சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 215 அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது என ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் 215 பேரை பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது. இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் கிடையாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதம் காரணமாக மேற்குலக நாடுகளும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட முன்னர் பல்வேறு காரணிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்
போரில் என்ன இடம்பெற்றது என ஆராய்ந்து அதன் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் அமைப்பு மாற்றம் பற்றி இந்த மாதம் 9ம் திகதி நாடாளுமன்றில் அறிவிப்பேன்.
அரசியல் அமைப்பு திருத்தங்கள் குறித்து நிபுணர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வேன். இலங்கையின் இறையாண்மை மற்றும் உரிமை ஆகியன தொடர்பில் உரிய முறையில் ஆராய்ந்து அதன் பின்னர் திருத்தங்கள் செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் பிரச்சினையை உறுதியளித்தவாறு ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோணப்புலம் அகதி முகாமிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே மக்கள் அங்கு கடந்த 25 வருடங்களாக வாழ்ந்து வந்தமையைக் கண்டறிந்ததாகவும், மக்களின் அவல நிலையை தான் அறிந்து கொள்ளாதது குறித்து தன்னைத் தானே நொந்து கொண்டதாகவும் குறித்த செவ்வியில் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment