யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதங்கள் வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்பட இருந்தன என்று முன்னரே தெரிந்தும் அதனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தாத முன்னாள் வெளிவிவகார அமைச்சராக இருந்த ஜீ.எல்.பீரிஸை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாக பல்வேறு விதமான கருத்துக்கள் தெற்கு அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்ற நிலையில் அது தொடர்பாக ஊடகவியலாளர்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் வினா எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வெடிச்சத்தங்களோ பிரச்சினைகளோ இல்லாமல் இருக்கின்ற நிலையில் சமாதானம் பேசப்படுகின்ற போது அச்சமாதானத்தின் ஊடாக இதுவரை தமிழ் மக்கள் அனுபவித்த துன்ப, தூயரங்களுக்கு நிம்மதியான வடக்கு, கிழக்கு இணைந்த தீர்வு கிடைக்குமென நினைத்துக் கொண்டே நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றோம்.
இந்நிலையில் சாவகச்சேரி, மன்னார் பகுதிகளில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வாளர்களை வைத்து கொண்டு இவ்வாறான செய்திகள் பரப்பப்பட்டுள்ளன.
குறிப்பாக ஆயுதங்கள் இராணுவத்தால் கூட வைக்கப்பட்டிருக்கலாம் என்பதற்கும் சாத்தியங்கள் உள்ளன. அல்லது கடந்த காலங்களில் விடுதலைப்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்ற நிலையும் உள்ளது. இவ்வாறான நிலையில் இத்தகைய விடயங்களை பெரிய பூதாகாரமான விடயமாக சிங்கள ஊடகங்கள் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பிவருகின்றன.
தமிழ் மக்கள் இப்போதும் யுத்த நினைவோடு இருப்பது போன்ற மாயையை உருவாக்கும் வகையிலேயே செயற்பட முனைகின்றன.
இதேவேளை குறித்த ஆயுதங்கள் வெள்ளவத்தைக்கு கொண்டுவரப்பட இருந்தது எனத் தெரிந்தும் அதனை முன் கூட்டியே பொலிஸாருக்கு தெரியப்படுத்தாத முன்னாள் வெளிவிகார அமைச்சராகிய ஜீ.எல்.பீரிஸை புனர்வாழ்வுக்கு உட்படுத்த வேண்டும்.
மேலும் அரசாங்கம் எதற்கு புனர்வாழ்வளிப்பது என்று தெரியாமல் தொடர்ந்தும் தமிழ் மக்களை அச்சுறுத்துகின்ற பாணியில் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக காணாமல் போனவர்களின் உறவினர்கள், போரால் பாதிக்கப்படடவர்கள், முன்னாள் போராளிகள் என அனைவரையும் நிம்மதியில்லாத வாழ்க்கைக்கு தள்ளும் வகையிலும் தொடர்ந்து யுத்த சூழ்நிலையில் வைத்திருப்பதற்கு அரசாங்கம் முயலுகின்ற செயற்பாட்டினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இவ்விடயத்தில் அனைவரும் வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
No comments
Post a Comment