ஆயுதத்தின் மூலம் வென்றெடுக்க முடியாத தமிழீழத்தை அரசியலின் மூலமாக வெற்றிகொள்ளவே வடமாகாண முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும் முயற்சிக்கின்றனர். நாட்டிற்கும், அரசியல் அமைப்பிற்கும் எதிராக செயற்படும் விக்கினேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து கடுமையாக தண்டிக்க வேண்டும் என பொதுபல சேனா, சிங்கள ராவய , ராவணா பலய ஆகிய அமைப்புகள் தெரிவித்தன.
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து சம்பந்தனை உடனடியாக நீக்கிவிட்டு சிங்கள தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் . சிங்கள மக்கள் மனங்களில் புகைந்துகொண்டிருக்கும் வெறுப்பையும், கோபத்தையும் தமிழ் மக்களுக்கு எதிராக திருப்பிவிட வேண்டாம் எனவும் அவ்வமைப்புகள் எச்சரித்தன.
பொதுபல சேனா, சிங்கள ராவய , ராவணா பலய ஆகிய சிங்கள பெளத்த அமைப்புகள் நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அதன் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்
பொதுபலசேனா
செய்தியாளர் சந்திப்பில் பொதுபல சேனா அமைப்பின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே தெரிவிக்கையில்,
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் தலைவர்கள் நாட்டில் பிரிவினைக்கான ஆரம்பத்தை இட்டுச் சென்றமையே நாட்டில் பாரிய யுத்தம் ஒன்றை எதிர்கொண்டு மிகப்பெரிய இழப்புகளை சந்திக்க நேர்ந்தது.
பாரிய இனவாத யுத்தம் ஒன்றை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டில் மீண்டும் நல்லிணக்க செயற்பாடுகளை பலப்படுத்தி சென்ற வேளையில் அதை குழப்பும் வகையில் மீண்டும் பிரிவினைவாத செயற்பாடுகள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் வடக்கு மாகாணசபையின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. சர்வதேச நாடுகளும், புலம்பெயர் அமைப்புகளும் மீண்டும் வடக்கில் பிரிவினைக்கான அடித்தளத்தை இட ஆரம்பித்துள்ளன. ஆயுதமேந்தி நாட்டில் பிரிவினையினை உருவாக்க முயன்ற போதிலும் எமது இராணுவமும் முன்னைய அரசாங்கமும் அதற்கான வாய்ப்புகளை வழங்காது பிரிவினைவாதத்தை முழுமையாக அழித்தன . ஆனால் இன்று மீண்டும் நாட்டில் பழைய மோசமான நிலைமைகள் உருவாக்கி வருகின்றன.
எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் எப்போதும் பிரிவினைவாதத்தின் பக்கம் நின்று செயற்படுபவர். அவரால் நல்ல எதிர்க்கட்சி தலைவராக செயற்பட முடியாது. தனித் தமிழீழத்தை உருவாக்கும் ஒரே நோக்கம் மட்டுமே இன்று அவர்களின் மனங்களில் உள்ளது. இவர்கள் இன்று தமிழ் மக்களின் மனங்களில் பிரிவினையினை விதைத்து நாட்டில் தமிழ் மக்களை ஓரங்கட்ட முயற்சிக்கின்றனர். ஜனநாயகம் என்ற பெயரில் இவர்கள் புலிகளை ஆதரிக்கும் வேலைத்திட்டத்தையே முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.
சிங்கள ராவய
சிங்கள ராவய அமைப்பின் பொதுச்செயலாளர் மாகல்கந்தே சுதத்த தேரர் கூறுகையில்,
மீண்டும் இன்று நாட்டில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. வடக்கிலும் கிழக்கிலும் இன்று ஆயுத புரட்சி ஒன்றுக்கான ஆயத்தம் நடைபெற்று வருகின்றது. அன்று விடுதலைப் புலிகள் ஆயுதம் மூலம் நாட்டில் பிரிவினையினை ஏற்படுத்தி தனித்த தமிழீழம் ஒன்றை உருவாக்க முயற்சித்தனர். ஆனால் தமிழீழம் உருவாவதை நாம் அன்று தடுத்து நிறுத்தினோம். எனினும் அன்று ஆயுதமேந்திய புலிகளை அழித்து நாட்டில் விடுதலையை ஏற்படுத்தினோமே தவிர அவர்களின் அரசியல் நகர்வுகளை நாம் மறந்துவிட்டோம். புலிகளின் அரசியல் கட்சியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். இன்று வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் ஆகியோர் தனித்த தமிழீழத்தை உருவாக்கும் பயணத்தில் தமது நகர்வுகளை முன்னெடுத்து செல்கின்றனர்.
தனித்த பிராந்தியம் ஒன்றை உருவாக்கி தனி நாட்டுக்கான அலகுகளை இப்போதே முன்வைத்து வருகின்றனர். வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் இன்று தெரிவிக்கும் கருத்துகள் அனைத்தும் நாட்டின் ஐக்கியத்தை சீரழிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. புலம்பெயர் புலிகளின் நோக்கத்தை நிறைவுசெய்யும் வகையிலும், புலிகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் வகையிலுமே இன்று அவரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. விக்கினேஸ்வரன் சட்டம் அரசியல் யாப்பு பற்றிய தெளிவு இல்லாதவர் அல்லர். சட்டம் எவ்வாறாக செயற்படும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அவ்வாறு இருக்கையில் விக்கினேஸ்வரன் நாட்டுக்கும் அரசியல் அமைப்பிற்கும் எதிராக செயற்பட்டு வரும் நிலையில் உடனடியாக அவரை கைதுசெய்து கடுமையாக தண்டிக்க வேண்டும்.
அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் மறுமுனையில் நாட்டில் பிரிவினையை உருவாக்கி வருகின்றார். இவர் வடக்குக்கும் கிழக்குக்கும் மட்டுமே எதிர்க்கட்சி தலைவர் அல்ல. முழு நாட்டையும் இவர் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாது தமிழ் மக்களின் தலைவர் என்ற நிலையிலேயே சம்பந்தன் செயற்பட்டு வருகின்றார். அரசியல் அமைப்பு திருத்தம் மேற்கொள்வதில் தமிழ் மக்களின் தனித் தாயகம் உருவாக வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் அவர் செயற்பட்டு வருகின்றார். ஆகவே இன்று வடக்கு முதல்வரும் எதிர்க்கட்சி தலைவரும் நாட்டில் பிரிவினையை உருவாக்கி வருகின்றனர்.
இப்போது அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதை தெரிவிக்க வேண்டும். இவர்களின் கருத்துக்கு அரசாங்கம் என்ன பதில் கூறப்போகின்றது. பிரிவினையின் பக்கம் நாட்டை கொண்டுசெல்லப் போகின்றனரா அல்லது நாட்டில் பிரிவினைவாதிகளின் செயற்பாடுகளை அழிக்கப்போகின்றனரா என்பதை தெரிவிக்க வேண்டும். ஆனால் இன்று வடமாகாண முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் செயற்பாடுகளை கண்டு அரசாங்கம் அஞ்சுகின்றது. அதன் காரணமாகவே இன்று வடக்கின் செயற்பாடுகளை இவர்களால் தடுக்க முடியாதுள்ளது.
ஆகவே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனை உடனடியாக கைதுசெய்து தண்டிக்க வேண்டும். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனை உடனடியாக பதவி நீக்கிவிட்டு சிங்கள தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும். சிங்கள தலைவர்களால் மட்டுமே நாட்டை சரியாக முன்னெடுத்து செல்ல முடியும். அதை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
வடக்கில் தமிழ் பிரிவினைவாதிகளின் செயற்பாடுகளை பலப்படுத்தி நாட்டை பிரிக்கும் இவர்கள் சிங்களவர்களை கண்டும் அஞ்ச வேண்டும். சிங்கள மக்கள் மத்தியிலும், இராணுவத்தின் மத்தியிலும் இன்றும் புலிகள் மீதான கோபமும், வெறுப்பும் மனங்களில் புகைந்துகொண்டிருக்கின்றன. மீண்டும் நாட்டில் ஆயுத சூழல் ஒன்று உருவாகினால் சிங்கள மக்கள் பொறுமைகாக்க மாட்டார்கள் என்பதும் சம்பந்தன், விக்கினேஸ்வரன் நினைவில் வைத்துகொள்ள வேண்டும் என்றார்
No comments
Post a Comment