இலங்கையில் உருவான அனைத்து அரசியல் யாப்புக்களுமே புவிசார் அரசியல் நலன்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் நலன்களுக்கு பாதகமாக வடிவமைக்கப்பட்டது என்று கூறும் இந்நூல் அனைத்து யாப்புக்களையும் அதற்கான நீண்ட வரலாற்றுப் பின்னணியில் இருந்து ஆராய்கிறது.
உள்நாட்டு அரசியல், அண்டைநாட்டு அரசியல், பிராந்திய அரசியல், சர்வதேச அரசியல், வெளி வல்லரசுகளின் பூகோளம் தழுவிய அரசியல் ஆகிய அனைத்து வகைச் சக்திகளின் அரசியல் நலன்களுக்காக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாய் அரசியல் யாப்பு ரீதியாக ஈழத் தமிழர்கள் பலியிடப்பட்டு வருவதை ஆதாரபூர்வமாக இந்நூல் விவரிக்கிறது.
காலத்திற்குக் காலம் இந்தியாவில் இருந்து இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படையெடுப்புக்களின் பின்னணியில் இந்தியா மீது சிங்களத் தரப்பினருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகால பகைமை உண்டு.
ஈழத்தமிழரை இந்தியாவுடன் இணைத்துப் பார்க்கும் சிங்களத் தரப்பினர் இந்தியாவிற்கு எதிரான தமது யுத்தத்தை முதலில் ஈழத்தமிழர் மீதே புரிந்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில் இலங்கையில் உருவாகும் அரசியல் யாப்புக்கள் அனைத்தும் இந்திய எதிர்ப்புத் தன்மையுடன் வடிவமைக்கப்படுவதால் அவை தமிழின எதிர்ப்புத் தன்மை கொண்டவையாகவும் உருவாக்கப்படுகின்றன.
அதேவேளை இந்தியா மீது பகைமை கொண்ட வெளி அரசுகளும் கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கைத் தீவின் மீது தத்தமக்கு ஏற்ற நலன்களின் அடிப்படையில் தமிழருக்கு எதிரான இலங்கை அரசின் ஒடுக்குமுறைகளை மேற்படி அனைத்து அரசுகளும் ஆதரத்தும், அனுசரித்தும் நடக்கின்றன.
இதனால் அனைத்து வழிகளிலும் அதாவது உள்நாட்டு ரீதியாகவும், அயல்நாட்டு ரீதியாகவும், பிராந்திய ரீதியாகவும், பூகோள வல்லரசு ஆதிக்க ரீதியாகவும் அனைத்து சக்திகளினாலும் பெரிதும் பலியிடப்படுபவர்களாக ஈழத் தமிழர்கள் காணப்படுகின்றனர்.
இதனால் எப்போதும் இத்தகைய பின்னணியில் ஈழத்தமிழர்களை பலியிடும் யாப்புக்களே இலங்கையில் உருவாகிவருகின்றன என்பதை நீண்ட வரலாற்றுப் பின்னணியிலும், சர்வதேச அரசியல் பின்னணியிலும், சர்வதேச மற்றும் பூகோள அரசியல் பின்னணியிலும் வைத்து இந்நூல் அதன் இரத்தமும் துயரமும் தோய்ந்த உண்மைகளை ஆராய்கிறது.
இத்தகைய அனைத்து விடயங்களையும் ஆராயும் இந்நூல் புவிசார் அரசியல் பிரச்சனைக்கான தீர்வில் இருந்தே இனப்பிரச்சினைக்கான அரசியல் யாப்பு தீர்வு வடிவமைக்கப்பட வேண்டுமென்றும்,
பகைமையின் அளவே தீர்வின் அளவை தீர்மானிக்கும் என்பதால் இனப்பகைமையின் இரத்தம் தோய்ந்த அளவைக் கருத்தில் கொண்டே அதற்கானத் தீர்வைக் காணவேண்டும் என்றும் முற்றிலும் அறிவுபூர்வமாக எடுத்துரைக்கிறது.
No comments
Post a Comment