Latest News

June 24, 2016

தமிழக சிறப்பு சித்ரவதை முகாமிலிருந்து முதல்வர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு ஒரு உருக்கமான வேண்டுகோள்..!!
by admin - 0

தாயகத்தில் இருந்து உயிர் தப்பி மனைவி பிள்ளைகளோடு அடைக்கலம் தேடி ஏதிலிகளாக தமிழகம் வந்தோம். 

20 வருடங்களுக்கு மேலாக அகதி முகாம்களில் தஞ்சம் என இருந்த எம் மீது அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டதாகவும், விடுதலைப்புலிகளுக்கு உதவியதாகவும் கூறி சிறப்பு முகாம் எனும் தடுப்பு முகாமில் பல வருடங்கள் குடும்பத்தில் இருந்து பிரித்து தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம்.

அகதி முகாம்களில் வாழ்ந்த எமக்கு தமிழக அரசால் தரப்படும் சொற்ப பணம் போதாத காரணத்தினாலும் எமது பிள்ளைகளை கல்வி கற்க வைக்கவேண்டிய கட்டாயத்தாலும் நாளாந்தம் கூலி வேலைக்கு சென்று உழைத்து குடும்பத்தை பார்த்து வந்த நாம், சிறப்பு தடுப்பு முகாமில் பல வருடங்கள் அடைக்கப்படுவதால், எமது குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் வாழ வேண்டியுள்ளதோடு, ஆண் துணை இல்லாமல் எங்கள் மனைவிகளும் சமுதாயத்தில் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் வாழ்கிறார்கள்.

ஐயா! நாங்கள் தவறு செய்திருந்தால் எம்மை சிறையில் வைத்து தண்டிக்கட்டும்.. நாம் அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறோம். 

இவ்வாறு சிறப்பு முகாம் எனும் பேரில் பல வருடங்கள் அடைத்து வைத்து தண்டிப்பது எவ்விதத்தில் நியாயம்..??

இந்த சிறப்பு தடுப்பு முகாமில் எட்டு வருடங்களாகவும், இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளோம்.

நாம் மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவிடம் எமது நிலைமைகளை கூற பல வழிகளில் போராடினோம். ஆனால், அவரின் பார்வைக்கு எமது நிலைமைகள் செல்லவில்லை என்பது மிகவும் வேதனையளிக்கிறது. 

தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் எமக்காக அவ்வப்போது குரல் கொடுத்தாலும், தடுப்பு முகாமில் உள்ளவர்களின் விடுதலை கேள்விக் குறியாகவே உள்ளது.

நாம் தங்களிடம் வேண்டுவது ஒன்றை மட்டுமே! எம்மை எமது குடும்பத்தோடு சேர்ந்து வாழ அனுமதி பெற்று தாருங்கள். நாம் கொலையோ அல்லது போதைவஸ்து கடத்தலோ, பாலியல் வல்லுறவோ எந்த குற்றமும் செய்யவில்லை. 

இறுதி யுத்தத்தில் தமிழகத்தில் இருந்து மருந்துப்பொருட்கள் அனுப்பியதும், அவுஸ்ரேலியா செல்ல முற்பட்டோம் என்பதற்காக இப்படி பல வருடங்கள் தண்டிக்கப்படுகிறோம்.

ஐயா! பல வருடங்களாக நாம் படும் துன்பங்களை எமது தாயக அரசியல் தலைவர்கள் அறிந்திருந்தும் கூட இன்று வரை தமிழக முதலமைச்சருடனோ அல்லது மத்திய அரசுடனோ எமது விடுதலைக்காக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. 

இவ்வளவு காலமும் நாம் பட்ட இன்னல்களுக்கு விடிவு கிடைக்கும் என்று, இறுதி நம்பிக்கையாக தங்களையே நம்பியுள்ளோம் ஐயா

« PREV
NEXT »

No comments