Latest News

May 03, 2016

கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் பற்றி சிந்திப்பார் எவருமில்லை
by admin - 0

ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்தி, வியர்வை சிந்திச் சேகரித்த செய்திகளை வைத்து ஊடக நிறுவனங்களை நடத்திச் வரும் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் அதிகளவான இலாபத்தைச் சம்பாதிக்கின்ற போதிலும் ஊடகவியலாளர்களின் உழைப்பை மதித்து அவர்களுக்கு கொடுப்பனவு வழங்க மறுத்து, அவர்களின் உரிமைகளை மறுத்து வருகின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்கு எந்தவொரு ஊடகமும் முன்வருவதில்லை.

ஊடக சுதந்திரம் எனக் கூறி உலகமெங்கும் ஊடக சுதந்திர தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் ஊடக நிறுவனங்களால் பெருமெடுப்பில் ஊடக சுதந்திர நாள் கொண்டாடப்பட்டு வருகின்றன. 

இலங்கையில் ஊடக அடக்குமறையால் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்கப்படவில்லை. இது ஊடக அடக்குமுறையின் உச்சத்தையும் அதற்கு இப்போதும் துணை உண்டு என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

இந்நிலையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களை ஊடகவியலாளர் சங்கங்கள் நினைவுகூர்ந்து அவர்களது கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும், கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என குரல்கொடுத்து வருகின்றார்கள்.

ஆனாலும் பல ஊடக நிறுவனங்கள் ஊடகவியலாளர் கொலைகளை தமது ஊடக நிறுவனங்களின் விளம்பரத்திற்காகவும் விற்பனையை அதிகரித்து கொள்ளை இலாபம் அடைவதற்காகவும் சுயநல நோக்குடன் செயற்பட்டு வருகின்றார்கள்.
குரலற்ற மக்களின் குரலாக விளங்கும் ஊடகவியலாளர்கள் பலரது தற்போதைய நிலை பற்றி எவருமே கருத்திற்கொள்வதாக இல்லை.

பல்வேறுபட்ட அச்சுறுத்தல்கள், சிரமங்களுக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் செய்திகளைச் சேகரித்து ஊடக நிறுவனங்களுக்கு வழங்குகின்ற போதிலும் அச்செய்திகளைச் சேகரிப்பதற்குச் செலவழித்த பணத்தைக்கூட ஊடகவியலாளர்களுக்கு ஊடக நிறுவனங்கள் வழங்குவதற்கு முன்வருவதில்லை.

திறமை மிக்க ஊடகவியலாளர்கள் பலர் ஊடக நிறுவனங்களின் முதலாளிமாரின் அடாவடிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

களத்தில் நின்று கஸ்டப்பட்டுச் செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களின் செய்திகளால் தமது செய்தி நிறுவனங்களுக்குப் பேர், புகழ் எடுத்து விருதுகளைப் பெற்று ஊடக ஜாம்பவான்கள் எனப் பெயர் எடுத்த ஊடக முதலாளிகள் கஸ்டப்பட்டு செய்தி சேகரித்த பணத்தைக்கூட ஊடகவியலாளர்களுக்குக் கொடுக்காமல் மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துகொள்கிறார்கள்.

செய்திக்கான பணத்தைக் கேட்டால் பணி நீக்கம் வழங்கப்பட்டு துரத்தப்படுகின்றார்கள். 

குரலற்ற மக்களின் குரலாக தமது குரலை ஒலிக்கச் செய்யும் ஊடகவியலாளர்களின் இந்த அவலத்தை வெளிப்படுத்துவதற்கோ அவர்களுக்கு உதவுவதற்கோ எந்தக் குரலும் இல்லை என்பது கவலைக்குரியதாகும்.
உண்மை.
« PREV
NEXT »

No comments