Latest News

November 19, 2015

சுமந்திரனின் நடவடிக்கை பச்சோந்தித்தனத்தை எடுத்துக்காட்டுகிறது – வீ. ஆனந்தசங்கரி
by Unknown - 0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் நடவடிக்கையால் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் நிரந்தரத் தீர்விற்கும் வழி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளதாக வீ. ஆனந்தசங்கரி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் போராட்டம், துன்ப துயரம் சூழ்ந்த வாழ்க்கை வரலாற்றைக் கடுகளவும் அறியாத, கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்திய சுமந்திரனின் நடவடிக்கைகள், பச்சோந்தித் தனத்தை எடுத்துக் காட்டுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்தகாலத்தில்,வேலைவெட்டி இல்லாத இளைஞர்களே ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்ததாகவும், இராணுவத்தை விட விடுதலைப்புலிகள் அதிகளவு தமிழ் மக்களைக் கொலை செய்தார்கள் எனவும் கூறிய சுமந்திரன் விடுதலைப்புலிகள் மீது விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்ததாகவும் தனது அறிக்கையில் வீ. ஆனந்தசங்கரி குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கருத்துக்களை தெரிவித்தபோது சுமந்திரன் மீது கட்சி நடவடிக்கை எடுத்திருந்தால் அவர் இன்று இவ்வாறு செயற்பட்டிருக்கமாட்டார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலையே என வட மாகாண சபையின் தீர்மானத்திற்கு எதிராக சுமந்திரன் கருத்துக்களைக் கூறியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், விடுலைப் புலிகளின் காலத்தில் நடந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றத்தை இனச் சுத்திகரிப்பு என்று கூறி ஒட்டு மொத்த தமிழ் மக்களும் மன்னிப்பு கேட்க வேண்டும் என சுமந்திரன் ஆணித்தரமாகக் கூறுவதாகவும்
வீ. ஆனந்தசங்கரி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சரை தனிப்பட்ட தமிழரசு கட்சி மட்டும் தெரிவு செய்யவில்லை எனவும் பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒத்துழைப்புடன் பொது வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் களம் இறக்கப்பட்டு வெற்றிபெற்றதாகவும் அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமந்திரன் போன்ற வேட்பாளர்களை வெல்லவைப்பதற்காக அவர் மீண்டும் பதவி சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக நிதி வசூல் செய்யக் கேட்ட பொழுது முதலமைச்சர் மறுப்புத் தெரிவித்தமை எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காக புலம்பெயர்ந்த தமிழர்களால் சுமந்திரனிடம் வழங்கப்பட்ட பெருந்தொகையான பணத்திற்கு இதுவரை கணக்கு இல்லை என தெரிவித்துள்ள வீ. ஆனந்தசங்கரி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்விதமான உதவிகளும் போய்ச் சேரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.



« PREV
NEXT »

No comments