Latest News

October 05, 2015

ஆசிரியர்களின் பணி எமது இனத்தின் பாரம்பரியத்தை காத்துவருகின்றது-வாழ்த்துச்செய்தியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்
by admin - 0ஆசிரியர்களின் பணி எமது இனத்தின் பாரம்பரியத்தை காத்துவருகின்றது-வாழ்த்துச்செய்தியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்

உலக ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்களின் பணியினை மேன்மைப்படுத்தி யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் வாழத்துச்செய்தியை வெளியிட்டுள்ளார் அவர் தனது செய்தியில்

இன்று உலக ஆசிரியர் நாள். உலகளாவிய ரீதியில் அகிலத்தை நெறிப்படுத்தி, ஆற்றுப்படுத்துகின்ற  அற்புதமான வழிகாட்டிகளை மதித்துப் போற்றுகின்ற புனிதமான நாள் இன்றாகும்.  அத்தகைய சர்வதேச நாள் ஒன்றிலே எங்கள் தேசத்தின் ஆசிரிய பெருந்தகைகளை நெஞ்சார  வாழ்த்தி மரியாதை செய்வதற்கு கிடைத்த இந்த பாக்கியத்துக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.

நிலைமாறு காலத்திற்கேற்ப கல்வியையும் அதனோடு இணைந்த விழுமியங்களையும் வழங்குவது சவால் நிறைந்த பணியாகும். கல்விச் சீர்திருத்தங்களும். கல்வி நிர்வாகத்தின் முகாமைத்துவ மாற்றங்களும் பல்வேறு சுமைகளை உஙகள் மீது தந்திருக்கின்றது. அத்தனையையும் சுமந்து கொண்டவர்களாக எமது சமூக அசைவியக்கத்துக்கு வழிகாட்டுகின்ற  நீங்கள் ஆற்றுகின்ற பணி மெச்சத்தகுந்ததாகும்.

நவீன மாணவ உலகின் உளக்கோலங்களை இனங்கண்டு அவர்களின் சீர்மிய சிறப்புக்காக நீங்கள் புரிகின்ற பணி அபாரமானது. ஆசிரிய உள்ளம் உறக்கத்தின்போதும் செயற்படுகின்ற இதயம் என்று அறிஞர் பிராய்ட் தெரிவித்த  கருத்தின் உண்மை வடிவமாக நீங்கள் இருக்கின்றீர்கள். இன்றைய கற்பித்தல் கற்றல் செயற்பாடுகள், மகிழ்ச்சிகரமான மனநிலைகளையும் தாண்டி நெருடல்களையும், அழுத்தங்களையும் ஏற்படுத்தவே செய்கின்றது. 

நெருக்கீடுகளைக் கொண்டிருக்கின்ற எந்தக்கல்வி முறையும் சுதந்திரமான சமூகத்தை உருவாக்க வழி விடுவதில்லை. எனவே தான் சுதந்திரமானதும், எமது தேசத்திற்குரித்தான கல்வி முறையையும், அதனைச் செயற்படுத்து வதற்கான ஆட்சியுரிமையையும் வேண்டி நாம் போராடி வருகின்றோம். இவ்விடத்தில் ஈ.வெ.ரா.பெரியார் அவர்களின் சிந்தனை ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். “கல்வி ஒன்றைப் பெறுவதனால் கௌரவமும், தொழில் வளமும் ஒருவனைச் சென்றடையக்கூடும். ஆனால் தன்மானமும், சுயமரியாதையும் அதனோடு இணைத்து ஊட்டப்படாத கல்வி முறையால் அந்தச் சமூகம் நிலைபேறு அடையமுடியாது” என்பதே அதுவாகும்.
அது மாத்திரமன்றி எமது தேசத்தில் பல்வேறு உளநெருக்கீடுகளுக்கு மத்தியில்  கற்கின்ற பிள்ளைகளிடையே கற்பித்தல் என்பது சாதாரணமானது அல்ல.

  அத்தகைய இடர் மிகு புலச்சூழல் எம்மண்ணில் காணப்டுகின்ற போதும் அர்பணிப்பும், ஆளுமையும் மிக்க தங்களின் பணி எமது இனத்தின் கல்விப் பாரம் பரியத்தை மெருகூட்டி, காத்து வருகின்றது  மேஜர் ரூ. பின்ஸ் எனும் அறிஞர் தெரிவிப்பது போல அறிவு, திறன், தேடல் என்பவற்றுக்கு அப்பால் பொறுப்புச் சொல்லும் சமூகமாக நவீன கல்வித்துறையில் ஆசிரிய சமூகம் மாறியிருப்பது மகிழ்ச்சியைத் தருகின்றது.
எத்தகைய எதிர்மறை எண்ணங்களுமின்றி சமூக நேசிப்போடு தாங்கள் ஆற்றுகின்ற பணி எங்கள் தேசத்தை பெருமையடையச் செய்கிறது.  அத்தகைய உயர் பணியை ஆற்றி இன்று உலக ஆசிரிய தினத்தை கொண்டாடும் உங்களுக்கு எங்களுடைய பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம் என தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments