Latest News

December 24, 2015

பூலோகம் திரை விமர்சனம்!
by Unknown - 0

தொடர் வெற்றிகளால் இந்த வருடம் டாப் ஸ்டார் இடத்திற்கு வந்து விட்டார் ஜெயம் ரவி. இவருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் காலம் போல, இந்த சுக்ர திசையில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்த பூலோகத்திற்கு ஒரு க்ரீன் சிக்னல் கிடைத்து இன்று உலகம் முழுவதும் படம் ரிலிஸாகியுள்ளது.

எம்.குமரன் வெற்றிக்கு பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குனர் கல்யான் இயக்கத்தில் பூலோகம் படத்தின் மூலம் பாக்ஸிங் உறையை கையில் எடுத்து மாட்டியுள்ளார் ஜெயம் ரவி.

கதை

வெள்ளைக்காரன் காலத்தில் ஆரம்பித்த ஒரு சண்டை வெள்ளைக்காரனுடன் கிளைமேக்ஸில் மோதி முடிகிறது இது தான் படத்தின் ஒன் லைன். வட சென்னையில் இருக்கும் இரண்டு பரம்பரைகளுக்குள் காலம் காலமாக பாக்ஸிங் சண்டை தொடர்கிறது.இதில் ஜெயம் ரவி அப்பா எதிர் பரம்பரை ஆள் ஒருவருடன் மோதி தோற்று அவமானத்தால் தூக்கு மாட்டி இறக்கிறார்.

இதைக்கண்ட ரவி அடுத்த தலைமுறைக்கு பிரச்சனையை எடுத்து வந்து தன் அப்பாவை தற்கொலை செய்ய வைத்தவனின் மகன் ஆறுமுகத்தை பாக்ஸிங்கில் அடித்தே கொலை செய்ய வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்.இவர்களின் இந்த வெறியை காசாக மாற்ற விளையாட்டு சேனல் உரிமையாளர் பிரகாஷ்ராஜ் பெரிய பாக்ஸிங் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்கிறார். இந்த போட்டியில் ரவி, ஆறுமுகத்தை கோமோ ஸ்டேஜ் செல்லும் அளவிற்கு அடிக்க, பின்பு தான் தன் தவறை உணர்ந்து பாக்ஸிங்கே வேண்டாம் என ஒதுங்குகிறார்.

ஆனால், பிரகாஷ் ராஜ் பணத்திற்காகவும் தன் சேனல் TRPக்காகவும் எப்படியாவது இந்த போட்டியை நடத்த வேண்டும் என, சில சதி வேலைகள் செய்து ரவியை சண்டைப்போட வைக்கிறார். இதற்கிடையில் ரவியின் மாஸ்டர் பொன்வண்ணணும் இறக்கிறார். அவர் இறப்பிற்கான காரணத்தை அறிந்து மீண்டும் அந்த போட்டியில் கலந்துக்கொண்டு எப்படி வெற்றி பெறுகிறார், பிரகாஷ் ராஜுக்கும் அவரின் பணத்திமிருக்கும் பதிலடி தந்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

ஜெயம் ரவி எம்.குமரனை விட பல மடங்கு ரியல் பாக்ஸராகவே இந்த படத்தில் வாழ்ந்துள்ளார். உடம்பை ஏற்றுவது மட்டுமில்லாமல் ஒரு பாக்ஸருக்கான அத்தனை மேனரிசங்களும் காட்டி அசத்தியுள்ளார். அதிலும் பாக்ஸர் என்றால் மிகவும் வெறப்பாக இல்லாமல் ஜாலியாக எதிராளியை கிண்டல் செய்து ரசிக்க வைக்கின்றார். 

குறிப்பாக கிளைமேக்ஸில் ஹாலிவுட் வில்லன் நேதன் ஜூன்ஸுடன் மோதும் காட்சியில் அப்படி ஒரு வில்லனுக்கு இப்படி ஒரு ஹீரோ தான் சமம் என்று சொல்ல வைக்கின்றது. த்ரிஷா ஜெயம் ரவியை விழுந்து விழுந்து காதலிக்கிறார், ரவியை தன் உடலில் டாட்டூவாக பதிக்க, அதை ஜெயம் ரவி தேடும் காட்சிகள் சென்ஸார் விழுந்திருப்பது நன்றாக தெரிகின்றது. 

கிளைமேக்ஸில் ரவிக்கு பாக்ஸிங் கோச்சிங் எல்லாம் கூட கொடுக்கிறார். மற்றப்படி பெரிதாக ஈர்க்கவில்லை.இத்தனை நாள் இந்த பிரகாஷ் ராஜ் எங்கு சென்றார்,சில நாட்களாக இவரை ரொம்ப நல்லவராகவே பார்த்து பார்த்து நமக்கே சலித்து போக ’செல்லம் நான் வந்துட்டேன்னு’ வில்லனாக கலக்கியுள்ளார். அதிலும் ‘இவர்கள் எல்லோரும் குரங்குகள், அவர்கள் செய்யும் சேட்டைக்கு தான் பணம், அந்த குரங்குகளுக்கு இல்லை’ போன்ற வசனங்களின் மூலம் தன் அதிகாரத்திமிரை காட்டும் இடத்தில் சபாஷ். ஆனால், இத்தனை கோடிஸ்வரர் 10 ரூ சிகரெட்டை பிடிக்கும் இடத்தில் தியேட்டரே சிரிக்கின்றது. 

என்ன கல்யான் சார் கவனிக்கலையா? இல்லை அதிலும் ஏதும் குறியீடா???.படம் முழுவதும் கம்னியூசம் வசனங்களும், வெளிநாட்டு பொருட்களின் ஆதிக்கம் எந்த அளவில் இந்தியாவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது, சில தொலைக்காட்சிகள் தங்கள் TRPக்காக என்ன வேண்டுமானலும் செய்வார்கள் போன்ற விஷயங்களை வெட்ட வெளிச்சமாக காட்டியுள்ளார். 

ஹிம்ம்...ஜனநாதன் உதவி இயக்குனர் ஆச்சே கல்யான் கிருஷ்ணன். ஆனால், படம் தாமதமாக வந்ததால் ஏதோ பழைய படம் பார்ப்பது போலவே ஒரு உணர்வு, சில இடங்களில் லாஜிக் அத்து மீறல், ஒரு இந்திய பாக்ஸர் நம்மூர் மார்க்கெட் எல்லாம் வந்து ரவியை சீண்டுவது எல்லாம் ரொம்ப ஓவர் பாஸ். படத்தின் முதல் பாதியில் அழுத்தமே இல்லாத சண்டைக்காட்சிகள் அத்தனை நாள் வெறி என்றாலும் ரவி அடியே வாங்க மாட்டாரா என்ன?

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, அந்த பிரமாண்ட் வில்லன் நேதன் ஜூன்ஸை தன்னுடன் மோத வைக்க அவர் செய்யும் கலாட்டாக்களில் விசில் பறக்கின்றது. அதிலும் அவரின் 7 அடி உயரம், ரவியை அவர் இடத்திலேயே வந்து மிரட்டுவது என நேதனும் அசத்தியுள்ளார்.குறிப்பாக கிளைமேக்ஸில் வரும் சண்டைக்காட்சி, குறைந்தது 20 நிமிடம் என்றாலும் சலிப்பு தட்டவில்லை. படத்தின் வசனம் நமக்கே தெரியாமல் அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படியெல்லாம் நம்மை நசுக்குகிறார்கள் என ஜெயம் ரவி கிளைமேக்ஸில் பேசும் ஒவ்வொரு வசனமும் சூப்பர். அதிலும் பிரகாஷ் ராஜுடன் அக்ரிமெண்ட் போடும் காட்சி கலாட்டா.

பல்ப்ஸ்

படத்தின் முதல் பாதி, மாற்றி மாற்றி அடித்துக்கொள்கிறார்கள், இடையில் பிரகாஷ் ராஜ் பேசுகிறார், த்ரிஷாவுடன் ஒரு சில காதல் காட்சி என செல்ல படம் கதைக்குள் செல்லவே கொஞ்சம் தடுமாறுகிறது.

வட சென்னை என்பதால் கானா பாடல்கள், ஒப்பாரி பாடல்கள் தான் இருக்கும் என்பதற்காக ஸ்ரீகாந்த் தேவா அதெல்லாம் நன்றாக இசையமைத்திருந்தாலும், பின்னணி இசையில் எம்.குமரன் அளவிற்கு ஒரு போர்ஸ் இல்லை.

படத்தின் முதல் பாதியில் எடிட்டிங் பிரச்சனையா? இல்லை சென்ஸார் பிரச்சனையா? என்று தெரியவில்லை, காட்சிகள் கோர்வையாக இல்லாதது போல் உள்ளது.

மொத்தத்தில் இரண்டாம் பாதியில் இருக்கும் விறுவிறுப்பு படம் முழுவதும் இருந்திருந்தால் கண்டிப்பாக எம்.குமரனை நாக் அவுட் செய்திருப்பார் இந்த பூலோகம்.
« PREV
NEXT »

No comments