சுனாமியால் பாதிக்கப்பட்ட மருதமுனையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவருக்கு மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் வீடு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்குமாறு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டு கல்முனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்மணி தாக்கல் செய்த உறுதிகேள் எழுத்தாணை வழக்கு விசாரணைக்கென பிரதம நீதியரசரால் நியமனம் செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குறித்த முஸ்லிம் பெண்ணுக்கு வீடு ஒன்றைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்காக அம்பாறைக் கச்சேரியால் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதுடன் அதில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ரூபாவும் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வீடு திருத்தப்படவில்லையென்ற காரணத்தால் மிகுதித் தொகை வழங்கப்படாது நிறுத்தப்பட்டது.
இக்காலகட்டத்தில் மருதமுனையில் மீரிகாவத்தையெனும் பெயரில் சுனாமி வீடமைப்புத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டதால், இதில் பாதிக்கப்பட்ட தனக்கு ஒரு வீட்டைத் தருமாறும், வீடு திருத்தவெனத்தரப்பட்ட ஒருஇலட்சத்து பத்தாயிரம் ரூபாவையும் தான் திருப்பித்தருவதாகவும் குறித்த பெண் அரச அதிபருக்கு செய்தவிண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தனது வீடமைப்பு விடயத்தில் விடுத்திருந்த கட்டளையை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பிக்குமாறும் தனக்கு மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் ஒரு வீட்டை வழங்குமாறும் அரசாங்க அதிபருக்கு உத்தரவிடுமாறும் கோரி குறித்த பெண் கல்முனை மேல் நீதிமன்றத்தில் உறுதிகேள் எழுத்தாணை வழக்கு ஒன்றை தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வந்தது.
முன்னர் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் பிரதம நீதியரசரின் விசேட நியமனத்தின் பேரில் இந்த வழக்கு விசாரணைக்கென நியமிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கினார்.
அகில உலக பொருளாதார சமூக, கலாசார மனித உரிமைகள் சட்டத்தை 1980 இல் இலங்கை ஏற்றுள்ளதுடன், அதில் 11 ஆவது சரத்து வீடமைப்புத் திட்டங்கள் குறித்த உரிமைகள் பற்றிக் கூறுகின்றது எனத் தீர்ப்பின் போது தெரிவித்த நீதிபதி இளஞ்செழியன்,
இலங்கை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமமான நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
குறித்த பெண் சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவரது விடயத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் தீர்மானம் இயற்கை நீதி கோட்பாட்டிற்கு முரணானது, சர்வதேச சட்டத்துக்கு முரணானது எனவும் சுட்டிக் காட்டிய நீதிபதி இளஞ்செழியன்,
மருதமுனை சுனாமி வீடமைப்புத் திட்டத்தில் குறித்த முஸ்லிம் பெண்மணிக்கு வீடு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்குமாறு அரசாங்க அதிபருக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
அதேவேளை, குறிப்பிட்ட பெண் தான் பெற்றுக் கொண்ட 1 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவையும் திருப்பிச் செலுத்த வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்தார்.
No comments
Post a Comment