Latest News

December 18, 2015

வாக்குறுதிகளை மட்டுமே வழங்கும் நல்லாட்சி அரசு! தமிழர்களுக்கு ஏமாற்றம்!!
by admin - 0

வடக்கில் பாதுகாப்பு வலயங்களாக படையினர் அபகரித்து வைத்திருக்கும் தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களை, மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று தமிழ் மக்கள் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் மகிந்த அரசாங்கத்தைப் போல், மைத்திரி அரசாங்கமும் தமிழ் மக்களின் நிலங்களை திருப்பி வழங்கும் விருப்பமற்றதாகவே செயற்படுகின்றது என்று தமிழ் மக்கள் கருதுமளவுக்கு படையினரின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

வலிகாமம் வடக்குப் பகுதியில் மீண்டும் படையினர் புதிய வேலிகளை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதை அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் எதிர்த்துள்ளனர்.

அளவுக்கு அதிகமான படையினரை வடக்கிலிருந்து குறைப்புச் செய்வதும், தனியார் நிலங்களை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைப்பதும், தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்வதும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்பக்கட்டங்களாக தமிழ் மக்கள் கருதுவார்கள் என்பதை பல வழிகளிலும் தமிழ் அரசியல் தலைமைகள் நல்லாட்சி அரசுக்கு எடுத்துரைத்த போதும் அரசாங்கம் அவற்றைக் கண்டு கொள்ளவில்லை.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மைக்காலமாக தமிழ் மக்களுக்கு சாதகமான கருத்துக்களையும், வாக்குறுதிகளையுமே தெரிவித்து வருகின்றார். ஆனால் அரசாங்கத்தின் ஒட்டுமொத்தச் செயற்பாடுகளும் வேறு வகையாக இருக்கின்றது.

அண்மையில் அமைச்சர் மங்கள சமரவீர கூறும்போது, பாதுகாப்பு வலயங்களாக இருக்கும் நிலங்களில் 6000 ஏக்கர் நிலத்தை விடுவித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்போவதாக அறிவித்தார். அவர் அறிவித்து சில நாட்களிலேயே விடுவிக்கப்படுமென எதிர்பார்க்கப்பட்ட நிலங்களை மீண்டும் படையினர் வேலி அடைத்து தமதாக்கிக் கொள்ள நடவடிக்கை எடுத்தனர்.

தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு புதிய அரசியல் திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு தீர்வு காணப்படும் என்று கூறினார். ஆனால் இன்று அரசாங்கம் பதவி ஏற்று நான்கு மாதமாகியும் அரசாங்கம் பல கதைகளைக் கூறிக் கொண்டிருக்கின்றதே தவிர ஆக்கபூர்மாக எதையும் செய்யவில்லை என்று தமிழ் மக்களிடையே ஆதங்கம் உண்டு.

தமிழ் மக்களின் ஏமாற்றங்களைப் போலவே நல்லாட்சி அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்காக பெரும்பாடு பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் அண்மைக்கால கருத்துக்களும் இருக்கின்றது. முதலில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க மாட்டோம் என்று ஈ.பி.ஆர்.எல்.எப் ஒதுங்கிவிட்டார்கள்.

பின்னர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தனது கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றும்போது, இந்த அரசாங்கம் நாம் எதிர்பார்த்ததைப் போல் செயற்படவில்லை, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதில் எமக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஆகவே தொடர்ந்தும் அரசுக்கு ஆதரவளிப்பதையிட்டு பரிசீலிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பம் வருகின்றபோது, தற்போது ஏற்றுக் கொண்டுள்ள பதவியையும் தூக்கி எறிவோம் என்று கூறியிருக்கின்றார்.

மறு பக்கத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களோ, அரசாங்கம் எம்மோடு இணங்கியதுக்கு மாறாக நடந்து கொள்கின்றது என்றும், பாதுகாப்பு வலய நிலங்களை விடுவிப்பதில் அது தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் கூறியிருப்பதோடு, அரசாங்கம் இப்படியே செயற்படுமாக இருந்தால் அரசாங்கத்துடனான உறவை துண்டித்துவிட்டு தமிழ் மக்கள் சர்வதேசத்திடம் நியாயம் கேட்கும் நிலை ஏற்படலாம் என்றும், தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட வேண்டியிருக்கும் என்றும் கூறியிருக்கின்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களும் அரசாங்கத்தை விமர்சிக்கத் தொடங்கியிருக்கின்றார். அதாவது, தற்போது யாழ்ப்பாணத்தில் பரணகம ஆணைக்குழுவினர் மேற்கொண்டுவரும் விசாரணைகளை முற்றாக நிராகரித்திருக்கின்றார்.

அது தொடர்பாக சுமந்திரன் அவர்கள் கூறும்போது, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அனைத்து வகையான சம்பவங்களையும் சர்வதேச தரத்திலான விசாரணைப் பொறிமுறை ஊடாகவே விசாரிக்க வேண்டுமென்பதே தமிழ் மக்களின் கோரிக்கையாகும். அரசாங்கமும் அதை சர்வதேச சமூகத்தின் முன்னால் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகள் நடைபெறுவது தேவை அற்ற ஒன்றாகும். அதன் விசாரணைகள் எந்தவகையிலும் ஏற்புடையதற்றதாகும். எனவே தமிழ் மக்கள் இவ்வாறான விசாரணைப் பொறிமுறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காலத்தை வீணடிக்கத் தேவையில்வை என்றும், அரசாங்கம் அர்த்தமற்ற இவ்வாறான நடவடிக்கைகளை ஏன் தொடர்கின்றது என்பது கேலிக்கூத்தானது என்பதுபோல் விமர்சித்திருந்தார்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன் அவர்கள் மட்டக்களப்பில் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றியபோது கூறிய கருத்துக்கள் வேறுபட்டதாக இருக்கின்றது.

அவர் சர்வதேசத்தின் மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு மரியாதை அதிகரித்து வருகின்றது என்றும், அவ்வாறு மரியாதை அதிகரிக்கின்றபோது ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குகின்ற கட்டாயத்திற்கு உள்ளாகுவார் என்றும் ஆருடம் கூறியிருக்கின்றார்.

சர்வதேச சமூகம் ஜனாதிபதியுடன் நெருக்கமாகி வருவது தமிழ் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவா அல்லது அவர்களின் நாடுகள் சார்ந்த தேவைகளுக்காகவா என்பதை சம்பந்தரும் அறியாதவர் அல்லர்.

அப்படி இருக்கையில் என்ன நம்பிக்கையில் தமது தலைவர் இவ்வாறான நம்பிக்கையைக் கொண்டு தீர்மானங்களை எடுக்கின்றார் என்ற கேள்விகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகளிடையே வாதப் பிரதிவாதங்களை வலுக்கச் செய்துள்ளது. நல்லாட்சி அரசானது தமிழ் மக்களுக்கு ஒரு முகத்தையும், சர்வதேச சமூகத்திற்கு ஒரு முகத்தையும் காட்டி சாதூரியமாக காய் நகர்த்துகின்றதா?

– ஈழத்துக் கதிரவன் -
« PREV
NEXT »

No comments