”நில ஆக்கிரமிப்பிற்கான ஆயுதமாக புத்தர் சிலைகள் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்” என வடக்கு மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார்.
இரணைமடுவில் புத்தர் சிலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டுமென வட மாகாண சபையில் அண்மையில் ஏகமனதாக பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இரணைமடு தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்லவென்றும், வடக்கு முதல்வரின் தேவைக்கேற்ப செயற்பட முடியாதென்றும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மயூரன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
”வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தர்களை மேற்கோள்காட்டி புத்தர் சிலைகளை ஆங்காங்கே நிறுவி வருகின்றர். தமிழ் மக்கள் புத்தபகவானுக்கு எதிரானவர்கள் அல்லர். அதேபோன்று இன்றும் பௌத்தர்கள் இந்துக் கடவுளர்களை வணங்கி வருகின்றனர்.
எனவே மதம் சார்ந்து எந்த முரண்பாடுகளும் இல்லாத இந் நாட்டில், சில பேரினவாதிகள் மக்கள் மத்தியில் மதவாதத்தை தூண்டும் விதமாக செயற்படுகின்றனர். புத்தபெருமானை வணக்கத்திற்குரிய கடவுளாக அன்றி வடக்கு கிழக்கின் ஆக்கிரமிப்பு சின்னங்களாக மக்கள் மத்தியில் தோற்றுவிக்கின்றனர். இதனை பேரினவாதிகள் நிறுத்திக்கொள்ளவேண்டும்.
இவ்வாறான ஒரு நிலையில், ரஞ்சன் ராமநாயக்க தனது சிங்கள மேலதிக்க எண்ணத்துடன் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரவேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment