Latest News

February 01, 2016

புலிகளின் சீருடையின் ஆரம்பமும் அதன் பின்னால் உள்ள தியாகங்களும்.! ஈழத்து துரோணர்..!!
by admin - 1

புலிகளின் சீருடையின் ஆரம்பமும் 

அதன் பின்னால் உள்ள தியாகங்களும்.!

ஈழத்து துரோணர்..!!

இராணுவச் சீருடை என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் தனித்தன்மை கொண்டதாக அமைத்திருப்பார்கள். ஆனால், பெரும்பாலும் எல்லா நாட்டுச்சீருடைகளும், ஒத்த தன்மையுடையதாகவே இருக்கும். அந்த,அந்த நாடுகளின் சீருடையை, பொது மக்கள் அணிவதற்கு தடையும் உள்ளது. 

எமது சீருடை மட்டுமே தனித்தன்மை வாய்ந்ததாகவும், கம்பீரமாகவும், இவைகளில் இருந்து மாறுபட்ட வடிவத்தில் இருப்பதை நீங்கள் காணலாம். ஒரு நாட்டிற்கு சீருடை என்பது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால், எந்த சீருடைக்கும் இல்லாத தகுதி எமது "வரிப்புலி சீருடைக்கு" உள்ளது. ஏனெனில் உலகின் மூத்த குடியாக தமிழர் இருந்த போதும், தமிழரின் இராணுவத்திற்கான முதலாவது சீருடை இதுவாகும். 

ஒரு நாட்டை பொறுத்தவரை, சீருடை கொண்ட படையமைப்பை  கட்டி எழுப்புவது, அவர்களுக்கு சாதாரண விடையம். ஆனால் ஒரு விடுதலை அமைப்புக்கு அது சாதாரண விடையம் அல்ல. அதில் இரத்தமும் சதையும் தோய்ந்ததாகவே  இருக்கும். எமது சீருடை எப்படி உருவாகியது என்பதை நீங்கள் அறிய வேண்டும். 

1989 என்று நினைக்கின்றேன் இந்திய இராணுவத்தினர் மணலாற்று காட்டை சுற்றி நின்றபோது, அந்த முற்றுகைக்குள் இருந்தபடியே தலைவரின் எண்ணத்தில் உருவானதே இந்த சீருடை. அந்த நேரத்தில் ஒலிவர் என்னும் போராளி, தலைவரின் எண்ணத்திற்கு வர்ணம் தீட்டி, எமது புதிய சீருடை ஓவியமாக வரையப்பட்டது. 

அது போலவே மாவீரருக்கான வணக்கப்படத்தையும் அவரே வரைந்தார்.( வீரச்சாவடைந்த போராளியின் உடல்களை தூக்கிய படி உள்ள படம்) பின் ஒரு வெள்ளை துணிக்கு மட்டையில் வெட்டிய அச்சு கொண்டு, அதற்கு கலர் வர்ணம் பூசப்பட்டது. பின் அந்த துணியை கொண்டு புலிகளின் முதலாவது சீருடை உருவானது. 
அதை ஆரம்பத்தில் போட்டபின் கழட்டினால் அந்த சீருடையின் மை போட்டவரின் உடலில் ஒட்டி விடும். 

ஆனபோதும் அதையே போராளிகள் விரும்பி அணிந்தனர். அதன் பின்னர் 1990,1991வரை தமிழ்நாட்டில் இருந்து சீருடைத்துணி தயாரித்து, தாயகம் கொண்டு வரப்பட்டது. இராஜீவ்காந்தியின் மரணத்தின் பின் இந்தோனேசியாவில் இருந்தே இறுதிவரை சீருடைக்கான துணி பிரத்தியேகமாக உருவாக்கி கடலால் கொண்டுவரப்பட்டது. இதற்காகவே பல போராளிகள் தங்கள் உயிரை விட்டுள்ளார்கள். 

அடுத்தது ஒரு போராளி வீரச்சாவடைந்த பின் அவரது வித்துடலை எமது தளபதிகளும், போராளிகளும் எவ்வளவு தூரம் நேசித்தார்கள் என்று நீங்கள் அறிவதற்கு, ஒரு சம்பவத்தை பகிர விரும்புகின்றேன். 1993என்று நினைக்கின்றேன், ஆணையிறவில் இருந்து இருந்து, யாழ்பாணத்தை கைப்பற்றும் நோக்கில், முன்னாள் இராணுவத்தளபதியாக இருந்த ( அந்த நேரத்தில் இராணுவத்தளபதி அல்ல ) சரத்பொன்சேகாவால் "ஒபரேசன் யாழ்தேவி" என்னும் இராணுவநடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 

அந்த யாழ்தேவியை புலிகள் புலோப்பலையில் வைத்து தடம் பிரட்டினர். இந்த தாக்குதலில் தான் பால்ராஜ் அண்ணைக்கும் காலில் காயம் ஏற்பட்டது. அதன் பின் தொடந்து அந்த சண்டையை தீபண்ணை வழிநடத்தினார். அந்த சண்டையில் பல டாங்கிகள் சிதைக்கப்பட்டு பல நூறு எதிரி கொல்லப்பட்டானர். அன்று கிலாலிவரை முன்னேறியிருந்த எதிரி, மூன்றாவது நாள் மீண்டும் ஆணையிறவுக்கே பின் வாங்கினான். 

அந்த சண்டையின் போது, எனது நண்பனான மேஜர் பிரேம்நாத் ( இவர் சூசை அண்ணைக்கு பின்னர் வடமராச்சிக்கு தளபதியாக இருந்தவர்.) என்பவர் வீரச்சாவடைந்திருந்தார். அப்போது அந்த சண்டையில் எனது இன்னொரு நண்பனான மேஜர்.கோணேசும் பங்கு பற்றி இருந்தான். 

பிரேமநாத் வீரச்சாவடைந்த பின் அவனது வரிப்புலி சேட்டை கழட்டி, அவனது இரத்தம் தோய்ந்தபடி கொண்டு வந்து, அதை துவைத்து தன்னுடனேயே வைத்திருந்தான். கோணேஸ்  பூநகரியில் வீரச்சாவடைந்த பின், அந்த சீருடை என்னிடமே இறுதிவரை இருந்தது. 

எதிரி பின் வாங்கியதும், பிரேமநாத் வீரச்சாவடைந்த, அந்த இடத்தை பார்க்கவேண்டும் என்பதற்காக, அன்றே நானும், குமாரும் புலோப்பளைக்கு சென்றோம். நாம் சென்ற நேரம் அங்கு தீபண்ணை தனது அணியினருடன் தேடுதலில் இருந்தார். அவருடன் நலம் விசாரித்த போது தான் மூன்று நாட்களுக்கு முன், எமது போராளிகளின் எட்டு உடல்கள் விடுபட்டதென்றும், அவற்றை இங்கு தான் எங்கோ எதிரி புதைத்திருக்க வேண்டும் எனச்சொல்லி தேடிக்கொண்டிருந்தனர் போராளிகள். 

அப்போது கடல் ஓரமாக உடல் புதைத்தற்கான அடையாளம் ஒன்றை கண்டு அதை தோண்டிய போது, முன்னர் ஒரு சண்டையில் ஒரு  கையை இழந்த யாசிர் என்னும் போராளியினுடையது அந்த உடல். அதனைத்தொடர்ந்து ஏனைய உடல்களும் கண்டு பிடிக்கப்பட்டது. 

அந்த உடலங்களை போராளிகள் மிக அவதானமாக வெளியில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். காரணம் அவர்களது உடல்கள் விடுபட்டு, மூன்று நாளாக மண்ணில் புதைக்கப்பட்டு இருந்ததது. அதனால் அந்த உடலங்கள் அழுகி, துர்நாற்றம் வெளிக்கிழம்பி இருந்தது. போர்க்களத்தில் இது ஒன்றும் புதிதல்ல.! போராளிகள் யாரும் இதை பொருட்படுத்துவதில்லை. அன்றும் போராளிகள், தமது நண்பர்களை எண்ணி, கனத்த இதயத்துடன் அந்த உடலங்களை வெளியில் எடுத்துக் கொண்டிருந்தனர். 

இதில் தீபண்ணை தனது கைகளாலேயே யாசிரின் உடலை வெளியில் எடுத்தார். அந்த நேரத்தில் ஒரு போராளி, இன்னுமொரு போராளியின் உடலை அந்த கிடங்கிலிருந்து வெளியால் எடுப்பதற்கு, (அருவெறுப்பு காரணமாக)  மண்வெட்டியை உபயோகித்தார். அதை கண்ட தீபண்ணை அந்த இடத்திற்கு ஓடிச்சென்று அந்த போராளியை, அந்த மண்வெட்டி பிடியால் தாக்கி விட்டு, அவரது தகடு, குப்பியை பறித்துவிட்டு அமைப்பை விட்டே துரத்தினார். 

பின் அந்த போராளிகளின் உடலங்கள் பூரண இராணுவ மரியாதையுடன்  மாவீரர் துயிலும் இல்லங்களில் விதைக்கப்பட்டது. இப்படித்தான் நாங்கள் எங்கள் போராளிகளின் உடலங்களை நேசித்தோம். ஒரு போராளியின் வித்துடலை மீட்பதற்காக 7 போராளிகளை நாம் இழந்த வரலாறும், எமது வரலாற்றில் எழுதப்பட்டுள்ளது. 

ஆக, இந்த சீருடையை அணிவதற்கு போராளி என்னும் தகுதி வேண்டும். எங்கள் தேசத்தில் போராளிகளை தவிர வேறு யாருக்கும் இதை அணிவதற்கு அனுமதியில்லை. போராளியாக இருந்து, இந்த சீருடையை போட்டு, போராடிய  போராளிகள், அமைப்பை விட்டு விலகி, மீண்டும் "சிறப்பு எல்லைப்படை" என உருவாக்கி களத்தில் நின்றபோதும், அவர்களுக்கென்று பிரத்தியேகமான சீருடையே வழங்கப்பட்டதே தவிர, வரிப்புலி சீருடை வழங்கப்படவில்லை.அது போலவே எல்லைப்படைக்கும் வழங்கப்பட்டது. 

ஆனால் இன்று தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களின் கூட்டங்களில் தலைவரின், மாவீரரின் படங்களை வைப்பது தவறில்லை, அடுத்த சந்ததிக்கு எமது போராட்டம் கடத்தப்படுவது வரவேற்கதக்கதே. 

ஆனால், "தலைவரின் தலையை வெட்டி" தங்கள் தலைகளை அதில் பொருத்தி, அவரை மட்டுமல்ல, எங்கள் இனத்தையே பழிப்புக்கு இடமாக்குகின்றார்கள். இது முதல் முறையல்லை.! இது தொடர்ந்தபடி தான் உள்ளது. உண்மையில் தலைவரை நேசிக்கும் ஒருவரால் இந்த செயலை செய்யமுடியாது. 

இதில் நீங்கள் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது ஈழத்தை சேர்ந்த யாரும் இந்த வேலையை செய்வதில்லை. ஏனெனில் இதற்காக நாம் கொடுத்த விலை அதிகம் என்று அவர்களுக்கு தெரியும். 

தயவு செய்து இது போன்ற அற்ப செயல்பாடுகளை நிறுத்துங்கள். உங்கள் அரசியலுக்காக எங்கள் தலைவனை கேவலப்படுத்தாதீர்கள். எமது போராட்டத்தையும், தலைவரையும் நேசிக்கும் தமிழரால் இதை ஜீரணிக்க முடியாது. 

இது ம.தி.மு.க கட்சியின் பதாதை என்றே நினைக்கின்றேன். நான் வைகோ அண்ணன் மேல் கொண்ட நம்பிக்கையை இது சிதறடிக்கின்றது. அவருக்கு இது தெரிய நடந்திருந்தால் இது கண்டிக்கதக்கது. அப்படி தெரியாது நடந்திருந்தால்? கட்சி தொண்டர்களுக்கு, மீண்டும் இது போல நடக்காது, அறிவுறுத்தப்பட வேண்டும். 
 எனது நட்பு வட்டத்தில் உள்ள அவரது தொண்டர்கள் அவரது கவனத்திற்கு இதை கொண்டு செல்லவும். 
அருவெறுப்புடன் துரோணர்..!!!
« PREV
NEXT »

1 comment

Anonymous said...

அண்ணா, நான் வைகோ அவர்களை மிகவும் மதிப்பவன், அவர் எப்போதும் ஈழம் மற்றும் நமது தேசிய தலைவரை சிறிதும் விட்டு கொடுக்க மாட்டார் , அரசியலுக்காக அவர் விடுதலைபுலிகளை ஆதரிக்க வில்லை என்பது அவரது கடந்த குரல்களையும், அவரது ஆதரவினையும் புரட்டிப் பார்த்தல் தெரியும்..மதிமுக என்ற அரசியல் இயக்கம் பல லட்சம் தொண்டர்களை கொண்டது. ஒரு தொண்டர் , ஏதோ ஒரு உணர்ச்சியில் (அவர் தவறாக சித்தரிக்க வேண்டுமென்று செய்ய வில்லை ) அந்த பதாகைகளை வைத்து விட்டார்..தயவு செய்து இதனை தவாறாக நினைக்க வேண்டாம்.நான் கேள்விபட்டது என்னவென்றால் .. பதாகைகள் தெரியாமல் வைக்கப்பட்டன , அந்த தகவல் மேலிடதிரிக்கு கொண்டு செல்லப்பட்டு , வைகோ அவர்களின் உத்தரவின் பேரில் , உடனடியாக நீக்கப்பட்டது. நன்றி !!