இந்தயுகத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிடின் எதிர்காலத்தில்
நாட்டை பிரிப்பதற்கான ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் தலைதூக்கும். எனவே, இனப்பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியுடன் அரசாங்கம் நடத்துவதற்கு உடன்படிக்கையை செய்துகொண்டு வழிகாட்டியவர் மஹிந்த ராஜபக் ஷவே ஆவார் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற 1956 எஸ.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகாவின் மக்கள் புரட்சி சுதந்திர வெற்றியின் 60 ஆவது ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இந்த நிகழ்வில் தேசிய கீதம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இசைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
இந்நிலையில் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்த ஆகியவற்றின் மூலம் அன்று இனப்பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் எதிர்ப்புகள் காரணமாக அந்த உடன்படிக்கையை தீவைத்து எரிக்கும் நிலைமை அன்று பண்டாரநாயகாவுக்கு ஏற்பட்டது. ஆனால் அன்று உண்மையில் இதனை எதிர்த்தவர்கள் உடன்படிக்கையின் சாதகம், பாதகம் தொடர்பான பேச்சுக்களை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாது அது கிழித்து எரியப்பட்டதனால் இன்றும் இனப்பிரச்சினை தீராமல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
அதேபோன்று ஜே.ஆர். ஜெயவர்தன 13 ஆவது திருத்தத்தை கொண்டுவந்தார். இந்திய - இலங்கை உடன்படிக்கையை செய்து கொண்டார். சந்திரிகா பண்டாரநாயக தீர்வுப் பொதியை கொண்டுவந்தார். அதுவும் தீ வைத்து எரிக்கப்பட்டது. எனவே 1956 இல் இருந்த பிரச்சினை இன்னும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.
எனவே இந்த யுகத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் நாட்டை பிரிக்க, தனிஈழம் கேட்க ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் தலைதூக்கும். எனவே இதற்கு இடமளிக்கக்கூடாது. அனைவரும் இணைந்து இதற்கு தீர்வுகாண வேண்டும்.
1950 ஆண்டிலிருந்து இலங்கையில் கூட்டாட்சி இடம்பெறுகின்றது. அது ஒன்றும் புதிதானதல்ல. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டாட்சி நடத்துவதற்கு 2007 ஆம் ஆண்டு அலரிமாளிகையில் உடன்படிக்கையை கைச்சாத்திட்டவர் மஹிந்த ராஜபக்ஷவே ஆவார்.
அந்த உடன்படிக்கையை அன்று சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த நானும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் மலிக்சமரவிக்ரமவும் கைச்சாத்திட்டோம். ஆனால் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து 17 பேரை பிரித்தெடுத்து ஆட்சியை முன்னெடுத்தார். இவ்வாறான செயற்பாடுகள் முரண்பாடானதாகும். எனக்கு உடன்பாடுஇருக்கவில்லை. நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
1956 இல் பண்டாரநாயக பிரதமராக பதவியேற்ற பின்னர் அமைச்சரவையிலும் முரண்பாடுகள் எழுந்தன. அன்று அரசாங்கத்திற்கு எதிராக பல அமைச்சர்கள் செயற்பாட்டார்கள். வேலைநிறுத்தம் செய்தனர். இவ்வாறான பல நெருக்கடிகளை பண்டாரநாயகவுக்கு கொடுத்தனர். அதேபோன்று முதுகெலும்பு இல்லாதவன், பலவீனமானவன் என்றெல்லாம் அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் விமர்சித்தனர். இன்று என்னையும் இப்படித்தான் பலர் விமர்சிக்கின்றனர். ஆனால் நாடும், மக்களும் எனக்குமுக்கியம். என் கடமையை நிறைவேற்றுவேன்.
பண்டாரநாயகாவை பயங்கரவாதிகளோ, ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களோ கொலை செய்யவில்லை. மாறாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்காரர்களே கொலை செய்தனர் என்றார்
No comments
Post a Comment