பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர் பேர்க் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் தொடங்கும் என்று தெரிகின்றது.
கலிபோர்னியாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனர் மிர்சியா வோஸ்கெரிகானுடன் செய்து கொண்ட 17 லட்சம் டொலர் ஒப்பந்தத்தை ஸக்கர் பேர்க் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஏற்க வேண்டாம் என்று ஸக்கர் பேர்க் விடுத்த கோரிக்கையை கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்ஜோஸ் நகர நீதிபதி ஏற்கவில்லை. இருப்பினும் வழக்கு விசாரணை நடைபெறும்போது ஸக்கர் பேர்க்கின் கருத்தை கேட்பதாக தெரிவித்துள்ளார்.
ஸக்கர் பேர்க் மீதான வழக்கு விசாரணை தொடங்கவுள்ள நிலையில் ரியல் எஸ்டேட் நிறுவனர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டேவிட் டிராபர், இந்த வழக்கிலிருந்து தான் விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். வழக்கு தொடர்வதற்கு முன்பு பல கட்டங்களில் ரியல் எஸ்டேட் நிறுவனருக்காக ஆஜரான அவர் தற்போது இதிலிருந்து விலகுவதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.
ரியல் எஸ்டேட் நிறுவனருக்கும் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டேவிட் டிராபருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் விலகிக் கொள்ள முடிவு செய்ததாக ஸக்கர் பேர்க் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் பாட்ரிக் குன் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வியாழக்கிழமை (ஒக்டோபர் 8) நடைபெறவுள்ளது.
ஸக்கர் பேர்க்கின் பாலோ ஆல்டோ வீட்டுக்கு பின் பகுதியில் உள்ள இடத்தை வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையே இதுவாகும். இந்த இடத்தை வோஸ்கெரிகானிடமிருந்து வாங்க ஸக்கர் பேர்க் முடிவு செய்திருந்தார்.
இந்த இடத்தில் 40 % சொத்துரிமையை ஸக்கர் பேர்க்கிற்கு வோஸ்கெரிகான் வழங்கியிருந்தார். இந்தப் பகுதியில் 9,600 சதுர அடி பரப்பில் வீடு கட்டும் திட்டத்தைக் கைவிடுவதென ஒப்புக் கொள்ளப்பட்டது. அதேசமயம் ரியல் எஸ்டேட் நிறுவனருக்கு தான் பலரை அறிமுகப்படுத்துவதாகக் கூறியிருந்தார். ஆனால் அதை மார்க் ஸக்கர் பேர்க் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வாய்மொழி உறுதியெல்லாம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது. எழுத்து பூர்வமாக இருந்தால் மட்டுமே நீதிமன்றம் ஏற்கும் என்று ஸக்கர் பேர்க் தரப்பு வழக்கறிஞர் பாட்ரிக் குன் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment