Latest News

May 04, 2016

மேஜர்.பண்டிதர்(ரமணசர்மா) பண்டிதரின் வரலாறும் இளையோர் படிக்கவேண்டிய பாடங்களும்.ஈழத்து துரோணர்.!!
by admin - 0

மேஜர்.பண்டிதர்(ரமணசர்மா)
பண்டிதரின் வரலாறும்
இளையோர் படிக்கவேண்டிய பாடங்களும். 



ஈழத்து துரோணர்.!!

மேஜர்.பண்டிதர், லெப்.கேணல். அம்மாண்ணையின் கீழ் பணியாற்றிய ஒரு "வழங்கள் துறையை"சேர்ந்த போராளி. எப்போதும் அமைதியான, சிந்தனையுடன் காணப்படும் ஒரு சிறந்த போராளி. 

சிறந்த நிர்வாகி என்பதே அவனுக்கு பொருத்தமாகும். தனக்கு கொடுக்கப்படும் பணியை எந்தவித கேள்வியும் கேட்க முடியாதளவுக்கு மிக கச்சிதமாக செய்துமுடிக்கும் ஆற்றல் கொண்ட போராளி. 

1990 இறுதியில் போராட்டத்தில் இணைந்த பண்டிதர், பயிற்சிக்கு முன்னமே கோட்டை சண்டையில் பணியில் இருந்தான். அங்கு சண்டையில் இருக்கும் போராளிகளுக்கு உதவியாக பதுங்குகுழிகள் அமைத்தல், உணவுகள் கொண்டு சென்று கொடுத்தல் போன்ற மிகவும் கடுமையான பணியை செய்தான். 

உண்மையில் போராளிகளை விட மிகவும் அபாயகரமான பணியை, பயிற்சி எடுக்காத போராளிகள் அன்று செய்துகொண்டிருந்தனர். கோட்டையில் இருந்த எதிரி, நிலமட்டத்தில் இருந்து  உயரத்தில் இருந்தமையால், அவனுக்கு போராளிகளை குறிபாத்து சுடுவதற்கு(சினைப்பர்) இலகுவாக இருக்கும். 

எமது போட்டத்தில் அன்றைய நேரத்தில், போராளிகள் எதிரியால் அதிகம் குறிவைக்கப்பட்டது கோட்டையில் தான். அன்றைய நேரத்தில் இப்படியான பணிகளில் தாக்குப்பிடிக்கும் போராளிகளை தான் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். 

அன்றைய நேரத்தில் இது ஒரு உளவுரண் சோதனைக்காலமாகவே இது பார்க்கப்பட்டது. இதை எல்லாம் தாண்டி கோட்டை புலிகளால் வெற்றி கொள்ளப்பட்டதும், பண்டிதர் பயிற்சிக்காக மணியம்தோட்டத்தில் அமைந்திருந்த குட்டி முகாமுக்கு அனுப்பப்பட்டான். 

அங்கு குட்டி 3வது அணியில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது, 1991.தை இறுதி என்று நினைக்கின்றேன், பயிற்சி முடிவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருந்தது. அப்போது இரண்டாம் கட்ட ஈழப்போர் ஆரம்பித்த நேரம் அது. 

பல புதிய நிர்வாகங்கள் தோற்றுவிக்கப்பட்டு, கட்டமைப்புகள் வேகம் பெற்றிருந்த நேரம். எமது துறைக்கும், வெளியக வேலைக்கு புதிய போராளிகளை இணைக்கும் நோக்கில், A/L வரை படித்துவிட்டு போராட்டத்தில் இணைந்த சில போராளிகளின் தரவுகளுடன், அவர்களின் செயல் வீச்சை கணிக்கும் நோக்கில் குட்டி முகாமுக்கு சூட்டண்ணையுடன் சென்றிருந்தேன். 

அங்கு வைத்து தான் முதல் முதலில் பண்டிதரை சந்தித்தேன். பண்டிதருடன் உரையாடியதில் திருப்தி அடைந்து, அவனையும் தெரிவு செய்திருந்தோம். அடுத்த போராளியுடன் உரையாடிக்கொண்டிருந்த போது மதிய உணவுக்கான விசில் அடிக்கப்பட்டதும் போராளிகள் உணவை உண்பதற்காக சென்றிருந்தனர். 

நாங்களும் அங்கேயே உணவருந்தும் நோக்கில், சமையல் கூடத்தை நோக்கி சென்றோம். அன்று மாட்டு இறைச்சி சமைக்கப்பட்டிருந்தது. நாங்கள் எமக்கான உணவை எடுத்துக்கொண்டு வரும் போது, போராளிகளுடன் பண்டிதர் உணவருந்துவதை கண்டேன். 

அவனது விபரங்களை வைத்து, அவன் ஒரு குருக்களின் மகன் என்பதை அறிவேன். அதனால் அவர்கள் புலால்(மாமிசம்) உணவுகளை உண்பதில்லை என்று தெரியும். ஆனால் அப்படி புதிதாக வருபவர்கள் கால ஓட்டத்தில் புலால் உண்பதற்கு பழகிவிடுவார்கள். அதனால் பண்டிதரும் அதற்கு பழக்கப்பட்டிருப்பான் என்றே எண்ணினோம். 

ஆனால் அன்று அவன் சீனியுடன் சோற்றை உண்பதை கண்டேன். உடனே அவனை கூப்பிட்டு இது பற்றி கேட்டேன். தன்னால் அந்த உணவை உண்ண முடியவில்லை என்றான். இரண்டு மாதங்கள் கோட்டையிலும், மூன்று மாதங்கள் பயிற்சி முகாமிலும் என ஐந்து மாதங்களுக்கு மேல் சீனியுடனேயே உணவருந்துவதை கூறினான். 

அப்போது அவன் தன்னை போராளியாக்குவதற்கு எதையும் தாங்கும் மனநிலையில் இருப்பதை கண்டு வியந்தேன். அவனிடமிருந்து விடை பெற்று சென்றுவிட்டேன். ஆனால் அவனை எமது துறைக்குள் அன்று உள்வாங்க முடியாது போயிருந்தது. 

காரணம் அந்த பணியின் நிமித்தம் நீண்ட தூரம் காடுகளின் ஊடாக , பல நாட்கள் நடக்கவேண்டி வரும். சில வேளைகளில் நாம் கணிப்பிடும் நாட்களுக்கு முன் எமது இடத்தை சென்றடைய முடியாது போனால், உணவுத்தட்டுப்பாடு ஏற்படும், சிலவேளை காடு மாறினாலும் இந்த பிரச்சனையை சந்திக்க வேண்டி வரும். 

அதனால் நாம் போகும் பாதைகளில் கிடைக்கும் உணவை, அது பாம்பாகவோ அல்லது நீர் நிலைகளில் திரியும் சிறிய ஆமைகளோ எதுவாகினும் உண்டு உயிர்வாழும் மனநிலையும் வேண்டும். அது பண்டிதரிடம் இல்லை என்பதால் அன்று அவன் அந்த பணிக்கு தவிர்க்கப்பட்டான். 

எமது போராட்டத்தில் மேஜர்.பண்டிதர் தொடங்கி பிரிகேடியர் விதுஷா போன்ற பிராமண வகுப்பை சேர்ந்த போராளிகளும், ஆரம்ப காலத் தளபதி லெப்.சீலண்ணை(சாள்ஸ் அன்ரனி) தொடங்கி, சொர்ணமண்ணை போன்ற பல கிருத்தவ தளபதிகள் உட்பட, ஆரம்ப காலம் முதல் முள்ளிவாய்க்கால் வரை எல்லா மதத்தை சேர்ந்த போராளிகளும், எல்லா சாதியத்தை சேர்ந்த போராளிகளாலுமே, தமிழரின் போராட்ட தேர் கட்டி இழுக்கப்பட்டது. 

இதை நான் பதிவு செய்வதற்கு முக்கிய காரணம் சமீபகாலமாக முகநூலில் சாதியம் பற்றியும், மதங்கள் பற்றியும் கருத்து மோதல் என்னும் பெயரில் நாற்றமெடுக்கும் சகதியில் சிலர் புரண்டு உறுள்வதை காண்கின்றேன். 

தமிழன் பழம் பெரும் பாரம்பரியத்தை கொண்டபோதும், எமக்கென்று ஒரு நாடு இல்லாது, பின்னால் தோன்றிய இனங்களிடம் கூட அடிமைப்பட்டு, எதிலியளாக உலகமெங்கும் சுற்றி திரிவதற்கு முக்கிய காரணம், தமிழன் சாதி, மதம் எனப் பிரிந்திருப்பதே ஆகும். 

இதை சில கட்டமைப்புகள் மறைமுகமாக ஊக்குவிக்கின்றன. இது ஒரு பிரித்து ஆளும் சதியே.! ஆனபோதும் இளைய சமூகம் இதிலிருந்து வெளிவர முயற்சித்த போதும், "சில சாக்கடைகள்" அவர்களையும் அதனுள் மீண்டும் இழுக்கின்றனர். 

2009 வரை மறந்திருந்த அல்லது கதைக்கப் பயப்பட்ட ஒரு அழுக்கை மீண்டும் ஈழத்தமிழரில் சிலர் தங்கள் உடலில் பூச வெளிக்கிடுவதை காண்கின்றேன். 

எமது போராட்டத்தில் சைவர், கிருத்தவர், முஸ்லிம் என எல்லா மதத்தினரும், சாதாரண போராளி தொடங்கி உயர் தளபதிகள் வரை வீரச்சாவடைந்துளார்கள். 

அதே போல சாதிகளால் பிரிந்திருந்த தமிழர்களை, தலைவர் "தமிழர்களாக" ஒன்று திரட்டினார். அந்த "தமிழர் என்ற ஒற்றுமையே"  எமது போராட்டம் பாரிய இராணுவ சாதனைகளை அன்று படைக்க முக்கிய காரணமாக இருந்தது. 

இன்றும் தமிழன், தலைவர் காட்டிய வழியில் பயணிக்க வேண்டிய காலம். நீங்கள் மீண்டும் சாதி,மதம் என்று பிரிந்தால், அது எதிரிக்கே வாய்ப்பாக அமையும். தமிழர் என்னும் அடையாளத்துடன் தான் தமிழன் சர்வதேச அரங்கில் தலைநிமிர்ந்தான். 

மதம் என்பது ஒருவரது நம்பிக்கை. அதற்காக அவர் தமிழர் இல்லாது போவார்களா? 

தயவு செய்து ஏற்றத்தாழ்வுகளை களைந்து தமிழராய் ஒன்றிணையுங்கள். குறிப்பாக தமிழ்நாட்டு இளைஞர்கள், யுவதிகள் சாதி,மதம் களைந்து தமிழராய் ஒன்றிணையுங்கள். அதுவே எமது பலம்.! 

தலைவர் எந்த சந்தர்ப்பத்திலும் போராளிகளின் மத நம்பிக்கைகளில் தலையிட்டதில்லை.!
அதுவே அவரது வெற்றிக்கு காரணம்.!

கிறிஸ்மசுக்கு கேக்கும், சிறப்பு உணவும் அது போலவே பொங்கல் போன்ற விசேட தினங்களிலும் விசேட உணவு பாரபட்சம் இல்லாது போராளிகளுக்கு வழங்கப்பட்டது. 

தலைவர் எந்த மதத்துக்கோ அல்லது சாதி சார்ந்தோ யாருக்கும் பொறுப்புகளை வழங்கியது கிடையாது. புலிகலமைப்பில் திறமைக்கே முதலிடம். இது தான் தலைவரின் வெற்றியின் ரகசியம். அவர் எல்லோரையும் தமிழராகவே பார்த்தார். இதை தான் இளைய சமுதாயம் அண்ணையிடமிருந்து கற்கவேண்டிய முதல் பாடம். 

மீண்டும் பண்டிதரிடம் வருகின்றேன். 
1990இல் பண்டிதரை சந்தித்த பின், மீண்டும் இறுதியாக சந்தித்தது 1997இல் யாழில் நிக்கும் போது தற்செயலாகவே சந்தித்தேன். 

அன்றைய நேரத்தில் யாழ்ப்பாணம் எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த நேரம். அந்த நேரத்தில் பல பொருட்களுக்கு சிங்கள அரசு தடை செய்திருந்தமையால் அந்த பொருட்களை யாழில் இருந்து வன்னிக்கு, போராளிகள் கடத்துவது வழமை. அந்த பணிக்காகவே பண்டிதரும் யாழ் வந்திருந்தான். 

அந்த நேரத்தில் நான் யாழில் இருந்து வன்னி செல்வதற்காக வடமராட்சி கிழக்கில், எமது படகொன்றிற்காக காத்திருந்த போது,யாழில் கொள்வனவு செய்த பொருட்களுடன் எங்களிடத்திற்கு வந்து சேர்ந்தான் பண்டிதர். 

என்னை கண்டதும் நட்புடன் உரையாட ஆரம்பித்தான். நீண்ட நேர உரையாடலின் பின் ஏன் தன்னை எங்கள் பிரிவில் அன்று உள்வாங்கவில்லை என்ற கேள்வியை கேட்டபோது, நான் காரணத்தை சொன்னேன்.! 

பலமாக சிரித்தபின் கூறினான், வரும் போது "கொத்து ரொட்டி" தான் சாப்பிட்டு வந்தேன் என்று கூறிவிட்டு, வன்னியில் சந்திப்போம் என்றபடி பொருட்கள் ஏற்றப்பட்ட படகில் வன்னி நோக்கி பயணமானான். 

அடுத்தநாள் தான் தெரியும் படகில் ஏற்றபட்ட பொருட்களின் சுமை கூடியமையால், படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியதால், தண்ணீரில் விழுந்த பண்டிதர் மேலே வரவில்லையாம். 

ஆம் பண்டிதருக்கு நீச்சல் தெரியாமையால் அந்த விபத்தில் மேஜர்.பண்டிதர் எம்மை விட்டு பிரிந்தான். மிகவும் நேர்த்தியான நிர்வாகி, சிறந்த போராளியை அன்று நாம் இழந்தோம். 

அன்பு நண்பர்களே நான் மீண்டும் வலியுறுத்துவது, தயவு செய்து சாதி, மதங்களை கடந்து தமிழராய் ஒன்றிணையுங்கள் அதுவே எமது பலம். எமது தேசத்தில் கல்லறைகளில் எந்த பிரிவோ, பாகுபாடோ இல்லாது ஒன்றாய் உறங்கும் எம் வீரர்களை பாருங்கள்.! 

எமது தமிழ் இளையவரே.! எனது கையை, பல போராளிகளின் இரத்தம் நனைத்துள்ளது. 
எல்லோருடைய இரத்தமும் சிகப்பாகவே இருந்தது. அதில் நான் எந்த வேறுபாட்டையும் கண்டதில்லை. 

நாங்கள் ஒரு கோப்பையில் உண்டு ஒரு பாயில் உறங்கி ஒன்றாகவே எந்த பேதமும் இல்லாது வளர்ந்தோம். அது மிகவும் இனிமையான நாட்கள். அதில் அதிகமானோர் இன்று உயிருடன் இல்லாத போதும், அவர்கள் நினைவுகள் இன்றுபோல் நெஞ்சில் நிழலாடுகின்றது. 

தயவு செய்து சாதி,மதம் பற்றி பெருமை பேசுபவர்களை ஒதுக்கி வையுங்கள். தலைவர்,மற்றும் போராளிகள் எல்லோரும், எல்லா மதத்தலைவர்களையும் கெளரவத்துடனேயே அணுகினர். அதுவும் தலைவரின் சிறந்த பண்புகளில் ஒன்று. இதை எப்போதும் மனதில் வைத்து பயணியுங்கள்.

போராட்ட காலத்து சில புகைப்படங்களை இணைத்துள்ளேன். அந்த புகைப்படங்கள்  உங்களுக்கு போராளிகளைப் பற்றியும், அவர்களின் தியாகத்தையும் ஒற்றுமையும் கூறி நிக்கின்றன..!
மனச்சுமையுடன் துரோணர்.!!
« PREV
NEXT »

No comments