Latest News

July 13, 2016

தமிழர்களுடைய வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும்! சிறீதரன் எம்.பி
by admin - 0

தமிழ் மக்களுடைய வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும். எமது வரலாறு திட்டமிடப்பட்ட முறையில் அழிக்கப்பட்டு வருகின்றது. அதனைத் தடுத்து நிறுத்தி எமது வரலாற்றைப் பேணிப் பாதுகாப்பதற்குரிய பொறுப்பு தமிழர்களாகிய எங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது. என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கனகபுரம் சிறீகாந்தா சனசமூக நிலையத்தில் சிறீகாந்தா அவர்களின் உருவச் சிலை திறப்பு விழா நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தார்.

கிளிநொச்சி கனகபுரம் சிறீகாந்தா சனசமூக நிலையத்தின் புதிய கட்டிடத் திறப்பு விழாவும் சிறீகாந்தா அவர்களின் உருவச் சிலை திரை நீக்க நிகழ்வும் நேற்றைய தினம்  (10,07.2016) காலை 9.30 மணியளவில் ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளர் நா.சோதிநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்,

கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப் பகுதிக்குதியை மையப்படுத்தி அமைந்துள்ள கனகபுரம் கிராமத்திற்கென்றொரு தனிச் சிறப்பு உண்டு. தமிழர் தம் பூர்வீக வாழ்விடமாகக் காணப்படும் கனகபுரம் கிராமம் எவ்வாறு தமிழர்களால் உருவாக்கப்பட்டது என்பது பற்றியும் இக்கிராமத்தின் உருவாக்கத்தின் முன்னோடியாகக் காணப்படும் முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபர் சிறீகாந்தா அவர்களின் பங்களிப்பு எப்படி இருந்தது என்பது பற்றியும் அவரது வாழ்நாட்களில் எப்படி மக்களுக்கு உதவிபுரிந்தார் அவரது புகழ் இன்றைக்கு இக்கிராமத்தில் மக்களால் சிலை எடுக்குமளவுக்குச் சிறந்து காணப்படுகின்றது. இப்படியான மகான்கள் மக்களது நினைவுகளில் இருந்து நீக்கமற நிலைத்திருப்பார்கள். 

தமிழ் மக்களுக்கென்றொரு தனித்துவம் உண்டு, வரலாறு உண்டு. எமது வரலாற்றில் யோகர் சுவாமிகள் போன்ற சித்தர்களின், மகான்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். எமது இருப்புக்காக எமது விடுதலைக்காக தம்மையே கொடை செய்த எமது மாவீரர்களின் வீர வரலாறுகளும் என்றைக்கும் எம் மனங்களில் நிறைந்திருக்கும். இந்தக் கனகபுரம் கிராமத்திற்கென்றொரு தனித்துவமான வரலாற்றுச் சிறப்பு உண்டு. தமிழர்களது விடிவுக்காகப் போராடி வீரமரணமடைந்த மாவீரர்களைப் விதைத்த மாவீரர் துயிலும் இல்லம் இங்கே இருக்கின்றது. இது தமிழர்களது வீர வரலாற்றை உலகறியக் கூறி நிற்கின்றது. எமக்காப் போராடிய எமது இனத்திற்காக உழைத்த எமது இருப்புக்காக தன்னலங்கருதாது செயற்பட்டவர்களை நாம் எமது வரலாற்றில் போற்றி எமது வரலாற்றுத் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் எம்மாலானவற்றைச் செய்யவேண்டும் என அவர் தனது உரையில் மேலும் தெதரிவித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கரைச்சிப் பிரதேசசபைச் செயலாளர் க.கம்சநாதன், கௌரவ விருந்தினர்களாக சனசமூகநிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி நோ.ஜெயமாலினி, கனகபுரம் கிராம அலுவலர் செல்வி க.விஜிதா, வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் திருமதி மரியதயாழினி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர்-ஆசிரியர் கதிர்மகன் எனப் பலரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments