Latest News

April 12, 2016

இலங்கையில் இராணுவ ஆட்சி -சி.வி
by admin - 0

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு ஒப்பான கோரமான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.

வடமாகாணத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு, சட்டவிரோத நில அளவீடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை எதிர்வரும் 18ஆம் திகதி சந்தித்து முறையிடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வடமாகாண சபையின் 49ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் சிங்கள பெளத்த மயமாக்கலுக்கே முப்படையினரும் இங்கே தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்களே தவிர தேசிய பாதுகாப்புக்கு இங்கே படையினர் இல்லை.

கொக்குத்தொடுவாய் பகுதியில் கிராமசேவகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் இராணுவம் சிங்கள மீனவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றது.

இந்த நிலையில் வடமாகாணத்தில் தேசிய பாதுகாப்பின் பெயரால் முப்படையினர் நிறுத்திவைக்கப்படுகின்றார்கள். ஆனால் தேசிய பாதுகாப்பிற்காக அவர்கள் இங்கே இல்லை. அவர்கள் சிங்கள பெளத்த மயமாக்கலை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளவே படையினர் இங்கே இருக்கின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மகிந்த ஆட்சியில் கடற்றொழில் அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன மற்றும் தற்போதைய கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோர் குறித்த சிங்கள மீனவர்களை வெளியேற்றுவோம் என கூறியும் அவர்கள் வெளியேற்றப்படவில்லை. அவர்களுக்கு படையினர் பாதுகாப்பு வழங்குகிறார்கள் என்றால் இங்கே நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் சிவில் நிர்வாகம் நடைமுறைக்கு வரவில்லை. மாறாக மகிந்த ஆட்சிக்கு ஒப்பான கோரமான ஆட்சியே நடக்கின்றது என்றார்.
« PREV
NEXT »

No comments