பெண்விடுதலையை வெண்றெடுப்பதற்குப் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மட்டும்போதாது. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்களுக்கான குறைபாடு மட்டுமல்ல. இது ஒரு சமூகக் குறைபாடே. இதற்குப் பாத்திரமானவர்களும், பாதிப்படைவர்களும் பெண்கள் மாத்திரமல்ல. எனவே பெண்விடுதலையை முன்னெடுப்பதில் முழுச்சமூகமும், அரசும் கூட செயற்பட வேண்டும். சமூகம் என்கின்ற போது தனிநபர்களும், பல துறைசார்ந்தவர்களும், நிறுவனங்களும் அடங்கும். ஊடகவியலாளர்கள், கலை இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் என பல தரப்பட்டவர்களின் பங்களிப்பும் அவசியம்.
வாசற்கதவு திறந்திருக்கிறது ஆனால் இங்கே யாருமே வருகிறார்களில்லை. பெண்விடுதலையை மீட்டெடுக்க! இதுதான் இன்றைய பெண்ணிய செயற்பாட்டு நிலை என்றால் அது தவறான கூற்றாகாது. பெண்ணுரிமை அமைப்புக்கள் புற்றீசல்போல் உருவான அளவுக்கு அவற்றின் செயற்பாடுகள் துரிதமாக எடுத்துச் செல்ல முடியாமைக்குப் பரவலான முயலாமையை முதற்காரணமாகக் கூறமுடியும். அடுத்த அம்சமாக இத்தேக்கத்திற்கான காரணம் ஆண்கள் உள்வாங்காத அல்லது முழுமையாக ஈர்க்கப் படாமையும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியமையையும் குறிப்பிடலாம்.
பெண்ணுரிமை இயக்கங்களின் மலர்தலுக்குப் பின் பெண்கள் வாழ்நிலையிலும் சில மலர்வுகள் ஏற்பட்டுத்தானுள்ளன. கல்வி, வேலைவாய்பு, வாழ்க்கைத்தரம் என்பவற்றின் உயர்வோடு, புதிய தலை முறை பெண்களிடையே பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளமை சாதகமான பலாபலன்கள். ஆனால் தொலை நோக்குடன் பெண்விடுதலை நடவடிக்கைகளைத் திட்டமிடாமல் போனதால் சில எதிர்வினைகளும் ஏற்பட்டிருக்கின்றன. பாற்கடலைக் கடைந்தபோது அமிர்தமும், நஞ்சும் தோன்றினபோல் பெண்டுணுரிமை இயக்கங்களின் செயற்பாடுகளினாலும் நன்மை, தீமை இரண்டுமே ஏற்பட்டுள்ளன என்பார்.
உலகமயமாதலில் எல்லாமே மேற்கத்தைய நாடுகளிலிருந்து இறக்குமதியாவது போல் பெண்ணியச் சிந்தனைகளும் அச்சொட்டாக எதுவித மாற்றமுமின்றி இங்கும் இறக்குமதியாகி செயலுருவம் பெற முயன்றமையே இப்பின்னடைவுக்கும், தேக்க நிலைக்கும் காரணமென சிலர் கூறுவர். இதை மறுத்து நிற்கும் வேறு சிலர் இது வெறும் ஆணாதிக்கக் கூற்று என்று வாதிடுகின்றனர்.
இன்று உலகில் மிகப்பரவலாக பெண்ணுரிமை வாதமும், அதன் சட்டதிட்டங்களும் விவாதிக்கப்படுகின்றன. பால்நிலைச் சமத்துவம் பற்றிய கருத்தாடல்கள் பரவலாகி வருகின்றமை ஆரோக்கியமான சூழ்நிலை தான். ஏனெனில் பல்நிலைச் சமத்துவம் என்பதை ஏற்றுக்கொள்ளல் என்பது இன்னமும் இறுக்கமாகவே நிற்கின்றது. பெண்கள் வாழ்வில் நிதர்சனமாகவுள்ள அடிமைத்தனமும், சமத்துவமின்மையும் ஆண்களால் மட்டுமன்றி இன்னமும் கூட பல பெண்களாலும் புரிந்து கொள்ளப்படாமை வேதனைக்குரியது. பெண்களின் வாழ்வைப் பின்தள்ளுகின்ற கசப்பான உண்மைகள், அவற்றில் உள்ளிருக்கும் அவலமான துன்பங்கள் மட்டுமன்றி, பெண்ணின் மதிக்கப் படவேண்டிய மகோன்னதங்கள், பெறுமதிகள் என்பவற்றையுமே உணர விடாதபடி மரபு, பண்பாடு, வழமை, சடங்கு சம்பிரதாயங்கள், மதம்சார்ந்த அழுத்தங்கள் திரையிட்டு மூடிநிற்கின்றன.
பொதுவாக இருந்து வருகின்ற தற்போதைய பெண்களின் நிலைமையை மாற்றியமமைக்க விரும்பாமலும், புதிய வீச்சான பார்வைகளை, மதிப்பீடுகளை, செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கி நிற்கின்றபோக்கும் பரவலாக அவதானிக்கப்படுகின்றது. பாமரர்கள் மத்தியில் மாத்திரமன்றி படித்தமேலோர் வட்டத்திலும் கூட பெண்விடுதலை பற்றி சுமூகமாக ஆராய முடியாத நிலை இருக்கின்றது. பெண்ணியச் சிந்தனைகள் பற்றிய கருத்தியல் ரீதியிலான புரிதலுக்கும், தெளிவடைதலுக்கும் தயார் இல்லாத மந்தத் தனமும், ஆர்வமின்மையும் மாத்திரமன்றி இன்னும் சிலர் மத்தியில் வெறுப்பும், பரிகசிப்பும் கூட அவதானிக்கப்படுகிறது. இத்தனைக்கும் மத்தியில் எதரிர்நீச்சல் போட்டுத் தான் பெண்களின் திறமை, ஆற்றல், வெளிப்பாடு, ஆளுமை விருத்தி, பால் சமத்துவம் மற்றும் சுதந்திரம் முதலானவை வெளிப்படுத்தப்படுகின்றன.
இவ்வாறான சிரமமான விளைவுகளுக்கான காரணி எதிரும் புதிருமாக ஆணாதிக்கவாதிகளிடமும், பெண்ணிநிலை வாதிகளிடமும் இருக்கின்றன. ஆண்வர்க்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைத்து, பெண்வர்க்கம் தமது விடுதலைக்குக் குரல் கொடுக்கின்றது. நியாயத்திற்காகக் குரல் கொடுக்கின்ற பெண்கள் தமது நிலையைச் சமூகத்தில் மேம்படுத்துவதை விடுத்து ஆணினத்துடன் மோதிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. இல்லறத்தில் ஒருமித்து ஒத்த கருத்தை எட்ட வேண்டியவர்கள். இரு துருவமாக நின்றால் எதுவும் சீராடையப்போவதில்லை. பதிலாக மோதல்களும், பூசல்களும் வலுத்து எதிரான அம்சங்கள்தான் வலுவடையும். இதுவே இன்றைய நிதர்சனம்.
ஒரு குடும்பத்தில் ஆண், பெண் இருவருக்குமிடையே புரிதலும், பகிர்தலும் இருந்துவிட்டால் சுதந்திரத்தின் பாதைகள் தானாகவே திறக்கும். இதை ஏற்றுக்கொண்டு குடும்பத்திலும், சமூகத்திலும் இருபாலரும் தமக்குரிய பொறுப்புக்களை உதறித் தள்ளாமல் அதேசமயம் சுயமாக இருக்கும் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். பெண்ணின் கல்வியும், பொருளாதார நிலைமையும் மேம்படுதல் முதலில் அவசியமானது.
பெண்ணுக்குரிய சொத்துடமையும், அங்கீகாரம் பெறவேண்டியது முக்கியம். சீதனம் என்கிற அரக்கனின் அசூரத் தனமும் களையப்பட வேண்டும். இவ்விடயங்களில் பெண்களுக்கு எதிரான செயற்பாட்டில் பெண்களே செயற்படுகின்ற அவலநிலை முதலில் மாற்றம் காணவேண்டும். நிஐக் குற்றவாளியானது ஆணாதிக்கமே அன்றி, ஆண்வர்க்கம் அல்ல என்ற தெளிவும், புரிதலும் புதிய திட்டவடிவங்களின் அம்சங்களில் உள்ளடக்கப்படல் வேண்டும்.
பெண்ணின் உரிய இடம் நிலைநிறுத்தப்பட்ட வேண்டுமாயின் முதலில் பெண்களின் ஆர்வமும், பங்களிப்பும் புரிதலைத் தொடர்ந்து ஏற்பட வேண்டும். சரியானவற்றை, அவசியமானவற்றை நடைமுறைக்குச் சாத்தியமான வழிகளை இனம் கண்டு செயற்படுவதன் மூலம் பெண்விடுதலையை எட்டுவதில் இணைந்து படிப்படியாக முன்னேறி சவால்களை முறியடித்து உரிய இலக்கை எட்ட முடியும்.
சிறப்பான பெண்ணிய ஆய்வுகளும், விவாதங்களும் வினைத்திறனான செயற்பாடுகளும், பல்கலைக்கழக மற்றும் மேலோர் வட்டப் படிதாண்டி, பரவலாகி, தீங்குறு பிரிவினர் மத்தியில் கொண்டு செல்லப்படுதல் காலத்தின் தேவையாகும். ஊடகங்களாலும், கலை இலக்கியங்களாலும் சாமனியர்களை அணுகும் அதேவேளை நேரில் சென்று அழைப்புக்களைப் பரவலாக ஏற்படுத்தி செயலாக்கம் பெறுவது முக்கியமாகும்.
இச்செயற்பாட்டில் ஆண்களையும் இணைத்துச் செயற்படவேண்டும். காலம்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு இசைவாக்கம் பெற்றுவிட்ட சில மரபுப் பூச்சாண்டிகளும், பண்பாட்டுப் போலிகளும் மறுதலிக்கப்பட வேண்டும். இவ்விலக்கை எட்டுவது இலேசுப்பட்ட காரியமல்ல. துறைமுக அலை (சுனாமி) கணப்பொழுதில் அழித்தது போல் இவற்றைச் சடுதியில் ஏற்படுத்தி விட முடியாது.
பொதுவாகவே இசைவாக்கமுற்று அதன் அடிப்படையில் செயற்படும் ஒரு சமூகத்தில் புதிய மாற்றங்கள் இலகுவில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அதிலும் எதிர்த்து நிற்கும் போது எதிர்ப்புணர்வும், பிரதி அனுகூலமும் ஏற்படும் சாத்தியமும் உள்ளதால் நிதானமான இணைந்த போராட்ட முறைகளே முனைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும். கொல்லன் பட்டறையில் ஊசி விற்பது இலேசுப்பட்ட காரியமல்ல. பெண்ணிய முன்னெடுப்புக்கள் மழையில் உப்பு வித்தது போல் மாறிவிடாமல், கால நேர மனநிலையை அறிந்து வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும். எதிரியுடன் ஆயுதம் தூக்குவது போன்ற காரியங்கள் இங்கு பலனளிக்காது என்பதை பெண்ணிலை வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
தேசத்தைப் பிரித்தெடுத்தால் அது வெற்றி. ஆனால் தேகத்தைப் பிரித்தெடுத்தால் அது குடும்பத்தில் தோல்விதான்! பிரிதலை விட இங்கே புரிதலும், புரியவைத்தலுமே அவசியமாகிறது.
பெண்விடுதலையை வென்றெடுப்பதற்குப் பெண்கள் அமைப்புக்களின் செயற்பாடுகள் மட்டும் போதாது. பெண்ணடிமைத்தனம் என்பது பெண்களுக்கான குறைபாடு மட்டுமல்ல. இரு ஒரு சமூகக் குறைபாடே. இதற்குப் பாத்திரமானவர்களும், பாதிப்படைவர்களும் பெண்கள் மாத்திரமல்ல. உதாரணமாக சகோதரிகளுக்குச் சீதனம் கொடுக்க வேண்டிய இளைஞர்களின் வாழ்வும் பாதிக்கப்படுகின்றதல்லவா?
எனவே பெண்விடுதலையை முன்னெடுப்பதில் முழுச் சமூகமும், அரசும் கூட செயற்பட வேண்டும். சமூகம் என்கின்ற போது தனிநபர்களும்,பலதுறை சார்ந்தவர்களும், நிறுவனங்களும் அடங்கும். ஊடகவியலாளர்கள், கலை இலக்கியவாதிகள், ஆசிரியர்கள் என பலதரப்பட்டவர்களின் பங்களிப்பும் அவசியம்.
எனவே பெண்களுடைய பிரச்சினைகள் என்பது அவர்களது மாத்திரமல்ல அவை சமூகத்தின் பொதுப்பிரச்சினை. சமூக மேம்பாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் ஈடுபாட்டுடன் பங்காற்றினால் தான் பெண்விடுதலையை எட்டமுடியும். இதற்கு அனைவரது பங்களிப்பும் அவசியம். பால் நிலைச் சமத்துவ வழிகாட்டல் பற்றிய பிரக்ஞை எல்லா மட்டத்திலும் ஏற்படுத்தப்பட வேண்டும். செயலூக்கம் பெற வேண்டும்.
குழந்தை வளர்ப்பில் தொடங்கி, பாடசாலையிலும் சமத்துவம் பேனப்படுதலும், போதிக்கப்படுதலும் அவசியமான செயற்பாடாக வேண்டும். பாடத்திட்டங்களிலுள்ள அலகுகளில் ஆணாதிக்க சிந்தனைகள், இனவாதச் சிந்தனைகள் போலவே அகற்றப்பட வேண்டும். குடும்பத்திலும் பண்பாடு, கலாச்சாரம் என்பவை மாறாவிதிகள் அல்ல என்ற புரிதல் ஏற்படுத்தப்படல் வேண்டும். நல்ல மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டும். அடிப்படை அம்சங்கள் சிதைவுறாமலே!
எல்லாவற்றுக்கும் மேலாகப் பெண்களே பெண்களுக்கு மாறாகப் பெண்விடுதலையை மறுத்துச் செயற்படுகின்றமையைக் களையப்பட வேண்டியது அவசரமாதும், அவசியமானதுமான செயற்பாடாகும். சமூகத்தில் மனித உரிமைகள் மதிக்கப்படும் போது பெண் விடுதலையையும் எட்டப்பட்டு விடும். பால் பேதமற்ற மனித நேயமே இன்று தேவைப் படுகின்றது. பால் மோதல் அல்ல!
Quelle - Erimalai
நன்றி- கயல்விழியின் முகநூலிலிருந்து..
No comments
Post a Comment