ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருக்கின்ற இன்றைய அரசாங்கத்திற்கு தேசிய அரசாங்கம் என்றும், நல்லாட்சி அரசாங்கம் என்றும் பெயர்களை சூட்டியுள்ளனர். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அரசாங்கத்தின் பங்காளிகளாக இருக்கின்றன. இவ்விரு கட்சிகளும் தங்களினால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதென்று சொல்லிக் கொண்டிருக்கின்றன. தேசிய அரசாங்கம், நல்லாட்சி, பங்காளிகள் என்று அழகாக பேசிக் கொண்டாலும் முஸ்லிம்களினால் நிம்மதியாக வாழக் கூடிய சட்ட அமுலாக்கம் நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.
முஸ்லிம்களின் மீதான கெடுபிடிகளும், நெருக்குவாரங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லிம்களின் மீது இனவாத அமைப்புக்களினால் திட்டமிட்டவாறு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அநியாய செயற்பாடுகளையிட்டு அரசாங்கமோ, பங்காளிக் கட்சிகளோ பெரிதாக கவலை கொள்வதாகத் தெரியவில்லை. பங்காளிக் கட்சிகள் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக் கூடாதென்பதில் எடுத்துக் கொள்ளும் அக்கறையும், ஆர்வமும் முஸ்லிம் சமூகத்தின் மீதான விரோத செயற்பாடுகளில் காட்டுவதில்லை.
மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியை வீழ்த்த வேண்டுமென்பதில் முஸ்லிம்கள் பெரும் குறியாக இருந்தார்கள். நாட்டில் விலைவாசி அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. குடும்ப ஆட்சி நடைபெறுகின்றது.
ஊழல்கள் நிறைந்துள்ளன என்பதற்காக மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சியை மாற்ற வேண்டுமென்று முஸ்லிம்கள் துணியவில்லை. முஸ்லிம்களின் மீது திட்டமிடப்பட்ட வகையில் இனவாத அமைப்புக்களால் முஸ்லிம்களின் மதவிழுமியங்களில் தேவையற்றவாறு, நீதிக்குப் புறம்பாக முஸ்லிம்கள் என்ற ஒரேயொரு காரணத்திற்காக தலையீடுகளைச் செய்தன. முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. பள்ளிவாசல்களுக்குள் பன்றியின் மாமிசம் மற்றும் இரத்தம் வீசப்பட்டன. குர்ஆன் தீயிட்டு கொளுத்தப்பட்டது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டன. முஸ்லிம்களின் வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்யக் கூடாதென்று கேட்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிராக முக்கிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவைகள் போதாதென்று அளுத்கம, பேருவளை, தர்கா நகர் பிரதேசங்களில் முஸ்லிம்கள் மீது பகிரங்கமாக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை போன்ற காரணங்களுக்காகவே முஸ்லிம்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று தீர்மானித்து மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தார்கள்.
முஸ்லிம்கள் எதிர்பார்த்தவாறு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நாட்டில் நல்லதொரு சூழல் இன்றைய அரசாங்கத்தின் ஆரம்பத்தில் காணப்பட்டது. ஆனால், அந்நிலை படிப்படியாக குறைவடைந்து கொண்டு வந்து மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தை நினைவுபடுத்துவது போன்று முஸ்லிம்களின் மீது நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால், பேருவளை, அளுத்கம, தர்கா நகர் போன்ற இடங்களில் நடைபெற்றதனைப் போன்று இன்னுமொரு இடத்தில் முஸ்லிம்களின் மீது பகிரங்க தாக்குதல்கள் நடைபெறுமா என்ற அஞ்ச வேண்டியவர்களாக முஸ்லிம்கள் உள்ளார்கள்.
வதந்தி
தற்போது அடங்கி, ஒடுங்கி இருந்த இனவாத அமைப்புக்கள் மீண்டும் தங்களின் குணங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. கண்டி – மடவளை பகுதியிலுள்ள மிகவும் பிரபல்யம் வாய்ந்ததொரு முஸ்லிம் பாடசாலையில் சிங்கள ஆசிரியர்களும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இனவாதம், மதவாதம், மொழிவாதம் போன்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல் அங்கு கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் தமது ஒற்றுமையை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். அதிபரின் இடமாற்றம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையை பயன்படுத்திக் கொண்ட இனவாதிகள் சிங்கள ஆசிரியர் ஒருவருக்கு ஜிஹாத் என்ற பெயரில் கடிதமொன்றினை அனுப்பியுள்ளார்கள். இதனால், சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்களிடம் ஜிஹாத் என்ற அமைப்புள்ளதென்று காட்டி முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையே மோதல்களை ஏற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டது. இக்கடிதம் போலி என்றும், ஜிஹாத் அமைப்பு உள்ள தென்பது வதந்தி என்றும் நிரூபிக்கப்பட்டது. இவ்விடயம் பற்றி சி.ஐ.டியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.
பாடசாலை கட்டடத்திற்கு எதிர்ப்பு
வெலிமடையில் நகரில் அமைந்துள்ள முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் கனிஷ்ட பிரிவினை தம்பவின்ன என்னும் இடத்திற்கு மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது. இதற்கான காணியை கல்வி அமைச்சு ஒதுக்கியிருந்தது. இதற்கமைய தம்பவின்னவில் வெலிமடை முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் கனிஷ்ட பிரிவிற்கான கட்டடத்திற்கு அடிக்கல் நடுவதற்காக ஊவா மாகாண சபை முதலமைச்சர் வருகை தந்த போது பிக்குகளின் தலைமையிலான ஒரு குழுவினர் இவ்விடத்தில் இப்பாடசாலை அமைக்க இடமளிக்க மாட்டோம் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால், அடிக்கல் நடும் வைபவம் இரத்துச் செய்யப்பட்டது.
தெஹிவளை பள்ளிவாசல்
தெஹிவளை பாத்யா மாவத்தையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலை காணியின் எல்லைக்குள்ளேயே விஸ்தரிப்பதற்கும், பள்ளிவாசலின் கட்டடத்தில் காணப்படும் உடைவுகளையும், சிதைவுகளையும் திருத்தி அமைப்பதற்கும் இப்பள்ளிவாசலின் நிர்வாகிகள் தீர்மானித்தார்கள். இதற்காக கல்கிஸை மாநகர சபையில் முறையாக அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்டு மேற்படி வேலைகளை தொடங்கிய போது, இனவாத அமைப்பினர் பள்ளிவாசலின் விஸ்தரிப்புக்கும், திருத்த வேலைகளுக்கும் எதிராக கிளர்ந்தெழுந்தார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால், பொலிஸார் பள்ளிவாசலில் மேற்கொள்ளப்பட்ட திருத்த வேலைகளை இடைநிறுத்தி வைத்துள்ளார்கள்.
பள்ளிவாசல் அமையப் பெற்றுள்ள இடத்தில் முஸ்லிம்கள் குறைவாக உள்ளார்கள். ஆதலால், பள்ளிவாசலை விரிவுபடுத்த வேண்டியதில்லை என இனவாதிகள் தெரிவிகின்றார்கள். ஆனால், இப்பள்ளிவாசல் இங்குள்ள முஸ்லிம்களுக்கே தொழுவதற்கு இடவசதி குறைவாகவுள்ளது. பள்ளிவாசலை நாட்டின் சட்டத்திற்கு அமைய விரிவுபடுத்துவதனை முஸ்லிம்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அதனை மாற்று இனத்தினர் தீர்மானிக்க முடியாது. இது முஸ்லிம்களின் மத உரிமையுடன் தொடர்புபட்டது. இதேவேளை, முஸ்லிம்கள் குறைவாகவுள்ளார்கள்.
அதனால் பள்ளிவாசலை விரிவுபடுத்த முடியாதென்றால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் சிங்களவர்கள் மிகவும் குறைவாக உள்ள இடங்களிலும், சிங்களவர்கள் இல்லாத இடங்களிலும் பெரிய அளவில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் புத்தரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும், முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
முஸ்லிம்கள் பௌத்தர்களின் மத உரிமையை மதிப்பது போன்று பௌத்தர்கள் முஸ்லிம்களின் மத உரிமையை மதிக்க வேண்டும். கடந்த ஆட்சியிலும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றபோது அரசாங்கம் இனவாதிகளுக்கு அடங்கியது. சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டவர்களை சுதந்திரமாக நடமாட அனுமதித்தது. இது போலவே இன்றைய அரசாங்கத்திலும் சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சில இனவாத அமைப்புக்களுக்கு அரசாங்கம் அடிபணிந்து கொண்டிருக்கின்றது. தெஹிவளை பள்ளிவாசலின் விஸ்தரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக இனவாதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுவதனைப் போன்று முஸ்லிம்கள் ஒரு பௌத்த விகாரையின் விஸ்தரிப்புக்கு எதிர்ப்புக் காட்டியிருந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள்.
முஸ்லிம்களுக்கு ஒரு சட்டமும், பௌத்தர்களுக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது. யாருக்கும் அடிபணிந்து செல்லாததே சட்டமாகும். சட்டம் ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு குழுவிற்கோ அடிபணிந்து விடுமாயின் அங்கு சட்டவாட்சிக்கு பதிலாக பேய்களின் ஆட்சியே நீடிக்கும்.
No comments
Post a Comment