புங்குடுதீவு மாணவி வித்தியா கடத்திச் செல்லப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சசிக்குமார் (சுவிஸ்குமாரே) பிரதான சூத்திரதாரி என்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற, நீதவான் எஸ்.லெனின்குமார் தெரிவித்தார்.
குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைகளுக்காக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற, நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையல் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது சுவிஸ்குமார் என்று அழைக்கப்படும் சசிக்குமார் நீதவானின் அனுமதியுடன், மன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.
“வெளிநாட்டில் இருந்து விடுமுறை (லீவு) கொடுத்துவிட்டே புங்குடுதீவு வந்தேன். இதன் போது வித்தியா கொலை வழக்கில் நான் குற்றவாளி இல்லை என்று யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை மற்றும் வெள்ளவத்தைப் பொலிஸார் என்னை விட்டுவிட்டனர்.
ஆனாலும் கொடிகாமப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியே என்னை கைது செய்திருந்தார். எனக்கும் இக் கொலைச் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை” என்றார்.
இதன் போது குறுக்கிட்ட நீதவான் “கொடிகாமப் பொலிஸார் தான் உம்மை கைது செய்தனர் என்று எப்படித் தெரியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு “வெள்ளவத்தைப் பொலிஸார் தான் தன்னிடத்தில், கொடிகாமப் பொலிஸார் தான் உங்களை கைது செய்தனர்” என்று சென்னார்கள் என்று பதிலளித்திருந்தார்.
அவருடைய பதிலைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதவான் “யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) உடைய கட்டளைக்கு அமைவாகவே கொடிகாமப் பொலிஸார் உம்மை கைது செய்திருந்தனர்.
வித்தியா கொலை சம்பவம் தொடர்பாக பொலிஸார் மன்றிற்கு சமர்ப்பித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையில் இக்கொலை உம்முடைய சூழ்ச்சியாலேயே நடைபெற்றது என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
அத்தகவலுக்கான சான்றுகளையும் பொலிஸார் திரட்டியுள்ளனர். குற்றம் செய்த எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துச் செல்ல முடியாது.
தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வு பிரிவினர் வித்தியா கொலைக்கும் உமக்கும் சம்மந்தம் இல்லை என்பதை உறுதிப்படுத்தினால், அதன் பின்னர் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை என்னால் மேற்கொள்ள முடியும்.
தொடர்ச்சியான விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றார்கள். அவர்களுடைய விசாரணைக்கு ஒத்துழையுங்கள், விசாரணையின் முடிவில் நீதிமன்றம் நீர் குற்றவாளியா? இல்லையா? என்று முடிவெடுக்கும்” என்றார்.
No comments
Post a Comment