Latest News

May 02, 2016

விமான விபத்துக்கு பின் நேதாஜியை சந்தித்த டாக்டர் ராதாகிருஷ்ணன், விஜயலட்சுமி பண்டிட்.. திடுக் தகவல்
by admin - 0

சர்ச்சைக்குரிய விமான விபத்துக்குப் பின்னர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன், ரஷ்யாவுக்கான தூதர் விஜயலட்சுமி பண்டிட் ஆகியோர் நேரில் சந்தித்ததாக திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளன. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றி மத்திய அரசு அண்மையில் கூடுதல் ஆவணங்களை வெளியிட்டது. அந்த ஆவணங்களில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை; அவர் நேரு பிரதமராக இருந்தபோது ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் என்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக சுட்டிக்காட்டுகிறார் புலனாய்வாளரும் நேதாஜி பசும்பொன் திருமகனார் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவருமான வரதராஜ். மணிப்பூர் வரை முன்னேறிய நேதாஜிபடை 

இது தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு வரதராஜ் அளித்த பேட்டி: 

2-வது உலகப் போரின்போது நேதாஜி ஜப்பானில் இருந்தார். பிரிட்டன் சார்பாக போரிட்ட இந்திய வீரர்களை ஜப்பான் அப்போது கைது செய்திருந்தது. எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற அடிப்படையில் நேதாஜி தனது இந்திய தேசிய ராணுவத்துக்கு அந்த வீரர்கள் வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அந்த வீரர்களை ஜப்பான் விடுதலை செய்தது. அவர்களையும் தென் தமிழகத்தில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவரால் அனுப்பப்பட்ட 5,000 இளைஞர்களையும் கொண்டு ஜப்பானில் இந்திய தேசிய ராணுவத்தை நேதாஜி உருவாக்கியிருந்தார். அந்த படை பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக போரிட்டு மணிப்பூர் வரை முன்னேறி கைப்பற்றியிருந்தது.

விமான விபத்து உண்மை அல்ல.. 

அப்போது ஜப்பான் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதனால் போரில் இருந்து ஜப்பான் பின்வாங்கியது. அதேசமயம் 1945 ஆகஸ்ட் 18-ல் விமான விபத்தில் நேதாஜி இறந்து விட்டதாக ஜப்பானின் டோக்கியோ ரேடியோ அறிவித்தது. அது உண்மையில்லை என்பது மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆவணங்களில் இருந்து தெரியவருகிறது.


ரஷ்யாவுக்கு தப்பிய நேதாஜி 

உண்மையில், விமான விபத்து ஜப்பானிய அரசும் நேதாஜியும் சேர்ந்து நடத்திய நாடகம். அந்த விபத்தில் நேதாஜியின் உதவியாளரான ரஹ்மான் மட்டும் உயிர் பிழைப்பதுபோல காட்டி, அவரது வாக்குமூலம் மூலம் நேதாஜி உயிரிழந்துவிட்டார் என்று வெளியுலகுக்கு அறிவிக்க திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடியே நேதாஜி ரஷ்யாவுக்குள் தப்பிச் சென்றார். நேச நாட்டு படையினரிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காகவே நேதாஜி இதை செய்தார்.


கோஸ்லா கமிஷன் 

இந்திரா ஆட்சியின்போது நேதாஜி உயிரோடு இருக்கிறாரா என்பதைக் கண்டறிய கோஸ்லா விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷனில் நேருவிடம் சுருக்கெழுத்தாளராக இருந்த ஷியாம்லால் ஜெயின் அளித்த வாக்குமூலத்தில், 1945 டிசம்பர் 26 அல்லது 27 அன்று பிரதமர் நேரு என்னிடம் பிரிட்டன் பிரதமராக இருந்த கிளமென்ட் அட்லிக்கு அனுப்புவதற்காக 2 கடிதங்களை தட்டச்சு செய்ய சொன்னார். ஒரு கடிதத்தில், நேதாஜி சைகானில் இருந்து மஞ்சூரியாவின் தைரன் பகுதிக்கு 1945 ஆகஸ்ட் 23-ம் தேதி ஜப்பானின் போர் விமானத்தில் வந்திறங்கினார். அதில் ஏராளமான தங்கக் கட்டிகளும் நகைகளும் இருந்தன. இறங்கியவுடன், அவருக்கு வழங்கப்பட்ட தேநீர், வாழைப் பழங் களை சாப்பிட்டார். அங்கு 4 பேர் ஒரு ஜீப்பில் வந்தனர். அவர்களில் ஒருவர் ஜப்பானிய ராணுவ ஜெனரல் ஷெடேய். அந்த ஜீப் அவர்களை ஏற்றிக்கொண்டு ரஷ்யாவின் எல்லையை நோக்கிச் சென்றது. 3 மணி நேரம் கழித்து அவர்களை விட்டுவிட்டு ஜீப் திரும்பிய பின்பு அந்த விமானம் டோக்கியோவுக்கு கிளம்பிச் சென்றது என்று தட்டச்சு செய்தேன்.

போர்க்குற்றவாளி? 

மற்றொரு கடிதத்தில், எனக்கு கிடைத்த உறுதியான தகவல்களின் அடிப்படையில் உங்களது போர்க் குற்றவாளியான சுபாஷ் சந்திர போஸ் ரஷ்ய அதிபர் ஸ்டாலினின் ஆதரவுடன் ரஷ்யாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டனுக்கு நட்பு நாடாக இருக்கும் ரஷ்யா இதை செய்திருக்கக் கூடாது. இதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். உரிய நடவடிக்கை எடுக்கவும் என்று தட்டச்சு செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்த தகவலும் தற்போது வெளியிடப்பட்ட ஆவணங்களில் இருக்கிறது


நேதாஜியுடன் ரஷ்யாவில் சந்திப்புகள்.... 

மேற்கு வங்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற எஸ்.எம்.கோஸ்வாமியும் கோஸ்லா கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர், ரஷ்யாவுக்கான இந்திய தூதராக இருந்த முன்னாள் ஜனாதிபதிடாக்டர் ராதாகிருஷ்ணன் 1948-ம் ஆண்டு மாஸ்கோவில் நேதாஜியை பார்த்தார். அப்போது அவரிடம் நேதாஜி தன்னை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை விடுத்தார். இதனை மேலிடத்தில் ராதாகிருஷ்ணன் தெரிவித்தும் பலன் இல்லை. இந்த விஷயங்களை 1954-ல் ராதாகிருஷ்ணன் என்னிடம் தெரிவித்தார். அதன் பின்பு ரஷ்ய தூதராக நியமிக்கப்பட்ட நேருவின் தங்கை விஜயலட்சுமி பண்டிட்டும் மாஸ்கோவில் நேதாஜியை சந்தித்துள்ளார். அவர் இந்தியா திரும்பியதும் ஒரு கூட்டத்தில், ‘நான் ஒரு தகவலை வெளியிட்டால் இந்தியாவே அதிரும்' என்று பேசத் தொடங்கினார். ஆனால், மேற்கொண்டு அவர் பேசவில்லை" என்று கமிஷனில் கோஸ்வாமி கூறியிருக்கிறார்.பிரிட்டனுடன் ஒப்பந்தம் 

நேதாஜியின் மெய்க்காப்பாளரான உஸ்மான் படேல் என்பவர் கோஸ்லா கமிஷனிடம் அளித்த வாக்குமூலத்தில், இந்தியாவுக்கு சுதந்திரம் அளிக்கப்பட்ட சமயத்தில் நேதாஜி இந்தியாவுக்குள் நுழைந்தால் அவரை பிரிட்டனிடம் ஒப்படைப்பதாக நேரு, முகம்மது அலி ஜின்னா, மவுலானா ஆசாத் ஆகியோர் பிரிட்டன் நீதிபதி முன்னிலையில் ஒரு சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர். இதை பின்பொரு சமயம் மவுலானா ஆசாத் வருத்தத்துடன் என்னிடம் தெரிவித்தார். 1945 அக்டோபர் 13-ம் தேதி நான் 21,600 சிங்கப்பூர் டாலர்களுடன் இந்தியாவில் கைது செய்யப்பட்டேன். அந்த தொகை இந்திய தேசிய ராணுவத்துக்கு மளிகை, உணவுப் பொருள் வாங்குவதற்காக நேதாஜி என்னிடம் கொடுத்தது. ஆனால், அது ரப்பர் வியாபாரத்துக்காக நான் கொண்டு வந்ததாக பொய்யாக புகார் பதிவு செய்யப்பட்டது என்று கமிஷனில் கூறியிருக்கிறார். இந்த வாக்குமூலங்கள் பற்றிய ஆவணங்கள் இல்லை. ஆனால், இவை அன்றைய ஆங்கில நாளிதழ்களில் வெளியாகியுள்ளன. இவ்வாறு வரதராஜ் தமது பேட்டியில் கூறியுள்ளார்
« PREV
NEXT »

No comments