Latest News

November 27, 2015

வீரத்தாலும் ஈகத்தாலும் கட்டியெழுப்பிய தேசிய விடுதலை இலக்கைச் சிதைத்து விடாதீர்கள்: வி.உருத்திரகுமாரன்
by admin - 0

மாவீரர்களின் தியாகத்தால் கட்டியெழுப்பப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது சிக்கலானதொரு காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது. மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இலட்சிய அரசியலை தார்மீகக் கடமையாக ஏற்று எமது அரசியற் தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும் என வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் மாவீரர் நாள் செய்தியின் முழுமையான வடிவம்: 

இன்று தேசிய மாவீரர் நாள். 

தமிழீழ விடுதலைக்காய் தம்மை ஆகுதியாக்கிக் கொண்ட நமது தாய்மண்ணின் வீரர்களின் நினைவு நாள். 

தமக்கென வாழாது, தம் மக்களுக்காகவே வாழ்ந்து, களம் பல கண்டு போராடி நம் மண்னில் விதையாய் வீழ்ந்து விட்ட மாவீரர்களை நமது இதயக் கோவிலில் வைத்து நாம் பூசிக்கும் நாள்.

வீரத்துக்கும் ஈகத்துக்கும் அகராதியில் புதிய அர்த்தம் தந்து, ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை வேட்கையை உலகறியச் செய்த உத்தமர்களின் நினைவுகளில் நாம் உணர்வுடன் மூழ்கிக் கிடக்கும் நாள்.

தம் குருதியால் எம் மண்ணைத் தோய்த்து விடுதலை உணர்வு என்ற பயிரை ஈழத் தமிழ் மக்களின் மனங்களில் எல்லாம் விதைத்து விட்டு வரலாற்றில் இடம் பிடித்து விட்ட எமது நாயகர்களின் திருநாள்.

மாவீரர்களை நினைத்து உருகி அவர்களை தமது நெஞ்சக்கூட்டினில் இருத்தி மக்கள் அவர்களுக்கான மரியாதையினை வழங்கும் இன்றைய நாளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து தனது மரியாதை வணக்கத்தைத் தலை சாய்த்துத் தெரிவித்துக் கொள்கிறது.

ஒன்றா, இரண்டா, பத்தா, நூறா, ஆயிரமா... இல்லையே.... ஆயிரம் ஆயிரமாய் 40,000 க்கும் மேற்பட்ட மாவீரர்களையல்லவா நமது தேசம் தனது விடுதலைக்காய் ஆகுதியாய்க் கொடுத்திருக்கிறது.

சிங்கள ஆக்கிரமிப்பை முறியடித்து, சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசில் எமது மக்கள் பாதுகாப்பாக, கௌரவமாக, சமத்துவமாக, இனஅழிப்புக்கு உட்படாது தமது தலைவிதியைத் தாமே தீர்மானித்தவாறு ஆனந்தமாக வாழ வேண்டும் என்ற கனவுடன்தானே எமது மாவீரர்கள் களமாடினார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு களத்தில் இருந்த காலத்திலெல்லாம் எமது மக்கள் தமது நெஞ்சினை நிமிர்த்தியவாறு “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்று அறைகூவியபடி, போராடும் மக்கள் என்ற தார்மீகச் செருக்குடன் வாழ்ந்தமைக்கு நமது மாவீரர்கள்தானே வழி சமைத்துக் கொடுத்தார்கள்.

எமது தேசியப் பிரச்சனையை இது ஒரு சிறு உள்நாட்டுப் பிரச்சனை என்று தட்டிக் கழிக்க முயன்றவர்களுக்கெல்லாம் - களத்தில் நின்று தாம் நடத்திய வீரமும் ஈகமும் நிறைந்த போராட்டத்தின் மூலம் - அதனை அனைத்துலகச் சட்டங்களுக்கு உள்ளாகும் அனைத்துலகப் பிரச்சனையாக உருவெடுக்க வைக்க எமது மாவீரர்கள்தானே வழிகோலினார்கள்.

அரசற்ற தேசமாக இருக்கும் ஈழத் தமிழர் தேசம் தனக்கென்றதோர் அரசினை அமைத்துக் கொள்வது ஒன்று மட்டுமே நமது தாயகத்தினதும் மக்களதும் இருப்பை உறுதி செய்யும் என்பதனை,

வரலாற்றை வழிகாட்டியாகக் கொண்டு உய்த்துணர்ந்த சுதந்திர வேட்கையுடன்தானே எம் மாவீரர்கள் நமது தாயகத்தை எதிரியிடம் இருந்து மீட்டெடுக்கப் போராடினார்கள்.

எமது மாவீரர்களின் நினைவுகள் தமிழ் மக்களிடம் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும். மாவீரர்கள் எமது மக்களின் கூட்டு நினைவுகளில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். எமது மக்களின் விடுதலை உணர்வுக்கு அவர்கள் கவசமாக இருக்கின்றார்கள்.

மாவீரர்கள் நினைவுகள் எமது மக்களிடம் நிறைந்திருக்கும் வரையில் அவர்களை அடிமை கொள்ள முடியாது என்பதனை எதிரி புரிந்து வைத்திருக்கிறான்.

மாவீரர்கள் நினைவுகள் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும்வரை தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் தனது நோக்கம் நிறைவேறப்போவதில்லை என்பதனை நன்கு அறிந்து வைத்திருக்கிறான்.

மாவீரர்கள் நினைவுகள் அடுத்த தலைமுறைக்குக் காவிச் செல்லப்படுவதனை எப்பாடுபட்டாவது தடுத்து விட வேண்டும் என்பது அவனது திட்டமாக இருக்கிறது.

மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்துத் துவம்சம் செய்ததும், மாவீரர்களுக்கு மக்கள் வணக்கம் செலுத்த விடாது தடைகள் இடுவதும் இந்த நோக்குடனேயே மேற்கோள்ளப்படுகின்றன.

மாவீரர்களின் வரலாற்றையும் ஈகத்தையும் நினைவுகளையும் வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழித்து விட வேண்டும் எனத் துடிப்பதும் இதன்பாற் பட்டுத்தான் நடைபெறுகிறது.

மாவீரர்களைப் பயங்கரவாதிகளாக எதிர்காலத் தமிழர் தலைமுறைக்குச் சித்தரிப்பதே சிங்களத்தின் திட்டமாக இருக்கிறது. தற்போதய தலைமுறைத் தமிழ் மக்களை ஆக்கிரமிப்புக்குள் வைத்திருந்து,

அவர்களை அச்சத்தின் பிடிக்குள் அழுத்தி வைத்திருந்து, மாவீரர்கள் பற்றிய நினைவுகளை போர்க்காலத்தில் வாழ்ந்த மக்களுக்குள் மட்டுப்படுத்தி விட்டால்,

அடுத்த தலைமுறையினருக்கு மாவீரர்களைப் பயங்கரவாதிகள் எனச் சித்தரிக்கும் வகையிலான அரச பாடப்புத்தகங்களை உருவாக்குவதும், அதன்வழி மாவீரர்களைப் பயங்கரவாதிகளாக வரலாற்றில் நிலைநிறுத்துவதும் சாத்தியமானது என சிங்கள இனவாத மூளை சிந்திக்கிறது.

ஓர் ஆயுதம் தாங்கிய குழுவினர் மக்களைக் கொன்றார்கள், தலைவர்களைக் கொன்றார்கள், இனச் சுத்திகரிப்புச் செய்தார்கள், வரி விதித்தார்கள், தமது ஆயுதங்களால் மக்களைப் பயமுறுத்தி கொடுங்கோலாட்சி நடாத்தினார்கள் -

இக் கொடுமையிலிருந்து தமிழ் மக்களை சிங்கள தேசத்தின் படைகள் பெரும் உயிர்த் தியாகம் செய்து மனிதாபிமான அடிப்படையில் அவர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு நல்வாழ்வு வழங்கினார்கள் என - மாவீரர் வரலாற்றை பயங்கரவாதிகளின் வரலாறாகச் சித்தரிக்கும் திட்டம் சிங்களத்திடம் இருக்கிறது.

மகிந்த இராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புப் போருக்கு இராணுவப் பெயர்கள் எதுவும் சூட்டப்படாது மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என இத் தமிழின அழிப்புப் போர் அழைக்கப்பட்டமையினை நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில் இத்தயைதோர் நிலை உருவாகாது தடுக்க வேண்டியது தற்போதய தலைமுறையினராகிய எமது கைகளில்தான் இருக்கிறது.

மாவீரர் வீரங்களையும், ஈகங்களையும் மாவீரர்களின் மனிதத்துவம் நிறைந்த வாழ்வு குறித்த ஆயிரக்கணக்கான உண்மைக் கதைகளையும் உரிய ஆவணங்களாக்குவது தற்போதய தலைமுறையினரின் பொறுப்பாக இருக்கிறது.

இப் பெரும்பணியை ஆற்ற வேண்டிய பெரும் பொறுப்பு நமது தலைமுறையைச் சேர்ந்த அறிஞர்களதும், எழுத்தாளர்களதும், படைப்பாளிகளதும் கைகளில் உள்ளது. தமிழ் மொழியில் மட்டுமன்றி உலகின் முக்கியமான மொழிகளில் எல்லாம் இப் படைப்புகள் வெளிவர வேண்டும்.

ஆய்வுகளாக, வரலாற்று ஆவணங்களாக, வாழ்க்கைக் குறிப்புகளாக, சிறுகதைகளாக, புனைவுகளாக, நாடகங்களாக, திரைப்படங்களாக, கவிதைகளாக, பாடல்களாக, ஓவியங்களாக, புகைப்படங்களாக – என்னென்ன வடிவங்களில் மாவீரர் வாழ்வும் அவர்தம் கனவும் பதிவு செய்யப்பட முடியுமோ,

அந்தந்த வடிவங்களில் எல்லாம் அவற்றைப் பதிவு செய்து நமது அடுத்த தலைமுறையிடம் கையளிக்க வேண்டியது நமது தலைமுறையின் பொறுப்பாகும். இதனை நாம் மாவீரர்களுக்குச் செய்யும் மரியாதை வணக்கத்தின் முக்கிய பகுதியாக நாம் கொள்ள வேண்டும்.

அன்பான மக்களே!

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் தற்போது ஒரு சிக்கலான காலகட்டத்தைச் சந்தித்திருக்கிறது. மாவீரர்களின் வீரத்தாலும், ஈகத்தாலும் கட்டியெழுப்பப்பட்ட தமிழ் மக்களின் தேசிய விடுதலையின் இலக்கைச் சிதைத்து விடும் வகையிலான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.

மகிந்த இராஜபக்சவின் கொடும் கோலாட்சியினை அகற்றவும், தமிழின அழிப்புடனான கொடும் போரைத் தமிழ்மக்கள் மீது ஏவி விட்டமைக்குத் தண்டனை வழங்கவும்,

தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பைக் கொண்டே தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையினை இல்லாதொழிக்கும் வகையிலான செயற்பாடுகளில் சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்கள் இறங்கியுள்ளனர்.

மகிந்த இராஜபக்ச ஆட்சியதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டமையின் ஊடாக சிறிலங்கா அரசு அனைத்துலக ரீதியிலான தனிமைப்படுத்தலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறது.

சிறிலங்காவின் தற்போதய அரசாங்கத்தை உலகின் பலம் மிக்க நாடுகள் ஆதரிக்கின்றன. மகிந்த இராஜபக்சவின் ஆட்சிக்காலத்துடன் ஒப்பிடும்போது குறிப்பாக அமெரிக்க அரசாங்கம் மைத்திரி- ரணில் அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து நிற்கிறது.

இந்தியாவின் ஆதரவும் புதிய ஆட்சியாளர்களுக்கு உண்டு. சீனாவுடனும் நெருக்கடி தராத வகையிலான உறவை புதிய ஆட்சியாளர்கள் பேணிக் கொள்கின்றனர்.

இலங்கைத்தீவில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் வெறுமனே உள்நாட்டில் நடந்த விடயம் அல்ல. இது அனைத்துலக அரங்கில் வகுக்கப் பட்டதொரு திட்டம். இத் திட்டத்தில் சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல தமிழ், முஸ்லீம் தலைவர்களும் பங்காளர்களாக இருந்தார்கள்.

இவ் ஆட்சி மாற்றத் திட்டத்தின் பிரதான நோக்காக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுகளின் நலன்களுக்கும் ஏற்பவே சிறிலங்காவின் வெளிநாட்டுக் கொள்கை அமைய வேண்டும் என்பதில் இந் நாடுகள் கூடுதல் கவனம் செலுத்துகின்றன.

இதற்கு தென்னிலங்கையில் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பது இந் நாடுகளின் நிலைப்பாடாக இருக்கிறது தென்னிங்கையின் கடும் போக்காளர்கள் சிங்கள தேசியவாதத்தை ஆயுதமாகக் கொண்டு தற்போதய ஆட்சியினை வலுவிழக்கச் செய்து விடக் கூடாது என்பதில் இந் நாடுகள் மிகக் கவனமாக இருக்கின்றன.

இதேவேளை மகிந்த இராஜபக்சவினை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக மைத்திரி - ரணில் - சந்திரிகா அணியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களுக்குச் சில வாக்குறுதிகள் வழங்கியிருந்ததாக அறிய முடிகிறது.

இந்த வாக்குறுதிகள் எவை என்பதனை கூட்டமைப்புத் தலைவர்கள் பகிரங்கப்படுத்தாவிடினும்கூட இவை தொடர்பாக செய்திகள் வெளியில் கசிந்த வண்ணம்தான் உள்ளன. இதில் அரசியல் தீர்வு குறித்த விடயம் முக்கியமானது.

2016 ஆம் ஆண்டுக்குள் சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு காணப்படும் என கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தர் அவர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்கு உறுதிமொழி வழங்கியிருந்தார்.

தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பது அங்கீகரிக்கப்பட்டு தேசியம், தாயகம் சுயநிர்ணம் என்று நிலையின்பாற்பட்ட ஒரு சமஸ்டித்தீர்வு என்பதே தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நிலைப்பாடு என நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் சமஸ்டியும் இல்லாத ஒற்றையாட்சியும் இல்லாத ஒரு புதியதோர் அரசியல் அமைப்பை யாத்து அதனையே தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வாகவும் ஏற்றுக் கொள்வதற்கு நாடாளுமன்றத் தேர்தலின் முன்பே கூட்டமைப்புத் தலைமை சம்மதம் வழங்கி விட்டது என்பது தெளிவாகி வருகிறது.

எவ்வாறு அமெரிக்காவால் ஜெனிவாவில் முன்மொழியப்பட்ட நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மான வாக்கியங்கள் அமைந்திருந்தனவோ அதே போன்றதொரு அணுகுமுறையாகத்தான் இதுவும் அமையக் கூடும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைத் தீர்மானம் அடிப்படையில் ஓர் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையினையே பரிந்துரைத்திருந்தது.

அதேவேளை அதனை ஒரு கலப்புப்பொறிமுறை என வாதிடுவதற்கும் இடமளிக்கும் வகையில் சில அம்சங்கள் புகுத்தப்பட்டிருந்தன. இதே போன்று ஆக்கப்படும் புதிய அரசியலமைப்பும் ஒற்றையாட்சி என்பதனை வெளிப்படையாகக் கூறாது விடினும் அடிப்படையில் ஒந்றையாட்சி அரசியல் அமைப்பாகவே அது இருக்கும்.

மத்தியில் இருந்து மேற்கொள்ளப்படும் சில அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளைக் குறிப்பிட்டு இதுவும் சமஸ்டிதான் என வாதிடுவதற்கும் இந்த அரசியலமைப்பு இடம் தரக் கூடும். இங்கு தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதோ,

வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதோ, தமிழ் மக்களுக்கு இயல்பான சுயநிர்ணய உரிமை உள்ளது என்பதோ சிங்களத்தால் அங்கீகரிக்கப்படப் போவதில்லை.

இத்தகைய அங்கீகாரம் இல்லாத எந்த அரசியல் ஏற்பாடுகளும் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை.

இவ்விடத்தில் மாவீரர் கனவுகள் குறித்து நாம் கவனம் கொள்ள வேண்டும். மாவீரர்களின் ஆன்மா அமைதியாக உறங்குவதற்கு ஏற்ற வகையில் நமது அரசியற் செயற்பாடுகள் அமைய வேண்டும்.

மாவீரர்கள் எம்மிடம் வேண்டுவதெல்லாம் இலட்சிய அரசியல் செய்யுங்கள் என்பதுதான். இங்கு இலட்சிய அரசியல் என்பது ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதற்கும்,

வடகிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரியத் தாயகம் என்பதற்கும் நாம் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் என்பதற்கும் அங்கீகாரம் தேடும் வகையில் எமது அரசியற் செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதும் இவ் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண உழைத்தலுமாகத்தான் இருக்க முடியும்.

மாவீரர் நமக்கு விட்டுச் சென்ற இந்த அடிப்படைகளை நாம் கைவிட முடியாது. அவற்றை ஒரு தார்மீகக் கடமையாக ஏற்றுப் பின்பற்ற வேண்டிய பொறுப்பு தமிழரது அரசியற் தலைமைகளுக்கு உண்டு.

இந் நிலைப்பாடுகள் தொடர்பாக எமது தலைவர்கள் உண்மையுடன் செயற்பட வேண்டும். தேர்தல் காலக் கோசமாக மட்டும் இவை அமையக் கூடாது.

நாம் மாவீரர்களை நினைவு கூருதல் உணர்வுபூர்வமாக மட்டும் அமைந்தால் போதாது. அது அரசியல் ரீதியிலும்; அமைய வேண்டும். எமது மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தன்னுயிர் ஈந்தவர் என்பதற்காக மட்டும் செலுத்தும் வணக்கமாக அமையாமல் அவர் என்ன நோக்கத்துக்காக உயிர் ஈகம் செய்தார்கள் என்பதனை எண்ணிப் பார்த்துச் செய்யும் அரசியல்ரீதியான வணக்கமாகவும் அமைய வேண்டும்.

தோழர்களே!

எம் அரிய மாவீரர்கள் எமது சொந்த மண்ணின் விடிவுக்காகவே போராடினார்கள். வேறு எவரது தாயகத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கு அவர்களிடம் துளியளவும் இருந்ததில்லை. இனச் சுத்திகரிப்பு எண்ணம் அவர்களிடம் என்றும் இருந்ததில்லை.

சிங்கள தேசத்தின் இருப்பை மாவீரர்கள் அங்கீகரித்தார்கள். முஸ்லீம் மக்களுடன் ஓர் இணக்கமான அரசியல் உடன்பாட்டுக்கு வருவதையே அவர்கள் விரும்பினார்கள்.

வடகிழக்கு நிலப் பரப்பு முஸ்லீம் மக்களினதும் தாயகம் என்றே அவர்கள் கருதினார்கள். போர்க்காலத்தில் முஸ்லீம் மக்களை வெளியேற்ற வேண்டிய நிiலை ஏற்பட்டமை குறித்து மனம் வருந்தினார்கள்.

மாவீரர் கனவுகளை நனவாக்குவதற்கு எம்மால் முடிந்த அனைத்துக் கருமங்களையும் நாம் ஆற்ற வேண்டும். நமது உடனடிப்பணி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் குறித்து சிறிலங்கா முன்னெடுக்கும் நடவடிக்கைகளைக் கண்காணித்து அனைத்துலக நீதி விசாரணைக் கோரிக்கையினை வலுப்படுத்துதலாக இன்று இருக்கிறது.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழீழம் என்ற நிலைப்பாட்டையும் உள்ளடக்கிய ஒரு மக்கள் வாக்கெடுப்பின் ஊடாகவே அரசியல் தீர்வு காணப்படவேண்டும் எனும் நிலைப்பாட்டுக்கு ஆதரவுத்தளத்தை விரிவு படுத்தி அதற்காக உழைப்பதும் நமக்குரிய மற்றைய உடனடிப்பணியாக அமைகிறது.

அத்தகைய நிலைப்பாடு ஒன்றே எமது தேசியப் பிரச்சனை தொடர்பாக உண்மையான ஜனநாயகத்தின் பாற்பட்டதாக அமைய முடியும்.

மாவீரர் தம் நினைவுகள் எமது பணிகளுக்;கு உத்வேகம் அளிப்பதாக! தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments