இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடமாகின்ற போதிலும் இலங்கைப் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஆதாரங்கள் வெளிவந்த வண்ணம் இருப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் தெரிவித்துள்ளது.
சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் நாளை வியாழக்கிழமை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
கவலையளிக்கும் வகையில் இலங்கையில் வெள்ளை வான்கள் இன்னும் செயற்படுவதாகவும், இது வழக்கமான நடவடிக்கையொன்றான இருப்பதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தைச் சேர்ந்தவரும், ஐ.நா செயலாளர் நாயகம் நியமித்திருந்த நிபுணர் குழுவில் அங்கம் வகித்தவருமான யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.
அடக்கு முறை தொடர்பான அரச இயந்திரத்தை நீக்குவதற்கு வழி செய்யும் அவசர பாதுகாப்புத்துறை மறுசீரமைப்பு ஒன்று இல்லாததால் இலங்கையில் பொறுப்புக்கூறல் என்பது இருக்க முடியாது என்பதை இது எடுத்துக் காட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2015ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் பிரிவுகளின் தடுப்பில் இருந்த போது இடம்பெற்ற கடுமையானதும், அடிக்கடி மேற்கொள்ளப்பட்டதுமான சித்திரவதைகள் மற்றும் பாலியல் ரீதியான தாக்குதல்கள் பற்றி உலகின் 4 நாடுகளில் தப்பி வாழும் 20 தமிழர்கள் விபரமான சாட்சியங்களை வழங்கியிருப்பதாக அந்த அறிக்கையில் கூற்பபட்டுள்ளது.
பாதுகாப்பின் நிமித்தம் இந்த சாட்சியாளர்களின் விபரங்கள் அனைத்தும் வெளியிடப்படவில்லை என்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இன்னும் இலங்கையிலேயே இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் 2015ம் ஆண்டில் அடிக்கடி பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இலங்கை பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்களால் ஆண் மற்றும் பெண் என இருபாலார் மீதும் மேற்கொள்ளப்பட்ட பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் பலாத்காரங்கள் பற்றிய வரைபு ரீதியான விபரங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டத்தின் அறிக்கை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துஷ்பிரயோகங்களானது இரகசிய மற்றும் அடையாளம் காணப்பட்டவை என இரண்டு வகையான இடங்களிலும் இடம்பெற்றுள்ளதாகவும், வவுனியாவிலுள்ள ஜோசப் முகாமும் இதில் உள்ளடங்குவதோடு, சர்வதேச உண்மை மற்றும் நீதித்திட்டம் தமது முன்னைய அறிக்கைகளில் இந்த முகாமை சித்திரவதை தளமாக குறிப்பிட்டிருந்ததாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்திற்கு மிக அண்மையில் தெரியவந்துள்ள சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட வெள்ளை வான் கடத்தல் சம்பவம் கடந்த டிசம்பர் மாதமே இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தேறிவரும் இந்த மீறல்கள் தொடர்பில் பல்வேறு தமிழ் அரசியல்வாதிகளும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும், இலங்கையிலுள்ள இராஜதந்திரிகளும் அறிந்து வைத்திருப்பதாக அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
No comments
Post a Comment