பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் 07.02.2005 அன்று, சிறிலங்கா படையினராலும், தேசவிரோதிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டக்களப்பு மாவட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் லெப்.கேணல் கௌசல்யன் உட்பட்ட மாவீரர்களினதும், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் அவர்களினதும் 11 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
வன்னியில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றிற்காகச் சென்று விட்டு மட்டக்களப்பிற்குத் திரும்பிவரும்வேளை சிறிலங்கா படையினர் மற்றும் தேசவிரோதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் லெப்.கேணல் கௌசல்யன் அவர்களுடன் மேஜர் புகழன் (சிவலிங்கம் சுரேஷ்), மேஜர் செந்தமிழன் (தம்பிராசா கந்தசாமி), 2ம் லெப்.விதிமாறன் (சிவபாதம் மதன் ) ஆகியோர் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
இதன்போது படுகாயமடைந்த மாமனிதர் அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவர்கள் பயணித்த ஊர்தி ஓட்டிச்சென்ற ஊர்தி ஓட்டுனர் விவேகானந்தமூர்த்தி என்பவரும் இதன்போது கொல்லப்பட்டார்.
எங்கள் கண்களுக்குள் இன்னமும்
தரிசனம் தந்துகொண்டிருக்கும் கந்தர்வன்!
பொன்னீழ மண்டலத்தின் புண்ணிய புதல்வன்!
புதுச் சரிதம் தீட்டவந்த அரசியல் ஆலோசகன்!
காலன் நெருங்கு முன்பாகவே, எங்கள் கௌசல்யனைக்
காடையனின் கோரக் கரங்கள் கொள்ளை கொண்டுவிட்டன.
செங்குருதி வெறிபிடித்து அலைகின்ற
சிங்களக் கழுகுகளின் அலகுகளில்
மீண்டும் தமிழனின் ரத்தச் சாயம்…
இனக்கேடு தலைக்கேறிய குணக்கேடர்தம் கூடாரங்களில்
இதோ! இன்னும் ஓர் பிணக்காட்டின் தொடக்க அத்தியாயம்…
என்ன செய்வதடா?
எதுவரை பொறுப்பதடா?
ஆசையே அழிவுக்குக் காரணம் என்றுதானே
அந்தப் போதிமரத்தான் போதித்தான்?..
அழிவின் மீதே ஆசைகொள்ளும் இந்த ஆலகாலப் பட்சிகள்,
அவனுக்கு எப்படியடா பின்காமிகள்?
“இனியொரு விதி செய்வோம்!” என்ற உணர்வோடு
இறங்கி வந்த ஈழத் தமிழனுக்குக் கிடைத்த பரிசு,
“இனியொரு சதி செய்வோம்!” என்பதுதானா?
என்ன செய்வதடா?
எதுவரை பொறுப்பதடா?
உலக நாடுகளே!
உதவாத காரணத்திற் கெல்லாம் ஒப்பாரி வைக்கின்ற நீங்கள்,
ஒன்றும் பேசாமலிருப்பதேன்?
தவறு நிகழ்ந்திடின் தட்டிக் கேட்பதாகத்
தம்பட்டம் அடிக்கின்ற “சட்டாம்பிள்ளை” தேசங்களே!
எங்கே போயிற்று உங்கள் எட்டப் பார்வை?
ஈழத் தமிழனே!
என்னருமைச் சோதரனே! – நீ
கீழே வைத்துவிட்டாய் ஆயுதத்தை என்றறிந்து
கிட்டே வந்துவிட்டான் பார்த்தாயா,
சிங்களத்துச் செந்நாய்ச் சேய்?
வீழத்தான் வேண்டுமோ? – உனக்கு
விழுப்புண்தான் மீண்டுமோ?
ஈழத்தான் வாழத்தான் வேண்டுமென்னும் வேட்கையுடன்
எத்தனைநாட் காலந்தான் காத்திருக்க வேண்டுமோ?
என்ன செய்வதடா?
எதுவரை பொறுப்பதடா?
தமிழீழ விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து அந்த விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப்புனிதர்களை இன்றைய நாளில் நினைவு கூருகிறோம்.
நன்றி ஈழம் ரஞ்சன்
No comments
Post a Comment