Latest News

June 22, 2016

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கத்தின் உரை
by admin - 0

 1948 முதல் இலங்கையினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப் பட வேண்டும்” என மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் 21-6-2016 அன்று  உரையாற்றினார்.

We request the international community to come forward to constitute international tribunal on srilanka to investigate the genocidal crimes committed against Tamils who are fighting for independence since 1948.

- May 17 Movement Coordinator Comrade Thirumurugan Gandhi at UNHRC.

உரையின் தமிழாக்கம்:
-----------------------------------------------
வணக்கம்.

நீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் சுதந்திரத்திற்கான ஐ.நா வின் சிறப்பு அதிகாரியான மோனிகா பிண்டோ இலங்கைக்கு சென்று வந்திருக்கும் சூழலில் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைத் தாக்குதல் பற்றி நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

ஜூன் 13 இரவு அன்று, 100 க்கும் மேற்பட்ட சிங்கள சிறைச்சாலை காவலர்களும் , பயிற்சி மாணவர்களும் கொழும்பு சிறையின் தங்கு விடுதிக்கு சென்று, சமீபத்தில் சிறைச்சாலை காவல் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிக்காக தங்கி இருந்த 40 தமிழர்களை கடுமையாக தாக்கினர். இனப்படுகொலை நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட அந்த கொலைவெறித் தாக்குதல் கொழும்பு சிறையின் முன் அமைந்திருக்கும் விடுதியில் நடைபெற்றது. அந்த வளாகத்திலேயே அந்த 40 தமிழர்களும் ஆடைகள் களையப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதில் எட்டு தமிழர்கள் கடுமையாக காயமடைந்தனர். யாழ்பாணத்தைச் சேர்ந்த 23 வயதான வ.வசந்தராஜா, தலையில் அடிபட்ட நிலையில் அவரின் நிலைமை என்ன ஆனதென்றே தெரியவில்லை.

திரு. சண்முகம் குரு என்ற தமிழ் அரசாங்க கிராம அலுவலர், 1 ஜூன் 2016 அன்று, இலங்கை இராணுவ அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டுவதைப் பற்றி கேள்வி எழுப்பியதற்காக கடுமையாக தாக்கப்பட்டார். அதன் பின் இராணுவ உளவுப் பிரிவை சேர்ந்த அதிகாரிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் சட்டத்திற்கு புறம்பான மரக்கடத்தல் பற்றிய துப்பு கொடுத்த குடும்பங்களையும் அதே உளவுப் பிரிவு அதிகாரிகள் அச்சுறுத்தினர்.


”International Truth and Justice Project” இன் தலைவரும், இலங்கையில் பொறுப்பாண்மைக்காக ஐ.நா பொதுச்செயலாளர் அமைத்த வல்லுனர் குழுவில் இடம்பெற்றவருமான யாஸ்மின் சூகா, 2016 ஜனவரி மாதம் அளித்த அறிக்கையில், இலங்கையில் நடக்கும் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் ரீதியான சித்திரவதைகளை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று சொன்ன புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பிறகும் இவை (கொடுமைகள்) தொடர்கின்றன என்று சுட்டிக்காட்டி உள்ளார். இலங்கை இராணுவத் துறை அதிகாரிகள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டிருப்பதையும் அந்த அறிக்கை பதிவு செய்தது.

அதே அறிக்கையில் இலங்கையில் இன்னும் வெள்ளை வேன் கடத்தல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை பதிவு செய்திருந்தார். கடந்த சில மாதங்களில் மட்டும் குறைந்தது இரண்டு வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக யாஸ்மின் சூகா தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கின்றார். “இந்த வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் இலங்கையில் சித்திரவதை மற்றும் அடக்குமுறை நிலவுவதை மட்டும் காட்டவில்லை. ஆனால் அவை பரந்துபட்ட அளவில் அமைப்பு ரீதியாகவே நிலவுவதை காட்டுகின்றது. இலங்கையின் காவல் துறை மற்றும் இராணுவத்துறை ஆகியவற்றில் சீராக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு இயந்திர ரீதியில் இவை நடைபெறுகின்றன. தமிழர்களை அச்சுறுத்தவும் அடக்கவும் இவை பயன்படுகின்றன. இலங்கையின் புதிய அரசாங்கம் சொல்வது போல, அரசு அமைப்பில் உள்ள ஒரு சில கெட்டவர்களால் மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல அது. மாறாக ஒட்டு மொத்த அமைப்பும் சீரழிந்து இருப்பதான் காரணமாகவே இவை நடைபெறுகின்றன” என்று யாஸ்மின் சூகா தன்னுடையை அறிக்கையில் கூறியுள்ளார்.

ஆக இது இலங்கையில் இருக்கும் சில ஆட்சியாளர்களால் வரும் பிரச்சனை அல்ல. மாறாக இலங்கையில் இருக்கும் அமைப்பு ரீதியான சிக்கல். 60 ஆண்டு காலமாக தமிழர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இலங்கை அரசு தன்னை பட்டைத் தீட்டி தயார் நிலையில் உள்ளது. உலக சமூகம் இதை இனப்படுகொலையின் ஒரு அங்கம் என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்க்காவிட்டால், இலங்கை தீவை ஆட்கொண்டிருக்கும் சிங்கள பெளத்த இனவெறியில் இருந்து அப்பாவித் தமிழர்களை காப்பாற்ற முடியாது. 1948 இல் இருந்து விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திய இனப்படுகொலை குறித்து விசாரிக்க, சர்வதேச சமூகம் ஒரு சர்வதேச தீர்ப்பாயத்தினை அமைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி
---------------------------------------------------------------------------------------------
காணொளி

« PREV
NEXT »

No comments