Latest News

June 20, 2016

'நீந்திக்கடந்த நெருப்பாறு' காலத்தின் தேவை அறிந்து உருவாக்கப்பட்ட ஆவணம்! முதலமைச்சர் விக்னேஸ்வரன்.
by admin - 0

மூத்த படைப்பாளி நா.யோகேந்திரநாதன் எழுதிய நீந்திக்கடந்த நெருப்பாறு என்னும் தமிழரின் போராட்ட, வாழ்க்கை வரலாறு கூறும் நூல் வெளியீட்டு விழா நேற்றைய தினம் 18ம் திகதி சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில்  யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவ கலாநிதி திரு.சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால் நிகழ்வில் கலந்துகொள்ளாதுவிட்டாலும் இந்நிகழ்வில் தான் ஆற்றவிருந்த உரையினை எழுதி அனுப்பி வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலுராசா மூலம் வாசிப்பித்திருந்தார். 
அவரது உரையில்,

இந்த நிகழ்வில் பங்கு பற்றுவதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். ஆனால் திடீர் சுகவீனம் என்னைக் கட்டிலில் படுக்க வைத்து விட்டது. மிக்க கஷ;டத்துடன்தான் இன்று காலை அதிமேதகு ஜனாதிபதியின் நிகழ்வில் கலந்து கொண்டேன். என் பேச்சை ஏற்கனவே எழுதி வைத்திருந்ததால் கௌரவ கல்வி அமைச்சரைக் கொண்டு அதை வாசிக்கச் செய்கின்றேன். வராமைக்கு வருந்துகின்றேன்.

நீந்திக் கடந்த நெருப்பாறு என்ற இந்நூல் யதார்த்த பூர்வமாக போராட்டத்தை ஏற்றுக்கொண்ட மக்களின் உணர்வலைகளையும் விடுதலைப் போராட்டத்தின் பக்கம் இருக்கக் கூடிய நியாயங்கள் மக்களின் பண்பு இடம்பெயர் அவலங்கள், போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட துன்பங்கள் இவை அனைத்தையும் சித்தரிக்கின்றது.

சாதாரண மானுட வாழ்வில் ஏற்படக் கூடிய அன்பு பாசம் காதல் என்ற பல விடயங்களையும் உண்மைச் சம்பவங்களுடனும், கிராமிய வாழ்க்கை முறைகளில் காணப்படக்கூடிய சிறப்பியல்புகளையும் தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந் நூலை வெளியிடுவதில் பெரு மகிழ்வடைகின்றேன்.

மிக நீண்ட காலம் வானொலித் துறையில் பணியாற்றி ஒலிபரப்புத் துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவரும் வானொலிப் பிரதி எழுதுதல் வானொலி நிகழ்ச்சிகள் தயாரித்தல் என பல்வேறு அனுபவங்களைக் கொண்டவரும் சிறந்த சிறுகதை எழுத்தாளர் நாவல் ஆசிரியர்அ ரசியல் ஆய்வுக் கட்டுரையாளர் என பல்துறைத் தேர்ச்சி பெற்ற திரு.நா.யோகேந்திரநாதன்
'நீந்திக் கடந்த நெருப்பாறு' என்ற இந்த நெருப்பாற்றில் இறங்கி தம்மையும் இதன் ஓர் அங்கமாக்கியது மட்டுமன்றி போராட்ட வரலாற்றின் பல உண்மைச் சம்பவங்கள், போராட்ட செயற்பாடுகளினால் கலங்கித் துடித்த மக்களின் குமுறல்களையும் அதனோடிணைந்த இன்னும்பல செய்திகளையும் மிக அழகாக கோர்வை செய்து நாவலாக எமக்குத் தந்திருப்பது போராட்ட வரலாற்றின் நேரான முகத்தை எமக்குக் காட்டுவதாக அமைந்துள்ளது. நெருப்பாறினூடு எம்மக்கள் நீந்திக் கடந்ததை எடுத்துக் காட்டுகிறது.

எந்தவொரு படைப்பிற்கும் அதற்குரிய தனி அழகு ஒன்றிருக்கும். நூலை வெளிக்கொண்டு வந்திருக்கும் விதம் விடயம் சார்ந்த நுண்ணிய அறிவு அதனை நடைமுறைப்படுத்த எடுக்கும் கடுமையான முயற்சி ஆகியவை அந்தப் படைப்பினை சிறப்புற நிறைவு செய்வதற்கு மூல காரணிகளாக அமைகின்றன.

அந்த வகையில் இந் நூலை படைப்பாக்கம் செய்வதற்கு திரு.யோகேந்திரநாதன் அவர்கள் இந் நிகழ்வின் ஓர் அங்கமாகத் தன்னை மாற்றிக் கொண்ட காரணத்தினாலும் அவருடன் இணைந்து பணியாற்றிய யாழ்.போதனா வைத்தியசாலையின்ப ணிப்பாளரும் இன்றைய இந்த நிகழ்வின் தலைவரும் போராட்ட இறுதி நேரம் வரை மக்கள் தொண்டில் தம்மை இணைத்துக் கொண்டு தமது உயிரையும் துச்சமென மதித்து பல உயிர்களைக் காப்பதற்கு காரணமாகவிருந்த பலரின் அனுபவங்களையும் ஒன்று திரட்டி ஒரு யதார்த்த பூர்வமான நாவலாக வெளியிட்டிருப்பது வாசகர்களுக்கு ஒரு முழுமையான அனுபவப் பகிர்வாக இருக்க முடியும் என்பதில் ஐயமில்லை.

காலத்தின் தேவை அறிந்து உருவாக்கப்படும் இவ்வாறான படைப்புக்கள் எமது இளைஞர் யுவதிகளின் உணர்வலைகளையும் மக்கள் பால் அவர்கள் கொண்டிருந்த அதீத பாசம் பற்றுக்களையும் சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக மேற்கொண்ட உச்ச முயற்சிகளையும் எமது எதிர்கால சந்ததிக்கு எடுத்துச் செல்லக் கூடிய பெறுமதி வாய்ந்த ஆவணங்களாக அமைவன.

இந் நூல் போராட்டங்கள் பற்றிய பதிவுகளையும் மற்றும் அதனுடன் இணைந்த நிகழ்வுகளையும் மட்டும் கோடிட்டுக்காட்டாது இந் நிகழ்வுகளுக்கும் மேலாக எமது பூர்வீகக் கிராமங்கள் இயற்கை வனப்புக்கள் அவை கொண்டிருக்கக் கூடிய சிறப்பியல்புகள் மற்றும் இப் பகுதியில் வாழ்ந்த எமது முதியவர்கள் கொண்டிருந்த அனுபவங்கள் அவர்களின் வனம் சார்ந்த அறிவுத் திறன்கள் ஆகிய பல இயற்கையோடொத்த அனுபவப் பகிர்வுகளையும் இங்கே பகிர்ந்து கொண்டிருப்பது இன்னோர் சிறப்பம்சமாகக் கொள்ளப்படலாம்.

இன்றைய சமூகமானது எந்தவொரு விடயத்தையும் உற்று நோக்கி ஆழ்ந்து ஆராயாது அது பற்றிய ஒரு முடிவுக்கு வந்து விடுகிறது. அல்லது அவை பற்றி அறியாமலே இருந்து விடுகின்ற ஒரு தன்மை பலராலும் உணரப்பட்டுள்ளது. நாம் எவ்வளவுதான் கல்வி அறிவில் வளர்ச்சியடைந்தாலும் இந்தப் பின்னடைவான நிலையில் மாற்றம் பெற முடியாமல் சிக்கித் தவிக்கின்றோம்.
ஆனால் எமது முன்னோர்கள் வான சாஸ்திரம் மற்றும் பூகோள அமைப்பு உயிரினங்களின் தன்மை விலங்குகள் நடமாட்டம் பற்றிய அனைத்து அறிவுகளையும் தமது அனுபவ பாடங்களின் ஊடாகவும் இயல்பாகவே அவர்களுக்குரிய வலிமை, மதிநுட்பம் ஆகியவற்றினூடாகவும் அறிந்து கொண்டு அதற்கொப்ப செயற்பட்டு வந்த தன்மையை முருகர், சோமர் ஆகிய பாத்திரங்கள் எடுத்தியம்புகின்றனர்.

அதே போன்று நட்புக்கு இலக்கணமாக கணேஷ சிவம் ஆகிய இருவரையும் தூய காதலை வெளிப்படுத்துகின்ற பாத்திரமாக என்ற பாத்திரத்தையும் ஆசிரியர் சிருஷ;டித்திருப்பது வரவேற்கப்பாலது. கிராமத்தவர்களிடையே காணப்படக்கூடிய நாட்டார்பா டல்களையும் அப் பாடல்களின் மூலம் மக்களுக்கும் உலகிற்கும் எடுத்துச் சொல்லக் கூடிய தத்துவங்கள் இப்பாடல்களை தமது அன்றாட தொழில்களுடன் சேர்த்து களைப்பு மிகுதியை உணராமல் பாடிக் கொண்டே வேலை செய்கின்ற முறைமை ஆகியன தத்ரூபமாக எடுத்து இயம்பப்பட்டுள்ளன.
இந்நூலின் ஆய்வுரையை வழங்குவதற்காக ஆசிரியர்கள் லோகேஸ்வரன் மற்றும் சத்தியானந்தன் ஆகிய இருவரும் இங்கே வருகை தந்திருக்கின்றார்கள். அவர்கள் இப் புத்தகத்தின் ஆரம்பந் தொட்டு இறுதி வரையான படைப்புக்கள் பற்றி ஆய்வுரை நிகழ்த்துவார்கள் எனினும் நான் இப்புத்தகத்தில் இருந்து வாசித்த பகுதிகளில் எனது மனதைத் தொட்ட சில விடயங்களை மட்டும் இங்கே கோடிட்டு உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.
ஒரு நூலைப் பார்த்த மாத்திரத்திலேயே அதை மிளிரச் செய்வதற்கு இரண்டு முக்கிய அம்சங்களை எடுத்துக் கூறலாம். ஒன்று அந்நூலின் தலையங்கம் இரண்டாவது அந்நூலின் அட்டை வடிவமைப்பு. இவை இரண்டும் அந்நூலின் உயர்வு பற்றி எம்மிடையே தனியானதொரு கவர்ச்சியை கொண்டுவருவன. அந்த வகையில் இந் நூலுக்கு வழங்கப்பட்ட 'நீந்திக் கடந்த நெருப்பாறு' என்ற தலைப்பு மிகப் பொருத்தமானதும், எடுத்தவுடனேயே அனைவரின் உள்ளத்தைத் தொடும் அளவிற்குமாக அமைந்துள்ளது. அட்டை வடிவமைப்பு மற்றும் அச்சடிக்கப்பட்ட காகிதங்கள் இந் நூலைக் மேலும் ஒரு படி மெருகூட்டுகின்றன.

அத்துடன் ஒரு நூலை சிறப்புறக் கொண்டு செல்வதற்கு அந் நூலில்ப யன்படுத்தப்படும் சொல்லாடல் முக்கிய பங்கை வகிக்கின்றது. நாம் சொல்ல வந்த கருத்துக்களை சொல் நயத்துடனும் கருத்துப் பிறழ்வின்றியும் இலகு சொல் நடையுடன் எடுத்துக் கூறுவது நூலின் சிறப்பை உயர்த்துவதுடன் தாம் கூற வந்த கருத்தையும் முழுமையடையச் செய்யும். அந்த வகையில் இந் நூலில் சிறந்த சொல்லாடல்;, சொல் நயம் ஆகியன மிகச் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன.

இந்நூலை வாசிப்பவர்கள் இதன் இரண்டாம் பகுதி எப்போது வெளிவரும் என எதிர்பார்க்கக் கூடிய அளவிற்கு இந்நூல் அமைந்திருக்கின்றது. எனவே இத்துணை சிறப்புக்களும் பெற்ற இந்த நூல் மக்களிடையே சிறந்த நன்மதிப்பையும் செல்வாக்கையும் செலுத்தும் என எண்ணுகின்றேன்.
அடுத்து எம்மிடையே இன்று காணப்படக்கூடிய சில தவறான சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றி உங்களுடன் என் கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டு எனது உரையை நிறைவுக்குக் கொண்டுவரலாம் என நினைக்கின்றேன்.

தமிழர் என்ற ஒரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று முன்பு கூறி வைத்தார்கள். தமிழ் இனம் தனக்கே உரிய ஒரு தனித்துவத்துடன் சட்டத்தை மதிப்பவர்களாக நாட்டின் நற்பிரஜைகளாக ஏனையோருக்கு முன்மாதிரியானதாகவுமுள்ள ஒரு சமூகமாக வாழ்ந்த காலம் மாறி இன்று மிகப் பின்தங்கிய ஒரு சமூகமாக மாற்றப்பட்டிருப்பது மிகவும் வேதனைக்குரியது.

அன்று கல்வியால் உயர்ந்த சமூகம் இன்று காடைத் தனத்தில் உயர்ந்திருக்கின்றது. பண்பாட்டு ஒழுக்க நெறியுடன் வாழ்ந்த பலரின் பிள்ளைகளும் குடும்பங்களும் இன்று ஒழுக்க நெறி தவறி போதைப்ப ழக்கங்களுடன் தமது போக்கில் வாழத்தலைப்பட்டதன் விளைவே எமது சமூகம் இவ்வளவு பின்னடைவுகளை சந்திக்க வழிவகுத்துள்ளது.
எமது மக்கள் எவ்வாறு வாழ வேண்டும் விடுதலை பெற வேண்டும் என்ற நோக்கங்களுக்காக போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதோ அவை அனைத்தும் மழுங்கடிக்கப்பட்டு சம உரிமைக்காக போராடத் தலைப்பட்ட சமூகம் இன்று மூன்றாம் தரப் பிரஜைகளாக வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலை மாற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமானதும் அவசரமானதொன்றுமாகும். இம் மாற்றம் தனியொருவராலோ அல்லது அரசியல் மட்டத்திலோ சட்டத்தின் இறுக்கத்தினாலோ முழுமையாக களைந்துவிட முடியாது. மாறாக நாம் ஒவ்வொருவரும் எம்முடைய உயர் நிலை பற்றி எமக்கிருக்கக் கூடிய கௌரவம் பற்றி வாழ்வில் சாதனையாளர்கள் படைத்த சாதனைகளும் அவற்றிற்காக அவர்களின் கடின உழைப்புக்கள் பற்றியும் அறிந்து கொள்வது மூலமும் சிந்திப்பதன் மூலமும் அவ்வழியில் ஒழுகத் தலைப்படுவது மூலமுமே இம்மாற்றத்திற்கான வழிமுறையை ஏற்படுத்தலாம்.


எப்படியும் வாழலாம் என்ற நிலை மாற்றப்பட்டு இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வரையறைக்குள் மனக்கட்டுப்பாடுகளையும் தூய சிந்தனைகளையும் நிலை நிறுத்தி வாழ முற்படுகின்ற போது எமது வாழ்வு சிறக்கும், தூய சிந்தனைகள் உதயமாவன. அவற்றின் வழியில் பல சிறப்புக்களும் எம்மை வந்தடையும் எனத் தெரிவித்து சுபீட்சமானதும் நிம்மதியானதும் பயமற்றதுமான ஒரு இயல்பு வாழ்க்கை எமக்கு விரைந்து கிட்ட வேண்டும் என வாழ்த்தி எனது சிற்றுரையை முடிக்கின்றேன். என்றுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா, வடக்குமாகாணசபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, ப.அரியரத்தினம் மற்றும் இலக்கியப் படைப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், மக்கள் எனப்பெருமளவானவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
« PREV
NEXT »

No comments