Latest News

May 10, 2016

உலங்குவானூர்தி மூலம் தரையிறங்கிய சிங்கள,இந்திய அதிரடிப்படையினரை துவசம் செய்தபுலிகள்.!!
by admin - 0

உலங்குவானூர்தி மூலம் தரையிறங்கிய 
சிங்கள,இந்திய அதிரடிப்படையினரை 
துவசம் செய்த புலிகள்.!!

ஈழத்து துரோணர்.!!

தமிழர் விடுதலை போராட்ட வரலாற்றில், விடுதலைப்புலிகளால், சர்வதேச இராணுவ கோற்பாடுகளையும் தாண்டிய, பாரிய இராணுவ வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன. 

புலிகளின் இராணுவ வெற்றிகளில் இருந்து, இந்த முறியடிப்பு தாக்குதல்கள் இரண்டும் தனித்துவம் வாய்ந்தவை. இந்த இரு தாக்குதல்களையும் நான் ஒன்றாக பதிவு செய்வதற்கு முக்கிய காரணம், இரண்டும் ஒரேமாதிரியான தாக்குதல்கள். 
ஆனால் இரண்டு நாடுகளுக்கு எதிரானது. 

1980களில் தமிழரின் விடுதலைப்போர் உச்சம் பெற்றிருந்த நேரம், சிங்கள அரசு அமெரிக்க மற்றும் அதன் செல்லப்பிள்ளையான இஸ்ரேலின் உதவியை பெற்றிருந்தது. அந்த உதவிகள் பெரும்பாலும் இராணுவ தளபாடம், தாக்குதல் பயிற்சி மற்றும் புலனாய்வு போன்ற உதவிகள் ஊடாக அமெரிக்காவுடன் சிங்களம் கைகோர்த்து மிக நெருக்கத்தில் வந்திருந்தது. 

அந்த நேரத்தில் இரசிய சார்பு கொள்கையில் இருந்த இந்திய அரசால் இந்த நட்பை சகிக்க முடியவில்லை. அதனால் சிங்கள அரசை வழிக்கு கொண்டுவரும் நோக்கில், அன்றைய நேரத்தில் வேகம் பெற்றிருந்த தமிழரின் ஆயுத போராட்டத்தை இந்திராகாந்தி அரசு கையில் எடுத்தது. 

அதன் வெளிப்பாடே தமிழ் குழுக்களுக்கான ஆயுத பயிற்சியும் ஆயுத உதவிகளுமாகும். இந்த உதவிகளின் பின்னால் இருந்த, இந்திய அரசின் நயவஞ்சகத்தை தலைவர் சரியாக கணிப்பிட்டிருந்தார். இந்திய அரசு இந்த உதவிகள் மூலம் தமிழரின் போராட்டக்  குழுக்களை தன் கைப்பாவையாக வைத்திருக்க விரும்பியது. 
இதன் மூலம் சிங்களத்தை அடக்க நினைத்தது. 

இதை அறியாது, புலிகள் தவிர அனைத்து இயக்கங்களும் இந்தியம் விரித்த வலையில் விழுந்தனர். அதனால் புலிகள் மீது வஞ்சத்துடனேயே இந்திய அரசு உறவை பேணியது. காலம் சுழன்றது. 

புலிகள் அமைப்பு , மிகவும் நேர்த்தியாகவும் காட்டுப்பாட்டுடனும்  இராணுவ ரீதியாக வளர்ந்து கொண்டிருந்தது. 

இப்படியான நேரத்தில் தான் 1985ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளின் தாக்குதல்கள் அகோரமாக இருந்தமையால் சிங்களம் திணறியது. இந்த தாக்குதல்களை வழிநடத்திய அன்றைய யாழ்மாவட்ட தளபதியும், புலிகளின் மூத்த தளபதியுமான கிட்டண்ணையை இலக்கு வைத்து ஒரு அதிரடித்தாக்குதளுக்கு சிங்களம் தயாரானது. 

இதற்கான ஆலோசனையை அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையான கிரீன் பரேட் வழங்கி இருந்தது. இது வானூர்தி மூலமாக சிறப்பு அதிரடிப்படையினரை குறிப்பிட்ட இடத்தில் தரையிறக்கி, இலக்கை அழிப்பது அல்லது  உயிருடன் கைது செய்து இழப்புகள் இல்லாது தளம் திரும்புவது. 

இந்த முறையிலான தாக்குதல் ஒன்றின் மூலமாக தான் அமெரிக்க இராணுவத்தின் சீல் அதிரடிப்படையினரால் ஒசாமா பின்லாடன் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது நீங்கள் அறிந்ததே. இதை ஒத்த தாக்குதலே அன்று சிங்களத்தாலும் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த தாக்குதல் முறையானது அமெரிக்க, வியட்னாம் போரின் போது வியட்கொங் போராளிகளுக்கு எதிராக அமெரிக்க இராணுவத்தினர் அடிக்கடி பயன்படுத்தி வெற்றியும் கண்டனர். அதன் பின் பல உலகநாடுகள் இந்த தாக்குதல் உத்தியின் சிறப்பு காரணமாக, இது போன்ற தாக்குதலுக்கு ஏற்றாற்போல தமது நாட்டு வீரர்களை சிறப்பு பயிற்சி மூலம் உருவாக்கியுள்ளனர். 

அந்த உத்தியை தான் சிங்களமும் அன்று கையில் எடுத்திருந்தது. அமெரிக்காவின் ஆலோசனையுடன், இஸ்ரேல் புலனாய்வு அமைப்பான மொசாட் பயிற்சியை வழங்கி, இந்த தாக்குதலை நேரடியாக வழிநடத்தியது. 

அதன் படி 1985ம் ஆண்டு சுதுமலையில் அமைந்திருந்த புலிகளின் முகாமை நோக்கி இரண்டு அமெரிக்க தயாரிப்பு பெல் ரக ( CH-146 Griffon) உலங்கு வானூர்தியில், கிட்டண்ணையை இலக்கு வைத்து, சிங்களத்தின் முதலாவது வானூர்தி மூலம் தரையிறங்கி, தாக்கும் வரலாறு ஒன்றை படைக்கும் நோக்கில், தரை இறங்கினர். 

தரையிறங்கிய அதிரடிப்படையினர் சகட்டு மேனிக்கு தாக்கியபடி புலிகளின் முகாமை நோக்கி முன்னேறினர். முகாமில் இருந்தவர்களுக்கு இது ஒரு எதிர்பாராத தாக்குதல். ஒரு கணம் திகைத்தபோதும், மறுகணம் தம்மை சுதாரித்த புலிகள் எதிர் தாக்குதலில் இறங்கினர். 

புலிகள் பற்றி மிகப்பெரும் கணிப்பீட்டு பிழையை விட்டிருந்த சிங்களத்துக்கு புலிகளின் ஆக்ரோசமான தாக்குதல் அதிர்ச்சியை கொடுத்தது. 

முகாமில் இருந்தவர்கள் பாதுகாப்பாக நிலையெடுத்து நிதானமாக தாக்க ஆரம்பித்த போது, சமநேரத்தில் ஏனைய முகாம்களில் இருந்த புலிகளுக்கு தகவல் பரிமாறப்பட்டு அந்த இடத்திற்கு வேகமாக வந்து முறியடிப்பு தாக்குதலில் புலிகள் இறங்கினர். 

புலிகளின் தாக்குதலின் வேகம் காரணமாக சிங்கள அதிரடிப்படை இறந்த தமது சகாக்களின் உடல்களுடன் வந்தவழியே சிரமங்களுடன் சிலர் உயிர் தப்பிச் சென்றனர். இந்த தாக்குதல் பற்றி பின்னைய நாளில் மணலாற்றில் வைத்து, என்னிடம் கிட்டண்ணை கூறும் போது, போராளிகளின் வீரத்தையும், இந்த தாக்குதலில் லெப்.கேணல்.பைப் அண்ணையின் தாக்குதல் வேகத்தையும் சிலாகித்து கூறினார். 

இந்த தாக்குதல் வெற்றிக்கு முக்கிய காரணம் புலிகளிடமிருந்த தகவல் தொடர்பு சாதனங்கள் தான். தலைவர் நவீன ஆயுதங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தாரோ, அதே அளவு முக்கியத்துவத்தை தொலைத்தொடர்பு சாதனங்களை வாங்குவதற்கும் கொடுத்தார். 

நான் இதை பெருமைக்காக கூறவில்லை. அந்த நேரத்தில் சிங்கள, இந்திய இராணுவத்திடம் இருந்த இலகுரக ஆயுதங்களை விட புலிகளிடம் நவீன ஆயுதங்களும், தொலைத்தொடர்பு சாதனங்களும் கைகளில் இருந்தன. இந்திய இராணுவத்துடனான போரில் புலிகளின் கை ஓங்கியிருந்தமைக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இந்த தாக்குதலின் தோல்வி சிங்கள அரசுக்கு மட்டுமல்ல அதன் பின்னால் இருந்து இயக்கிய CIA , மற்றும் மொசாட்டுக்கு, புலிகள் பற்றிய இராணுவ கோட்பாட்டை மறுசீரமைப்பு செய்யவேண்டிய தேவையை உருவாக்கி இருக்கும். 

அதன் பின் இது போன்ற,விமானம் மூலமான அதிரடி முயற்சிகள் எதையும் செய்ய கனவிலும் சிங்களம் நினைக்கவில்லை. 

இதனை தொடர்ந்து, கால சுழற்சியின் ஊடாக, அன்றைய நேரத்தில் ஆட்சிக்கு வந்திருந்த ராஜீவ் காந்தி, அன்றைய சிங்கள ஜனாதிபதி J.R.ஜெயவத்தனாவின் குள்ளநரி ராஜதந்திரத்துக்கு பலியாகி, இந்திய அரசின் பிழையான கொள்கைவகுப்பாளர்களால் தவறான பாதையில் வழிநடத்தப்பட்டு, எமது மண்ணுக்கு அமைதிப்படை என்னும் கோரப்பப்படையை அனுப்பி வைத்தார். 

வந்த உடனேயே,பல அச்சுறுத்தல்களின் மூலமும், வாக்குறுதிகள் மூலமும் புலிகளிடமிருந்த ஆயுதங்களை களைய முற்பட்டனர். வேறு வழியில்லாது புலிகளும் அதற்கு சம்மதித்தனர். 

ஆன போதும் தலைவர் இந்திய அரசை நம்பவில்லை.! 

தலைவர் இந்திய அரசால் முன்னர் கொடுக்கப்பட்ட ஆயுதங்களுடன், பாவனைக்கு உதவாத ஆயுதங்கள், மற்றும் புலிகளால் உற்பத்தி செய்யப்பட்ட மோட்டர்கள், எறிகணைகளையும் ஒப்படைத்தனர். 

ஆனால், இரவோடு, இரவாக எல்லா புதிய ஆயுதங்களும் தமிழர் பிரதேசமெங்கும் புலிகளால் மண்ணில் புதைக்கப்பட்டது. 

இதை புதைப்பதற்காக யாழ்ப்பான கடைகளில் இருந்த பொலித்தீன், மற்றும் கிரீஸ் என்பன பெரும் தொகையாக கொள்முதல் செய்யப்பட்டதை மணந்து பிடித்த றோ (raw) அமைப்பு, இது பற்றி புலிகளிடம் கேட்டது. மழுப்பலான பதிலின் மூலம், றோவுக்கு கண்ணை கட்டினர் புலிகள். 

உண்மையில் புலிகளின் ஆயுத இருப்பு பற்றியோ போராளிகளின் தொகை பற்றியோ எந்த தகவலும் றோவிடம் இல்லை என்பது பெரும் புலனாய்வு சறுக்கலே றோவுக்கு. 

சிங்கள அரசுக்கு சார்பாக நிலையெடுத்து வந்த இந்திய அரசு, சிங்கள அரசின், திட்டமிட்ட  சிங்கள குடியேற்றம், மற்றும் தமக்கு விசுவாசமான ஆயுதக் குழுக்களுக்களான EPRLF,TELO,ENDLF போன்ற சமூக விரோதிகளுக்கு, ஆயுதங்களை கொடுத்து நிராயுத பாணியாக நின்ற புலிகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தனர். 

அத்தோடு புலிகளுக்கு உதவும் பொதுமக்களை அச்சுறுத்தும் காரியங்களிலும் ஈடுபட்டனர். அகிம்சை தேசம் அல்லது காந்திய தேசமென சர்வதேசத்தை மாயவலையில் வைத்திருந்த இந்திய தேசத்தின் உண்மை முகத்தை காட்டுவத்தற்கு புலிகள் தயாராகினர். 

இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதமிருந்த திலீபண்ணை கொஞ்சம் கொஞ்சமாக தன்னை உருக்கி இந்தியத்தின் கோரமுகத்தை எம் மக்களுக்கும், சர்வதேசத்திற்கும் அம்பலப்படுத்தி, ஈகைச்சாவடைந்தவுடன் தலைவரின் பொறுமை எல்லை கடந்தது. 

அத்தோடு கடல் போக்குவரத்தில் ஈடுபட்ட எம் தளபதிகளான குமரப்பா அண்ணை, புலேந்திரன் அண்ணை உட்பட 12வேங்கைகளின் மரணமும், தலைவருக்கு இந்திய இராணுவத்துடன் மோதும் முடிவை எடுக்கவைத்தது.

அதற்கு முன்னமே, தலைவர் எமது ஆயுத கையிருப்பை கூட்டும் நோக்கில், சிங்கப்பூரில் இருந்து ஆயுதக்கப்பல் ஒன்று சிறு தொகுதி ஆயுதங்களுடன் (சில நூறு துப்பாக்கிகள், 40mm கிரனைட் லோஞ்சர்கள் (சிங்கப்பூர் டொங்கான்) கைத்துப்பாக்கிகள், M-16 கான 5.56MM NATO ரவைகள் மற்றும் AK 47-கான 7.62MM ரவைகள் உட்பட சிறு தொகுதி ஆயுதங்கள் சர்வதேசக்கடலில் வைத்து இறக்கப்பட்டு, சிறு படகுகள் மூலம் எமது பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வந்த இறுதிக் கப்பலும் இது தான். 

இந்த கப்பல் பற்றி அறிந்த இந்திய கடற்படை, இந்த தகவலை றோவுக்கு வழங்கியது. றோ, இதுபற்றி புலிகளிடம் கேட்டபோது புலிகள் அதை மறுத்தனர். இப்படி இந்திய அரசுக்கு தெரியாமலேயே,அவர்களின்  நயவஞ்சகத்தை முறியடிக்க புலிகள் தயாராகினர். 

அதுக்குரிய நாளும் வந்தது. 10/10/1987அன்று இந்திய இராணுவத்துடனான அந்த வரலாற்று போர் ஆரம்பமானது. சண்டை ஆரம்பமானதும், பலாலியில் இருந்த இந்திய இராணுவ உயர் அதிகாரிகளால் எமது தலைவரை சுட்டு கொல்வதற்காக தாக்குதல் திட்டமொன்று போடப்பட்டது.

அதன்படி, 100பேர் கொண்ட சீக்கிய அணி பரசூட் மூலம் தரை இறங்கி யாழ் பல்கலைக்கழக மைதானத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். தொடந்து தரையிறங்கும் பரா துருப்பினருக்கு அவர்கள் பாதுகாப்பு வழங்கவேண்டும். 

அதோடு பரா துருப்பினர் சென்று, தலைவரை கொல்வது அல்லது கைது செய்தபின் மீண்டும் இவர்களிடம் திரும்பி வந்தபின், கெலிகப்டரில் தளம் திரும்புவது என திட்டமிடப்பட்டு, அதிரடிப்படையினரும் தாக்குதலுக்கு ஆயத்தமாகினர்.

அக்டோபர் மாதம் 12ம் திகதி. நேரம்: அதிகாலை 1 மணி. திட்டமிட்டபடி இந்தியப் படைகள், தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்தனர். அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில், இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படையணிகள் ஈடுபடுத்தப்பட்டன.

இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos) மற்றும் 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 – Sikh Light Infantry) ஆகியனவே பயன்படுத்தப்பட்டன. 

இந்த நடவடிக்கைக்காக நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகாக, அதிரடிப்படையினரை ஏற்றியபடி எம்.ஐ.-8 (MI8) உலங்குவானூர்தி, தலைவர் தங்கியிருந்த கொக்குவில் முகாமுக்கு அருகில் இருந்த யாழ் பல்கலைக்கழகத்தை நோக்கி புறப்பட்டது. 

அன்பு நண்பர்களே கட்டுரையின் நீளமாகி விட்டது. மிகுதியை அடுத்த பதிவில் தொடரும்.
« PREV
NEXT »

No comments