நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37ஆக அதிகரித்துள்ளது. இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25ஆகவும், மேலும் 21பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, அதிக மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு காரணமாக, மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்துக்கும் அதிகமானோர் நிர்க்கதியாகியுள்ளதாகவும் இவர்களுக்காக 400க்கும் மேற்பட்ட தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் கூறியது.
இதேவேளை, அரநாயக்க சாமசர மலையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, சுமார் 66 வீடுகள் புதையுண்டிருக்கலாம் என்று தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் லெனாட் மார்க், இதுவரையில் 17 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று கூறினார். 120 பேர் காணாமல் போயிருக்கலாம் என்றும் கணக்கிட்டுக் கூறிய பணிப்பாளர் நாயகம், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 1,041 பேர், தற்காலிக முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் இவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகள் மற்றும் உணவுகள் போன்றன வழங்கப்பட்டு வருவதாகவும் கூறினார். குறித்த பிரதேசத்தின் மீட்புப் பணிகளில் இராணுவத்தினர், பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இது தொடர்பில் கருத்துரைத்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர, அரநாயக்க பகுதி மீட்புப் பணிகளுக்காக 160 இராணுவத்தினரும் 43 கெமாண்டோப் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். இதேவேளை, அரநாயக்க பிரதேசத்தில் எற்பட்டுள்ள அவலத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேரில் சென்று பார்வையிட்ட அதேவேளை, வெள்ள அபாயத்துக்கு இலக்காகியுள்ள பிரதேசங்களை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஹெலிகொப்டரில் சென்று பார்வையிட்டார். இதேவேளை, கேகாலை, புளத்கொஹுபிட்டிய, களுபஹன மலையிலிருந்த மரங்கள், கற்பாறைகளை இழுத்துக்கொண்டு, மலையிலிருந்து வேகமாக நீர் வடிந்து வருவதுடன், தேயிலை பயிர்செய்யப்பட்டிருந்த அப்பகுதி, தற்போது சிவப்பு நிற மண் அடங்கிய சேற்றுப்பகுதியாகவே காட்சியளிக்கிறது. இந்த மண்சரிவுக்கு, 9 அறைகளைக் கொண்ட நீண்ட லயன் குடியிருப்பொன்றின் ஒரு பகுதி புதையுண்டுள்ளது. மேற்படி தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (17) இரவு 9.30 மணியளவில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக, ஒரு லயன் குடியிருப்பில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் அவ்வீடுகளில் வசித்து வந்த 16 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 6 மாத கைக்குழந்தை உட்பட இரண்டு சிறுவர்கள், ஒரு சிறுமி, எட்டுப் பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் இரண்டு வயோதிபர்கள் காணாமல் போயுள்ளதாக, களுபஹன தோட்டத் தலைவர் செல்வநாயகம் தெரிவித்தார்.
இவர்களில் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையோரது சடலங்களை மீட்கும்பணி தொடர்வதாகவும் கூறிய அவர், கதிரேசன் (56 வயது) மற்றும் கலைச்செல்வன் (வயது 24) ஆகிய இருவருமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். மீட்புப் பணியில் இராணுவமும் பொதுமக்களும் இணைந்து ஈடுபட்டு வருவதாகவும் தொடர்ந்து பெய்துவரும் மழை மற்றும் மலையிலிருந்து வடிந்தோடும் நீரோட்டம் காரணமாக, மீட்புப் பணிகள் தாமதமாகுவதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். இத்தோட்டத்தில் சுமார் 350 க்கும் மேற்பட்டோர் வசித்து வருவதாகவும் இவர்களில் 100 பேர், யக்கல பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இவ்வனர்த்தத்தில் உறவுகளை இழந்தவர்கள், அங்கிருந்து வெளியேற மறுப்பதாகத் தெரிவித்த தோட்டத் தலைவர், குறித்த மலையில், பாரிய கற்பாறையொன்று உள்ளதாகவும், கற்பாறைக்கு நடுவில் ஊற்றுநீர் ஊற்றெடுப்பதாகவும், ஊற்றுநீர் வந்து விழும் பகுதியிலுள்ள மலையே இவ்வாறு சரிந்து வந்ததாகவும் கூறினார். இதேவேளை, மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, களனி ஆற்றின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், கொழும்பில் பல பாகங்கள், வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. கொலன்னாவ, கடுவெல, வெல்லம்பிட்டிய போன்ற பிரதேசங்களில் 5 அடிக்கும் அதிகமாக நீர் நிறைந்துள்ளது. கடுவெல மற்றும் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த தொம்பே ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள், தங்களது பிரதேசங்களிலிருந்து வெளியேற முடியாமல் சிக்குண்டுள்ளனர். காசல்ரீ, நோர்ட்டன் மற்றும் கெனியோன் நீர்த்தேங்கங்களின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டு உள்ளமையாலேயே களனி ஆற்றின் நீர்மட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், களனியாற்றின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் ஆற்றை அண்மித்து வாழ்பவர்கள், பாதுகாப்பான இடங்களை நோக்கிப் பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொழும்பு நகரின் வடிகாலமைப்பு காலாவதியாகியுள்ளமையே, கொழும்பின் வெள்ளநீர் தேங்கியிருக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்தார். நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக ஒன்றரை இலட்சம் ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை நிலங்களும் 50 ஆயிரம் ஏக்கர் மரக்கறிப் பயிர்ச்செய்கை நிலங்களும் நாசமாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அவசர நிலைமையைக் கருத்திற்கொண்டு, அரச உத்தியோகத்தர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு, நேற்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment