Latest News

March 19, 2016

புலிகளின்"தவளைப் பாச்சலும்" தடம் புரட்டிய "யாழ்தேவியும்"....!!-- ஈழத்து துரோணர்
by admin - 0


நவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதல் தவளைப் பாய்ச்சல் நடவடிக்கையாகும்.!

பூநகரியில் சிங்களப்படைகளிடம் இருந்த போது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. 90களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்கு உள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டின் கழுத்தை நெரித்த படைத்தளங்கள் இரண்டு இருந்தன.
ஆனையிறவு ஒரே தரைவழிப் பாதையை இறுக்கியிருந்தது. கடல் வழியான மாற்றுப் பாதையும் இறுக்கி யாழ் குடா மக்களை இக்கட்டில் வைத்திருந்தது பூநகரிப்படைத்தளம்.

அப்போது யாழ் குடாநாட்டு மக்களுக்கான ஒரேயொரு போக்குவரத்துப் பாதையாக கிளாலி – நல்லூர் (குஞ்சுப்பரந்தன்) பாதையே இருந்தது. அப்பாதை இரு பெரும் இராணுவ முகாம்களுக்க நடுவால் வருகிறது. ஒருபுறம் ஆனையிறவு, மறுபுறம் பூநகரி.

இரவில் பல படகுகள் பயணிக்கும். தொடக்கத்தில் நிறையப்பேர் அக்கடலிற் கொன்று குவிக்கப்பட்டனர். வெட்டுக் காயங்களோடு கூட தமிழரின் சடலங்கள் கரையொதுங்கின. ஆயினும் பயணம் தொடர்ந்தது. கடலில் இறங்கிவிட்டால் அக்கரை போய்ச்சேர்வோம் என்ற நம்பிக்கை யாருக்கும் இருப்பதில்லை. ஆனாலும் யாழ் குடாநாட்டுக்கான ஒரேயொரு பாதை அதுதான். கற்புலிகளின் தோற்றத்தின் ஆரம்பகட்ட நேரமாக இருந்த போதும் லெப்.கேணல்.சாள்ஸ் அண்ணை தலமையில் பயணத்துக்கு பாதுகாப்பு கொடுத்து மக்களை பாதுகாத்தனர் புலிகள்.

பூநகரியில் சிங்களப்படையின் மிகப்பெரிய கூட்டுப்படைத்தளம் இருந்தது. நாகதேவன் துறையை மையகமாகவைத்து ஒரு கடற்படைத்தளமும் மிகப்பெரிய இராணுவ முகாமும் இருந்தது. கிளாலிக் கடனீரேரியில் நடந்த அத்தனை படுகொலைகளுக்கும் நாகதேவன்துறைக் கடற்படைத்தளமே காரணம்.

இப்பெரிய கூட்டுப்படைத்தளம் மீது புலிகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டனர். அதற்கான வேவு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன.
அதன் ஊடாக சண்டைக்கான திட்டம் தயாராகி புலிகளின் எல்லா துறைகளிலும் இருந்து,அந்த தாக்குதலுக்காக (புலனாய்வுதுறை உட்பட )போராளிகள் திரட்ட பட்டது. அந்த நேரத்தில் புலிகள் அமைப்பின் நிவாகம் மாவட்ட ரீதியாக பிரிக்க பட்டிருந்தது. அதில் அப்போது தளபதிகளாக இருந்தோரிடம் ஒவ்வொரு பகுதியை கைப்பற்றும் பொறுப்பு கொடுக்கப் பட்டிருந்தது. அதன் படி அதற்கான பயிற்சிகள் அரியாலை,தென்மராட்சி கிளிநொச்சி,அச்சுவேலி, மணலாறு போன்ற பகுதிகளில் துண்டு துண்டாக பயிற்சிகள் நடந்தது.

இது இப்படி இருக்க 28.09.1993 அன்று ஆனையிறவுப் பெரும்படைத்தளத்தின் ஒரு முனையான இயக்கச்சியிலிருந்து புலோப்பளை ஊடாக, கிளாலி கடல் போக்கு வரத்தை தடுத்து யாழ் குடாவை வெளித்தொடர்பு இல்லாது தனிமை படுத்தும் நோக்குடன் ‘யாழ்தேவி’ என்ற படைநடவடிக்கை சிங்கள அரசால் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் புலிகள் படையணிகள் பயிற்சியில் இருந்தமையால் காவலுக்கு இருந்த சொற்ப போராளிகளை தாண்டி எதிரி புலோபளை வரை முன்னேறிவிட்டான்.

எதிரியின் திட்டம் நிறை வேறினால் யாழ் குடா தனிமை பட்டு போவது மட்டுமல்ல பல மாதங்களாக சிரமப்பட்டு பயிற்சி எடுத்த தவளை நடவடிக்கையும் கைவிட்டு போகும் அபாயத்தில் புலிகள் இருந்தனர். இதை உணர்ந்த தலைவர் அந்த நேரத்தில் அரியாலையில் பயிற்சியில் இருந்த சாள்ஸ் அன்ரனி படையணியின் ஒரு தொகுதி போராளிகளுடன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணையை, முறியடிப்பு தாக்குதலுக்காக அவசர அவசரமாக களமிறக்கினார்.

அவரது மறிப்பு தாக்குதல் புலோப்பளையில் ஆரம்பித்து எதிரியை பெரும் இழப்புடன் 2km தூரம் பின்னுக்கு துரத்தினார். அந்த தாக்குதலின் போது களத்தில் பால்ராஜ் அண்ணையும் எதிரிக்கு அருகில் இருந்தமையால் அவனின் தாக்குதலில் ஒரு காலில் எலும்பு உடைந்து படுகாயமடைகின்றார். அதன் பின்பும் களத்தை விட்டு அகல மறுத்த போதும்,போராளிகளால் வில்லங்கமாக அவரை வைத்தியத்துக்காக பின் நகரத்தைப் பட்டதும், தொடர்ந்து அந்த சண்டையை பிரிகேடியர் தீபண்ணை வழிநடத்த அவருக்கு உதவியாக நரேஷ் அண்ணை விடப்பட்டிருந்தார் .
புலிகளால் துரத்தி அடிக்க பட்ட பின்னும் எதிரி முகாம் திரும்பாது தன்னை மீளவும் ஒழுங்கு படுத்தி பெரும் தாக்குதலுக்கு தயார் படுத்தினான். எமது தரப்பிலும் தீபண்ணை புலோபளையில் வைத்து எதிரிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க தயாரானார்.
அதன் ஒரு திட்டமாக புலோப்பளையின் கரையோர கண்டல் காடுகளின் மறைப்பில் கிடங்கு வெட்டி அதனுள் போராளிகளை இருக்க வைத்து உருமறைப்பு செய்தார். அதே போல நடுவில் இருந்த வெளிப் பகுதியை எதிரி இலவுவாக முன்னேற இடம் விட்டு,அருகில் இருந்த பனைமர தோப்பினுள்ளும் அதேபோல் புலிகளை இருக்க செய்து பெரும் பொறி ஒன்றை உருவாக்கிய பின் எதிரியை மறித்து வைத்திருந்த போராளிகளுக்கும் எதிரி முன்னேறும் போது எதிரி சந்தேக படாதவாறு சண்டை இட்டபடி பின் வாங்கும் படி கட்டளை இட்டிருந்தார்.
அதன் படி அடுத்த நாள் எதிரி சரத்பொன்சேகா தலைமையில்(ஸ்ரீலங்காவின் பின்னாளில் இராணுவ பளபதியாக இருந்த லெப்.ஜெனரல்சரத் பொன்சேகா) புலிகள் வைத்துள்ள பொறி அறியாது தமது முன்னேற்றத்தை ஆரம்பித்தனர். எதிரியை தடுத்து வைத்திருந்த போராளிகளும் திட்டத்தின் படி சண்டையிட்டபடி பின் வாங்கினர்.
பின்வாங்கிய புலிகள் பிரதான வீதிக்கு எதிரியை முன்னேற விடாமால் சண்டையை கடுமையாக்கி,புலிகள் அமைத்து வைத்திருந்த பொறி இருந்த பகுதியில் மட்டும் எதிரியை முன்னேற அனுமதித்தார்கள். இதை அறியாத எதிரி அவர்களை கடந்து செல்லும் வரை காத்திருந்து,எதிரியின் பிரடியில் ஓங்கி அடித்தனர். இப்படியொரு முறியடிப்பு தாக்குதலை எதிரி எதிர் பாக்கவில்லை. எதிரி என்ன நடக்கிறது என்று அறிவதற்குள் பொறியில் மாட்டிய எலிகள் போல மாண்டு போயினர். புலிகளும் இரண்டு தாங்கிகளை (tanks) முற்றாக அழித்து, நான்கு தாங்கிகளை சேதமாக்கியும் பல நூறு எதிரியை கொன்றும் இருந்தனர்.
புலோபளையில் வைத்து சர்த்பொன்செகாவின் "யாழ்தேவியை"புலிகள் தடம் புரட்டினர். இந்த முறியடிப்பில் கிளிநொச்சிக் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்.கேணல் நரேஸ் அண்ணை (நாயகன்) உட்பட எண்பத்தைந்து போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
புலிகளால் மிகவும் இரகசியம் காக்கப் பட்டு கடும் பயிற்சியின் பின் (முக்கியமான தளபதிகளை தவிர பயிற்சியில் இருந்த போராளிகளுக்கு எங்கு தாக்க போகிறோம் என்று சொல்ல படவில்லை, மாறாக இறுதி நேரத்தில் தான் சொல்ல பட்டது) யாழ்தேவி நடவடிக்கை முடிந்து, 
ஒன்றரை மாதங்களின் பின் அணிகள் எடுக்கப் பட்ட வேவு திட்டத்தின் படி அந்தந்த அணிகள் அவர்களுக்குரிய தளபதிகளுடன் பூநகரி முகாமினுள் நுழைந்தனர். இதில் குணா அண்ணையின் தலமையில் உல் நுழைந்த அணிகள் எதிரிகளால் இனம் கானப் பட்டமையால் தாக்குதலுக்கான நேரத்துக்கு முன்னமே சண்டை ஆரம்பமானது. இந்த சண்டையை அரியாலை கிழக்கில் இருந்த எமது முகாம் ஒன்றில் தங்கியிருந்து அண்ணை (தலைவர்) நெறிப்படுத்தினார்.!
புலிகளின் சமர்களங்களில் தவிர்க்க முடியாத தளபதி பால்ராஜ் அண்ணா தான். தவளை நடவடிக்கையில் பங்கு பற்ற முடியாமையை நினைத்து,வைத்திய சாலையில் (26ம் வாட்டில்) காலுக்கு மண் மூட்டை போட்டிருந்த போதும், அவரது எண்ணமெல்லாம் அதை சுற்றியே இருந்தது. அவரை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வைத்தியசாலைக்கு சென்று பார்ப்பேன். அப்போது அவரது ஏக்கம் வார்த்தைகளில் சொல்ல முடியாது.!
அவர் இருக்கும் வைத்திய சாலை பகுதியை அறிந்த எதிரி அவரை இலக்கு வைத்து மண்டைதீவில் இருந்து வைத்திய சாலை என்றும் பாக்காமல் நான்கு எறிகனைகளை எவியிருந்தான். 
அதனால் அவர் திருநல்வேலியில் இருந்த ஜேம்ஸ் (தாக்குதல் விசாரணை பிரிவு MO பிரிவுக்கு சொந்தமானது) முகாமிற்கு மற்றப் பட்டார். அங்கிருந்த படி சண்டையின் போக்கை தொலை தொடர்பில் கேட்டுக் கொண்டிருந்தார். தினமும் களங்களில் நின்று சுழன்ற அந்த நாயகனுக்கு அது விருப்பமுடைய நாளாக இருந்திருக்காது.! அத்தோடு அவரது வலது கைபோல் செயல் பட்ட நவநீதண்ணாயின் இழப்பு அவருக்கும் பெரும் இழப்பாகவே இருந்திருக்கும்.!!
நவம்பர் 10, 1993 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவளைப் பாய்ச்சல் எதிரியை துவசம் செய்திருந்தது. இந்த தாக்குதலின் பின் ஐந்து விசையூந்து படகுகள் (இரண்டு சேதமாகியிருந்த படியால் புலிகளால் அழிக்கப் பட்டது ) மற்றும் தாங்கி ஒன்று (ஒன்று சேதமான படியால் பின் வாங்கும் போது புலிகளால் உடைக்கப் பட்டது) உட்பட 120mm மோர்டர்கள் மற்றும் பெரும் தொகை ஆயுதங்களும் கைப்பற்ற பட்டிருந்தது. இதனால் புலிகள் சேனை படைத்துறை ரீதியில் பெரும் வளர்ச்சியை பெற்றது.!

இந்த தாக்குதலில் முக்கிய தளபதிகள் உட்பட 469 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதன் போது, என்னோடு தனிப்பட்ட ரீதியில் நட்புடன் இருந்த லெப்.கேணல்களான குணாண்ணை, அன்பண்ணை, சூட்டண்ணை, நவநீதண்ணை, மற்றும் கப்டன் கோணேஸ் போன்றோரையும் இழந்திருந்தோம். இந்த இழப்புகளால் (முன்னைய பதிவுகளில் இவர்களுடனான நட்பு பற்றி பகிர்ந்துள்ளேன்) அந்த நேரத்து வெற்றியை என்னால் கொண்டாட முடியாது போனது என்னவோ உண்மை தான்.!!
வலிகளுடன் கூடிய வெற்றிகள் தொடரும்..துரோணர்
« PREV
NEXT »

No comments