Latest News

October 25, 2015

சுவிஸில் நடைபெற்ற தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வு
by அகலினியன் - 0

சுவிஸில் நடைபெற்ற தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வு        

தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவு மகளிர் பொறுப்பாளர் தமிழினி அவர்களின் கண்ணீர் வணக்க நிகழ்வு சுவிஸில் சப்கவுசன் மாநிலத்தில் உள்ள கிரேப்ஸ்பாக்கில் அமைந்திருக்கும் தமிழர் இல்லக் கட்டிடத்தில் நேற்று 24.10.2015 சனிக்கிழமை 6:30 மணியளவில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 

இந்த நிகழ்வினை சுவிஸ் சப்கவுசன் மாநிலத்தைச் சேர்ந்த மில்லர் விளையாட்டுக்கழகத்தினர் ஒழுங்கு செய்திருந்தனர். 

இந்நிகழ்வில் சிறியவர்கள் உட்பட பெரியோர்கள் என பலர் கலந்து கொண்டனர். 

மில்லர் விளையாட்டுக்கழக தலைவர் அனந்தன் தலைமையில் இந்நிகழ்வு இடம் பெற்றது. மில்லர் அணி உறுப்பினரும் மாவீரரின் சகோதரருமான ரஞ்சித் அவர்களும், சப்கவுசன் மாநிலத்தில் இருக்கும் மாவீரரின் சகோதரருமான முகுந்தன் அவர்களும் ஈகைச்சுடரினை ஏற்றி அக வணக்கம் செலுத்தினார். 

அகவணக்கத்தை தொடர்ந்து பொதுமக்கள் தமிழினியின் திருவுவப்படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினர். தமிழினியின் போராட்ட வேகமும், இறுதியில் பட்ட துன்பங்களையும் மிக அழகான கவிதைகள் மூலம் மில்லர் அணி உறுப்பினர்களான கஜன், தனஞ்சன், டெனீஸ் ஆகியோரினால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து மில்லர் விளையாட்டுக்கழக போசகர் அன்பரசன் அவர்கள் முடிவுரையில். "தமிழீழ விடுதலைப்புலிகள் மகளிர் அரியல்துறை பொறுப்பாளர் தமிழினியின் வருகையின் பின்பே தமிழீழப்பெண்களின் போராட்ட எழுச்சி வேகம் பெற்றது என்றும்.  தமிழ்த்தேசியத்தை அவர் ஆழமாக நேசித்ததின் வெளிப்பாடே இன்று எல்லோர் மனங்களிலும் இருக்கின்றார் எனவும், தமிழினியின் மரணம் எமது இலட்சிய வழியில் இருந்து தடம் மாறுபவர்களுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது எனவும், தமிழீழ தேசத்தில் எந்த அச்சமும் இல்லாமல் இறுதி நிகழ்வில் திரண்ட ஆயிரக்கணக்கானவர்களைப் பார்க்கும் போது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எம் மாசற்ற மாவீரர்களை மக்களின் மனங்களில் இருந்து யாராலும் அகற்றிவிட முடியாது"  என்பதையும் எடுத்துச் சொல்லி தன் உரையை நிறைவு செய்தார். 

தொடர்ந்து அனந்தன் அவர்களால் இவ்வணக்க நிகழ்வுகள் யாவும் நிறைவு செய்யப்பட்டது.

















« PREV
NEXT »

No comments