Latest News

February 11, 2016

2ம் லெப் .கணேஷ்.! துணிவின் சிகரம் அவன்.! ஈழத்து துரோணர்.!
by admin - 0

2ம் லெப் .கணேஷ்.! 
துணிவின் சிகரம் அவன்.! 

ஈழத்து துரோணர்.!!

மிகவும் அருமையான இளைய போராளி கணேஷ்.! அவனது குடும்பத்தில் நான்கு பெண் பிள்ளைகளுக்கு, அவன் மட்டுமே ஒரு ஆண்மகன். நான் முதல் முதலில் 1996இன் இறுதியில் முக்கிய தேவையின் நிமித்தம் யாழ் சென்ற போது தான் அவனின் அறிமுகம் எனக்கு கிடைத்தது. எதிரி யாழ்பாணத்தை பிடித்தபின் எம் மக்களின் கோவத்தின் வெளிப்பாடாக நான் அவனைப்பார்த்தேன்.

இயல்பாகவே அவனுக்குள் ஒரு நெருப்பு கனன்று கொண்டிருந்ததை அவதானித்தேன். அதனால் அவனிடம் எனக்குள் ஒரு ஈர்ப்பு இருந்தது. எதிரி யாழை வல்வளைப்பு செய்த பின் எதிரி பெரும் பிரச்சாரத்தின் ஊடாக சர்வதேசத்தில், புலிகளை யாழை விட்டு துரத்தி, அழித்து விட்டதாக ஒரு மாயயை உருவாக்கி இருந்தான். 

அதை உடைக்க வேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்தது.
அத்தோடு சமுதாய சீர்கேடும் தலை தூக்கி இருந்தது. எதிரி அதை திட்டமிட்டு ஊக்குவித்தான். இதனால் புலியின் இருப்பை யாழில் காட்டவேண்டிய தேவை புலிகளுக்கு எழுந்தது. அதற்காக விசேட பயிற்சி பெற்ற போராளிகள், கிளைமோருடன் யாழினுள் நுழைந்தனர்.

அதன் தொடர்ச்சியாக கைதடியில் வைத்து, விடுமுறையில் செல்லும் படையினரை பலாலிக்கு ஏற்றிச்சென்ற பேருந்தின் மேல் கைதடியில் வைத்து நடத்திய கிளைமோர் தாக்குதலில்29 இராணுவத்தினர் பலியாகினர்.

அதேபோன்று திருநெல்வேலியில் உளவு இயந்திரத்தில் சென்ற இராணுவத்தினர் மீதான தாக்குதலில்14 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

அடுத்ததாக புத்தூரில் வைத்து சுற்றிவளைப்பின் நிமித்தம் ரோந்தில் வந்த இராணுவத்தினர் மீதான தாக்குதலில் ஐந்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இந்த வெற்றிகரமான தாக்குதல்களுக்கு பின்னால் கணேஷ் என்னும் புதிய போராளியின் பங்கு அளப்பெரியது. மேற்குறிப்பிட்ட தாக்குதல்களுக்கு கிளைமோர் குண்டுகளை பாதுகாப்பாக பதுக்கி வைத்து, குறிப்பிட்ட இடங்களுக்கு, எதிரியின் கண்களில் மண்ணை தூவி கொண்டுவந்து சேர்ப்பான். அந்த நேரத்தில் இது தான் அவனுக்கான பணி.

மிக சிக்கலான இடங்களுக்கு தன்னால் முடியும் என்று கூறி உயிரை பணயம் வைத்து கொண்டு வந்து சேர்ப்பான். 
அவனது பங்களிப்பால் குடாநாடு அன்றைய நேரத்தில் கிளைமோர் குண்டினால் அதிர்ந்தது. எதிரியின் பொய் பரப்புரையும் தகர்ந்து போனது. அந்த நேரத்தில் அவன் எமது போராட்டத்தில் பகுதி நேர ஆதரவாளனாகவே இருந்தான்.

ஒரு நாள் இரவு, நாங்கள் வாதரவத்தை என்னும் ஊரில் உள்ள சுடலை ஒன்றில் படுத்திருந்தோம். அப்போது எழுந்து இருந்தவன் "அண்ணே நான் போராளியாக இணையப்போரன் என்றான்". அப்போது யூதன் (மேஜர்.யூதன்) கூறினான் டேய் நீ இப்பவும் இயக்கம் போலத்தானே? பிறகென்னடா? என்று நகைச்சுவையாக கூறினான். அப்போது அவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை என்னை பார்த்து "அண்ணை நான் ஆதரவாளனாக சாக விரும்பவில்லை, போராளியாக சாகவே விரும்பிறன்" என்றான் தீர்க்கமாக.

இது வழமையாக அவன் கேட்பது தான். ஆனால் அன்று அவனது வேண்டுகோளை என்னால் நிராகரிக்க முடியவில்லை. ஆகவே, போராளியாக இணையும் அவனது விருப்புக்கு இணங்க யாழில் வைத்தே யூதனால் தற்காலிக பயிற்சிகள் சில வழங்கப்பட்டது. பயிற்சியின் பின் அவனும் போராளியானான். என்னிடம் இருந்த இரண்டு சயனைட்களில் ஒன்றை அவனுக்கு கொடுத்தேன்.

அத்தோடு மேஜர்.நிரஞ்சனிடமிருந்த இரண்டு குண்டுகளை அவனுக்கு கொடுத்தான். அவனது ஆனந்தத்திற்கு அளவே இல்லை. முதல் முறை சயனைட் கழுத்தில் அணியும் போது புதிய போராளிகளுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியை கொடுக்கும். இந்த உணர்வை புதிதாக இணையும் போது எல்லா போராளிகளும் உணர்வார்கள். அந்த உணர்வை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.

நாம் அந்த காலகட்டத்தில், கூடியவரை மறைவிடங்களில் தான் தங்கி இருபோம். அந்த நேரங்களில் கணேசின் உதவி இன்றி அமையாததாக இருந்தது. எப்போதும் கணேஷ் வெளியிலேயே இருப்பான். அவனே எங்களுக்கான உணவை கொண்டு வருவான். அவன் எம்மிடம் வரும் போதெல்லாம் யூதன் அவனிடம் கேட்பான் "டேய் ஆமிக்கு நாங்கள் இருக்கிற இடத்தை சொல்லிட்டியோ" என்பான்.

டேய் கணேஷ், "சில வேளை உயிரோட பிடிபட்டால் தயவு செய்து இங்கை மட்டும் ஆமியை கூட்டி வந்திடாதை, படுக்க இடம் தேட ஏலாது" என்பான் நக்கலாக. ஆனால், உடனே கணேசிடம் இருந்து சிரித்தபடியே பதில் வரும். அதற்கு நான் உயிரோட இருக்கமாட்டன். அப்படியொரு நிலை வந்தால் குப்பியை கடிச்சிடுவன் என்பான். இந்த கொழுவல் இருவருக்கும் அடிக்கடி நடக்கும். எங்களுக்கும் இவர்களது சண்டை தான் பொழுது போக்கு.

இப்படி இருக்கும் போது தான், நாங்கள் இருக்கும் இடமான யாழுக்கான காடு என்று கூறப்படும், கண்டல் காடுகளை நோக்கி 5000ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் பாரிய சுற்றி வளைப்பு ஒன்றை மேற்கொண்டனர். வடமராச்சி, தென்மராச்சி, வலிகாமம் மூன்று கோட்டன்களயும் உள்ளடக்கியதாக நடுவில் இருந்த ஊர்களான வாதரவத்தை, கப்பூது , அந்தனதிடல், கல்வயல், கைதடி, நெல்லியடி ஆகிய ஊர்களை அண்டிய பிரதேசங்கள் இலக்கு வைக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டது.

யாழில் நின்றபோது தூக்கம் தொலைந்த இரவுகளே அதிகம். அதனால், நிமதியான ஒருநாள் நித்திரைக்காக மேற்கூறிய இடங்களுக்கு நாங்கள் போவது வழமை. அப்படியான நேரத்தில் தான் இந்த சுற்றி வளைப்பில் மாட்டியிருந்தோம். தலை விதியை நொந்த படி பற்றைகளை நோக்கி நகரும் போது தான் தெரிந்தது, வேறு,வேறு பணிகளில் இருந்த எல்லா பிரிவையும் சேர்ந்த29 போராளிகள் (பெண்போராளிகள் உட்பட )அந்த இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

அப்போது இராணுவம் எங்களை சுற்றி வளைத்திருந்தது. ஆனால் எம்மை பிடிக்க அவர்கள் முயற்சி செய்யவும் இல்லை, தாக்கவும் இல்லை. ஆனால் முற்றுகை நீடித்தது. அப்போது தான் எமக்கு ஒரு உண்மை புரிந்தது. உணவு வளங்களை தடை செய்து எம்மை உயிரோடு பிடிக்க அல்லது நாங்கள் சரணடைவோம் என்று, எதிரி எதிர் பார்த்தான். இந்த துன்பத்திலும் ஒரு சந்தோசம் நீண்ட வருடங்களின் பின் நிறைய போராளிகளுடன் உறவாடும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. (அதற்கு அன்று மனதால் எதிரிக்கு நன்றி சொன்னேன்.)

அன்று பசியை ஒருவாறு சமாளித்தோம். அப்போது எங்களுக்கிருந்த ஒரே நம்பிக்கை கணேஷ் தான். அவன் மட்டும் தான் முற்றுகையில் சிக்காமல் வெளியில் இருந்தான். அவனுக்கு அந்த இடங்கள் அத்துபடி என்பதால் அவனை எதிர் பாத்திருந்தோம்.

என் நம்பிக்கை வீண் போகவில்லை.! அன்று இரவே எதிரியின் கண்ணில் மண்ணை தூவி இரவு எங்கள் 5பேருக்கு அளவாக 5 ராத்தல் பாணும் சம்பலுடனும் வந்திருந்தான். வந்த பின் தான் எம்முடன் இருந்த போராளிகளை கண்டு அவன் திகைத்து போனான். இதை அவன் எதிர் பாக்கவும் இல்லை.

அந்த உணவை எல்லோரும் பங்கிட்டு உண்டு விட்டு கணேஷ் கொண்டு வந்த 5L நீரையும் பங்கிட்டு எல்லோரும் குடித்தோம். அப்போது கணேஷ் மூலமாக எதிரியின் முற்றுகையின் வீரியத்தை அறிந்த பின் செய்வதறியாது இருந்தோம்.

எதிரி, மக்கள் பார்க்க கூடியதாக முகாமுக்கு திரும்புவது போல போக்கு காட்டிவிட்டு, பலர் மக்களுக்கு தெரியாமல் உருமறைப்பில் எமக்காக காத்திருந்தனர். ஏனெனில் மக்கள் தான் எமக்கு தகவல் வழங்குகின்றனர் என்பது அவனுக்கு தெரியும். இதை அறிந்த நாமும் மறைப்பிலேயே இருந்தோம். 

அன்று இரவு போராளிகள் எல்லோரும் இப்படியே இருந்து மடிவதை விட எதிரியுடன் மோதி உயிரை விட முடிவெடுத்தனர்.
என்னால், அந்த முடிவிற்கு உடன்பட முடியவில்லை. ஏனெனில் அந்த முற்றுகையில் எம்மோடு மூன்று கரும்புலிப் போராளிகளும் இருந்தனர். அவர்களை சாதாரண சண்டையில் இழக்க முடியாது அவர்களது தேவை அளப்பெரியது. ஏனைய போராளிகளின் இருப்பும் யாழுக்கு தேவை.

அதனால், நான்கு பேர் கணேசுடன் வெளியில் சென்று எதிரியின் பின் பக்கம் பெரும் திசை திருப்பு தாக்குதலை ஒன்றை செய்தால் எதிரி நிலை குலைவான் என்று கணித்து ஏனையோரையும் சம்மதிக்க வைத்து
அன்று இரவே கணேசின் உதவியுடன் முற்றுகையின் ஊடாக வெளியில் வந்தோம்.

புத்தூர் வீதியில் இராணுவம் வந்து போகும் பாதையில் இரண்டு சிறிய கொமாண்டோ கிளைமோரை மரத்தில் கட்டிய பின் மேஜர்.யூதனும், கணேசும் ஆட்கள் இல்லாத வீடொன்றினுள் பதுங்கி இருந்தனர்.
இவர்கள் இருந்த வீட்டிற்கு பக்கத்து வீடு ஒரு பேக்கரி என்பதால், அதிகாலையில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். 

அதனால் அவர்களுக்கு தெரியாது கிளைமோரை கட்டியபின் கூரை இல்லாத அந்த வீட்டின் ஒரு அறையில் விடியும் வரை இருவரும் காத்திருந்தனர். நானும் கப்டன்.வேங்கையும் பிறிதொரு இடத்தில் இவர்களுக்காக காத்திருந்தோம்.

10/02/1997அன்று காலை, பதுங்கி இருந்த இராணுவத்தை அணிமாற்றி, முகாமுக்கு செல்வதற்காக திரும்பி குவியலாக வந்த எதிரி மீது குண்டை வெடிக்க வைத்தார்கள். ஐந்து இராணுவத்தினர் அவ்விடத்திலேயே பலியகி பலர் காயமடைய, இவர்கள தப்பி ஓடினார்கள். திட்டத்தின் படி கிளைமோரை அடித்துவிட்டு, வீட்டின் பின் கதவால் எம்மிடம் ஓடிவரவேண்டும்.

அதற்காக கதவின் திராங்கை கழட்டிவிட்டு இருந்தனர். ஆனால் யாரும் கதவை திறந்து பார்க்கவில்லை. இவர்கள் தாக்கியபின் ஓடிவந்து கதவை இழுத்தபோது அது திறக்கவில்லை.! உடனே இருவரும் முன் பக்க சுவரால் பாய்ந்து பின்னால் ஓடிவரும் போது எதிரி சகட்டு மேனிக்கு இவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டான். 

இருவரும் ஆளுக்கொரு திசையில் பாய்ந்தோடினர்.
திட்டத்தின் படி யூதன் எம்மிடம் வந்து சேந்து விட்டான், ஆனால் கணேசை காணவில்லை. எதிரி எம்மை நோக்கி தாக்கியபடி வந்தமையால், அவன் எப்படியும் வருவான் அண்ணை, வாங்கோ போவமென்று யூதன் என்னை சமாதானப்படுத்தி அவ்விடத்தை விட்டு அழைத்து சென்றான்.

இது போல பல தடவை அவன் வந்திருக்கின்றான் என்பதால் நானும் அவ்விடத்தை விட்டு சென்றேன். இது அந்த நேரத்தில் வழமையான ஒன்று தான். எதிரியுடன் முட்டுப்பட்டு, அடிவாங்கி கலைபட்டு, ஆளுக்கொரு பக்கமாக சென்று குறிப்பிட்ட இடமொன்றில் எல்லோரும் வந்து சேருவோம். அப்படித்தான் அன்றும் அவன் வருவான் என்று நினைத்தேன்.

நாங்கள் நினைத்தது போல் அத்தோடு, எதிரி முற்றுகை கைவிட்டு முகாம் திரும்பிவிட்டான் , ஆனால், கணேஷ் திரும்பவில்லை. எங்கும் தேடி அவன் இல்லாத படியால் தாக்குதல் நடந்த பிரதேசத்தில், அவர்களின் தோழர்கள் தேடினர். அப்போது சில இரத்த துளிகள் காய்ந்திருந்த தடையம் பாத்து தேடிய போது கணேசின் உயிரற்ற உடலை ஒரு சிறு பற்றையினுள் இருந்து கண்டெடுத்தனர்.

அவனது காலில் துப்பாக்கி ரவை ஒன்று பாய்ந்து சென்றிருந்தது. அவனால் ஓட முடியாது என்பதால் சையனைட் அருந்தி வீரச்சாவடைந்திருந்தான். எதிரியின் குகைக்குள் இருந்து அவனது கண்ணில் விரலை விட்டு ஆட்டிய இளம் புலிவீரன் அன்று அமைதியனான். எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாதென்பதற்காக, தான் கூறியது போலவே சயனைட்டை அருந்தி வீரச்சாவடைந்திருந்தான்.

கணேஷ் புதிய போராளி என்றபோதும் துணிவில் பெரும் வீரன். அவனது தியாகம் அன்று 29போராளிகளின் உயிரை மீட்டு தந்தது. ஒரு இளைய போராளி எம்மை விட்டு போனது அன்றைய நேரத்தில் அவனது இழப்பு எமக்கு பேரிழப்பே..!
நினைவுகளுடன்..துரோணர்.!!
« PREV
NEXT »

No comments