Latest News

January 15, 2016

பிரித்தானிய விடியலுக்கான பாதை அமைப்பு மூத்த பிரஜைகளுக்கு தாயகத்தில் உதவி
by admin - 0

பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கி வரும் தொண்டு நிறுவனமான விடியலுக்கான பாதை அமைப்பின் அனுசரணையில் உறவுகளின்றி தனிமையில் தவித்த மூத்த பிரஜைகளுக்கான உதவி வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் கடந்த வாரம் இடம் பெற்றது. இதில்  110ற்கும் மேற்பட்ட மூத்த பிரஜைகள் கலந்து கொண்டதோடு அவர்களுக்கு விடியலுக்கான பாதை அமைப்பினரால் உலருணவுப்பொதிகளும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவர் அங்கு உரையாற்றுகையில் மூத்த பிரஜைகள் ஒன்று கூடியிருப்பது மகிழ்ச்சியைத்தருகிறது. சந்ததி ஒன்றின் உருவாக்கத்தின் நாயகர்களாக நாயகிகளாக இருந்த பெரியவர்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டு அன்பு அரவணைப்பு என்பவற்றுக்கு ஏங்குகின்ற சூழலைப் பார்க்கும்போது கவலை தருவதாக இருக்கிறது. வேராகவும் விழுதாகவும் படர்ந்திருந்த அவர்களது உறவுகள் கொல்லப்பட்டும் காணமல்போக செய்யப்பட்டும் முடிக்கப்பட்டும் போனதாலேதான் நீங்கள் தனித்துபோய் இருக்கிறீர்கள் மற்றொரு வகையிலே எமது சமூகம் அபிவிருத்தி வளர்ச்சி என்ற போர்வையில் எத்தனை கோடி பணம் இருந்தாலும் குடும்ப உறுப்பினரிடையே இருக்கும் பாசம் பெரியது. உங்களில் பலர் கொண்டிருக்கும் அனுபவங்கள் எங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றது.


நீங்கள் கொண்டிருக்கும் அனுபவ முதிர்ச்சியும் இளையதலைமுறையினர்க்கு பாடமாக இருக்கவேண்டும். முதுமை என்பது சிந்தனையில் மட்டுமே உருவாகிறது. சிந்தனைகளில் இளமையுள்ளவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்வதைப்பார்க்கிறோம். குறிப்பாக எங்களுடைய தலைவர் சம்மந்தன் ஜயா அவர்கள் 82 வயதினை உடையவராக இருந்த போதிலும் எமது இனத்தின் தேசிய விடுதலைப்போராட்டத்தை தாங்கி தெளிவாகவும் நிதானமாகவும் வழிகாட்டிவருகிறார். அண்மையில் கூட பிரித்தானிய முன்னாள் பிரதமரிடம் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து அவர்கள் அடைய வேண்டிய இலக்கு குறித்தும் தெரிவித்திருப்பது எங்கள் எல்லோர்க்கும் வழிகாட்டியாக அமைகிறது. இதற்கு காரணம் அவருடைய அறிவும் அனுபவமும்தான் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்வில் மூத்த பிரஜைகள் குழுவின் தலைவர் சின்னையா, ஊற்றுப்புலம் பாடசாலை அதிபர் உமாசங்கர்,அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கரன் ,முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்களான தயாபரன், சுப்பையா ,மத்திய செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார் ,மாவட்ட இளைஞரணித்தலைவர் சுரேன் எனப்பலரும் கலந்து கொண்டனர்.











« PREV
NEXT »

No comments