பளையில் பொது மக்களது காணிகளை அடாத்தாக அபகரித்துள்ள தெங்கு பயிர் செய்கை சபையின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் கிளர்தெழுந்து தமது காணிகளை மீட்க நடவடிக்கை.
தமது காணிகள் தமக்கே வழங்கப்படும் எனக் காத்திருந்த காணி உரிமையாளர்கள் தமது காணிகள் தமக்கு வழங்கப்படாத நிலையில் பொறுமையிழந்தவர்களாக இன்றைய தினம் தமது காணிகளுக்குள் நுளைந்து தமது காணிகளுக்கான எல்லைகளையிட்டு காணிகளைத் துப்பரவாக்க முற்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்குச் சென்ற பளை பொலிஸார் மக்களை உடனடியாக அக்காணிகளை விட்டு வெளியேறுமாறும் வெளியேறாது விட்டால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் எச்சரித்தனர். அதற்கு மக்கள் எதிர்ப்புக் காட்டி தமது சொந்தக் காணிகளை விட்டு தாம் ஏன் வெளியேறவேண்டும் என கேள்வியெழுப்பினர். ஆதனையடுத்து மக்களைக் கைது செய்வதற்காக பெண் பொலிஸார் உட்பட மேலதிக பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவளைக்கப்பட்டு மக்களைக் கைதுசெய்ய முற்பட்ட போது சம்பவத்தைக் கேள்விப்பட்டு அவ்விடத்திற்கு விரைந்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்கள் மக்களிடமிருந்து விடயத்தைக் கேட்டு ஆராய்ந்ததன் பின்னர் மக்கள் தங்களுடைய சொந்தக் காணிகளுக்குள்தான் சென்று எல்லையிட்டுக் குடியேற முயற்சிக்கிறார்கள்.
இது நியாயமானதே இதில் என்ன குற்றம் உள்ளது. மக்களது காணிகள் மக்களுக்கே சொந்தமானவை. ஆதற்காக மக்களைக் கைதுசெய்ய முடியாது. மக்களைக் கைது செய்வதாக இருந்தால் இந்த மக்களின் பிரதிநிதியாகிய நான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளேன் என்னை முதலில் கைதுசெய்த பின் மக்களைக் கைதுசெய்யுங்கள். மக்கள் தமது சொந்தக் காணிகள் தமக்கே கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடுகின்றார்கள். எனக் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பளைப் பிரதேசத்திலுள்ள கரந்தாய் கிராமத்தில் 27 பயனாளிகளுக்குச் சொந்தமான 51 ஏக்கர் காணி 1976 இல் காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டிருந்தது.
கடந்த 2009 ஆம் ஆன்டு முதல் தெங்கு பயிர் செய்கைச் சபை இக்காணிகளை அடாத்தாக அபகரித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. அக்காணிகளை முள்வேலி அமைத்து காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளுக்குள் நுளையாத வகையில் செயற்பட்டு வருகின்றது. இதனால் காணிகளை இழந்த மக்கள் பல்வேறு தரப்பினரிடம் தமது காணிகளை விடுவித்துத் தருமாறு கோரிவந்தனர். இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் கவனத்திற்கு இவ்விடயம் கொண்டுவந்ததையடுத்து கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் இவ்விடயம் ஆராயப்பட்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அக்காணிகளை மக்களிடமே கையளிக்குமாறு தீர்மானிக்கப்பட்டது.
மேலதிகமாக மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனாலும் அக்காணிகள் மக்களுக்கே வழங்கப்படவேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையிலும் தெங்கு அபிவிருத்திச் சபை சட்டத்திற்கு முரணாகச் செயற்பட்டமையை எதிர்த்தே மக்கள் தமது காணிகளுக்குள் நுளையும் போராட்டத்தை நடத்தினர்.
இறுதியில் மக்களின் போராட்டம் வலுப்பெற்றதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸ் பொறுப்பதிகாரி கல்யாணரடணவிடம் மேற்படி நிலைமைகளைத் தெளிவுபடுத்தினார். அதனையடுத்து எதிர்வரும் இரண்டு வார காலத்தினுள் மக்களின் காணிகளை மக்களுக்கே பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக பொலிஸ் அதிகாரி உறுதிமொழியளித்ததனையடுத்துப் போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
q
No comments
Post a Comment