 2001ஆம் ஆண்டில் பல கட்சிகளை ஒன்று படுத்தும் 6 பேர் கொண்ட குழுவை கொழும்பில் அமைத்த போது சிவில் சமூகம் பெரும் பங்காற்றியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நான் அரசியலில் அப்போது இல்லாதிருந்தும் அவ்வாறான ஒருங்கிணைதலை அப்போதே வரவேற்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் ஏன்? எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? எமது பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா என்பது எமது முதலாவது கரிசனை.

 

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்குங் கேட்காதது ஏன்? அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகார பீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா?

 


போர் முடிந்து ஏழு வருடங்களின் பின்னர் கூட கொடூரமான பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகள் சிறைகளில் வாடுவது எம்மால் சகிக்க முடியாத தொன்றாக இருக்கின்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், புதிய நல்லாட்சி அரசாங்கத்தின் கீழும் 17க்கு அதிகமான சித்திரவதை நடவடிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றால் எமது கூட்டான மனோநிலைகளில் மாற்றமேற்படவில்லையா என்று கேட்கத்தேன்றுகின்றது.இராணுவமயமாக்கப்பட்டுள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன? தற்போதும் தமிழ் மக்களின் பல காணிகளை இராணுவத்தினர் அபகரித்து கொண்டுதான் உள்ளனர் இதனை ஏன் தடுக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 

முதலமைச்சரை தொடர்ந்து பல அரசியல் பிரமுகர்கள் இதன்போது உரை நிகழ்த்தியுள்ளனர்.

 

« PREV
NEXT »

No comments